Header Ads



கொரோனா வைரஸ்,, இலங்கையில் தற்காப்பு மையம் ஒன்றை நிறுவவேண்டும்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீன பெண் ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் ஆய்வகத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுகிறார்.

அவர் குறித்து மேற்கொள்ளப்பட்ட உயிரியல் மாதிரி பரிசோதனை அறிக்கை, ஆய்வுக்காக ஹொங்கொங்கிற்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகர மக்களுக்கு 600 கிலோகிராம் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர், கடந்த தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது, அந்தத் தேயிலையின் ஒரு தொகுதி முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, எஞ்சிய தேயிலை பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் ஊடாக, வுஹான் நகர மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸினால் இலங்கைக்கு தாக்கம் இல்லாவிட்டாலும், அது தொடர்பில் எச்சரிக்கை நிலைமையை விலக்கிக்கொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் பிரதான செயலாளரான மருத்துவ ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று பரவுகின்றமையினால், தற்காப்பு மையம் ஒன்றை இலங்கையில் உடனடியாக நிறுவவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.