Header Ads



கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்கும் செயற்பாட்டில், பலமான சக்தியாக விமல் வீரவங்ச இருந்தார் - மஹிந்த

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்சவின் பாராளுமன்ற வாழ்வின் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று (22) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற விழாவில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் கலந்துகொண்டனர். 

“20 வருட வீரவங்ச” எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் விமல் வீரவங்சவின் அரசியல் வாழ்க்கை பற்றி இசுறு பிரசங்க அவர்களினால் எழுதப்பட்ட “விமல் – யுககாரகத்வயே பூமிகாவ”   (விமல் - யுகங்களின் பங்கு) எனும் நூல் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. 

நாட்டை தீவிரவாதத்திலிருந்து மீட்டெடுத்தல், அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லல் மற்றும் நாட்டின் கௌரவத்திற்காக முன்னிற்றல் போன்ற விடயங்களில் தான் மற்றும் வீரவங்ச முகங்கொடுத்த சவால்கள், பிரச்சினைகள் பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்தார். 

கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பெரும்பான்மை விருப்பத்தின்பேரில் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் வரையிலான செயற்பாட்டில் தடைகளை வெற்றிகொண்டு கடந்துவந்த பாதையில் ஒரு பலமான சக்தியாக விமல் வீரவங்ச இருந்தார் என பிரதமர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார். 

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச, நாடு அரசை இழக்கும் ஆபத்திற்குள்ளான சந்தர்ப்பத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நாட்டின் தலைவராக்க முடிந்ததாக குறிப்பிட்டார். 

களனி பல்கலைக்கழகத்தின் கலாசார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சங்கைக்குரிய இதுராகாரே தம்மரத்தன தேரர், மற்றும் தொல்பொருள் பட்டபின்படிப்பு கல்வி நிலையத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் விசேட உரையாற்றினர் 

அமைச்சர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.