Header Ads



VOG யாக வேண்டுமென்பது என் இலட்சியம், மரபணு பொறியியலாளராக வரவேண்டும் என்பது ஆசை - பாத்திமா ஷைரீன்

மருத்துவம், பொறியியல் இரண்டிலும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதே தனது எதிர்கால இலட்சியமாகும் என்று இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி இனாம் மௌலானா பாத்திமா ஷைரீன் தெரிவிக்கின்றார். அவரது சாதனை குறித்து  அறிய அவரைச்  சந்தித்தோம்.

உங்களை பற்றி அறிமுகம் செய்யுங்களேன்? 

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியை சேர்ந்த இனாமுல்லாஹ் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வியான எனக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார். அவர் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகிறார்.  நிந்தவூர் லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்ற நான் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சி போட்டி பற்றி கூறுங்கள்? 

இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டி நடைபெற்றது. இது இந்தோனேஷியாவில் சர்வதேச அளவில் இடம்பெறும் மாபெரும் போட்டியாக கருதப்படுகிறது. எமது நாட்டில் இருந்து நான் மட்டுமே பங்குபற்றியிருந்தேன் . சுமார் 25 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 400 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 20 பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன. இவற்றுள் எனக்கு புவியியல் தொடர்பான போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது.  

இப்போட்டிக்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டிர்கள்?  

பாடசாலை ரீதியாக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொறியியல் நிறுவனத்தில் துறைசார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் கொழும்பில் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் கொங்க்ரீட் கட்டிடங்களினால் புவியில் ஏற்படும் வெப்பத்தாக்கம் தொடர்பில் நான் சமர்ப்பித்த ஆய்வு முன்னிலை பெற்றது. இதுவே இந்தோனேஷியாவில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 

பாடசாலையில் கல்வி கற்கும் நீங்கள் வேறு போட்டிகளில் பங்குபற்றியிருப்பின் அவை பற்றி கூறுங்கள்? 

தரம்-06 தொடக்கம் பாடசாலை ரீதியாக இடம்பெறுகின்ற தமிழ் தினம், ஆங்கில தினம், மீலாதுந் நபி விழா உட்பட அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றேன். கடந்த காலங்களில் மாகாண, தேசிய மட்டங்களில் முதலிடம் பெற்றுள்ளேன்.  குறிப்பாக 2019ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியிலும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக் கொண்டேன்.   

உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன? 

எதிர்காலத்தில் ஒரு மகப்பேறு வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும். அது மட்டுமல்லாமல் மரபணு பொறியியலாளராக வர வேண்டும் என்ற ஆசையும் எனக்குண்டு. இவ்விரண்டு துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும் என விரும்புகிறேன்.  அத்துடன் நான் இறங்கியுள்ள ஆராய்ச்சி துறையில் தொடர்ந்தும் பயணத்தை தொடர விரும்புகிறேன். தற்போது புவியியல் ஆய்வுத்துறையில் வெற்றி கண்டுள்ளேன். புவியியல் வெப்ப ஆராய்ச்சியின் போது கிடைக்கப்பெற்ற தீர்வை இலங்கை முழுவதும் நடைமுறைபடுத்த வேண்டுமென விரும்புகிறேன். மருத்துவ துறையிலும் ஓர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற திட்டமும் இருக்கிறது.  எனது ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சையி§ பின்னர் இம்முயற்சிகள் அனைத்திலும் முழுமையாக களமிறங்க எண்ணியுள்ளேன் . 

இவ்வாறான திறமைகளை ஏனைய மாணவர்களும் அடைவதற்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன? 

முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. இவ்வாறான போட்டிகளில் அனைத்து மாணவர்களும் பங்குபற்ற வேண்டும். அவ்வாறு பங்குபற்றும்போது நம் நாடு தொழிநுட்ப ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் வளர்ச்சியடைந்த நாடாக மாறும். முதலாம் நிலை நாடுகளில்   ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அவ்வாறான நிலை எமது நாட்டில் மிகவும் குறைவாகவே  உள்ளமை கவலைக்குரியது.  ஆகவே பாடசாலை மட்டத்திலே இதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அத்துடன் போதிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். இதன் மூலம் என்னைப்போன்ற பல திறமை வாய்ந்த மாணவர்கள் சர்வதேச ரீதியாக பிரகாசிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும்.  அது மட்டுல்லாமல் சமுகத்தில் காணப்படும் விஞ்ஞான ரீதியான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமான ஆற்றல் மாணவர்களிடையே காணப்படும். எமது நாட்டிலே நாம் உற்பத்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. இதனை இலகுவாகவும் குறைந்த செலவுடன் நாம் கொண்டு செல்ல முயற்சிக்க முடியும். ஆகவே இதனை பாடசாலை மட்டத்திலும் நடைமுறைப்படுத்தி, ஊக்குவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 

உங்கள் ஆராய்ச்சி முயற்சி சர்வதேச மட்டத்தில் முதலிடம் பெறுவதற்கு பின்னணியாக இருந்தோர் பற்றி கூறுங்கள்? 

முதலில் என்னை படைத்த இறைவனுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். பின்னர் எனது பெற்றோருக்கும் எனது பிரதான மேற்பார்வையாளரான தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி அதிகாரத்துக்கும் எனது கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன், பிரதி அதிபர் நதீரா, எனது வகுப்பாசிரியர் ஸரியா மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் ஜூவைரியா, றியாஸ் ஆசிரியர், இருமொழி கற்கைப்பிரிவு இணைப்பாளர் பாறுக் உட்பட ஏனைய ஆசிரியர்களுக்கும் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்கு உதவிய அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.  இணைப்பாட விதான செயற்பாடுகளில் அதிக நேரம் செலவிடுகின்ற உங்களுக்கு பாடசாலைக் கல்வியில் பின்னடைவு ஏற்படவில்லையா?  நிச்சயமாக இல்லை. கடந்த 2012ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளேன். இந்த விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் தேசிய மட்டத்திலான இறுதிச் சுற்றுப்போட்டி 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதற்கான தயார்படுத்தல்களை செய்து கொண்டுதான் அதே மாதம் ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சை எழுதி 09 ஏ சித்திகளைப் பெற்றிருக்கிறேன். ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் எனது படிப்புக்கு சவாலாக அமையவில்லை. 

நேர்காணல்: எம்.ஐ.சம்சுதீன், எம்.என்.எம்.அப்ராஸ்   

2 comments:

  1. Ma sha allah..mah you reach your best and achieve your goals with ease..you made us proud..

    ReplyDelete
  2. Ma sha allah..may you reach your best and achieve your goals with ease..you made us proud..

    ReplyDelete

Powered by Blogger.