Header Ads



ரவியை தேடி 4 சிறப்புக் குழுக்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட  10 நபர்களை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தர்வு பிறப்பித்து 48 மணி நேரமும் கடந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவரைத் தவிர ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்ய சி.ஐ.டி.யால் முடியாமல் போயுள்ளது.  

குறிப்பாக 2 ஆம்  சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க, 4 ஆம் சந்தேக நபரான பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை கைது செய்ய 4 சிறப்புக் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அவர்கள் இருக்கும் இடத்தை கூட சி.ஐ.டி.யால் கண்டறிய முடியவில்லை.

எனினும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்கும் சுமார் 3 தடவைகள் சி.ஐ.டி. ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்றம் அருகே உள்ள பத்தரமுல்லை- ரஜமல்வத்த பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோதும், அவர் அங்கு இல்லாமையால் வெறுங்கையுடன்  திரும்பியிருந்தது. 

இன்று முற்பகலும் அங்கு சென்ற சி.ஐ.டி. சிறப்புக் குழு, சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்த சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதனிடையே  இவ்விவகாரத்தில் கைது செய்ய தேடப்பட்டு வரும்  4 ஆம் சந்தேக நபரான பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸை தேடியும் சி.ஐ.டி.குழுவினர் கொழும்பு 7, இல் உள்ள அவரது வீட்டுக்கு சென்றிருந்தனர். 

எனினும்   நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கடந்த வெள்ளி இரவு முதல் அவ்வீட்டில் மின் குமிழ்கள் கூட அணைக்கப்பட்டுள்ளதாவும், அங்கு அவர் இருக்கவில்லை எனவும்  சி.ஐ.டி.யினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.