February 28, 2020

வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள் இடம்பெயரும் அவலம், இந்துத்வா கும்பலுக்கு எதிராக நாடுமுழுவதும் கண்டனம்


டெல்லி வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் முஸ்லிம் மக்களை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் கடந்த மூன்று நாட்களாக நடத்திய கொடூர வன்முறை வெறியாட்டத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாபராபாத், மாஜ்பூர், சந்த்பாக், கோகுல்புரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெல்லி காவல்துறையினரின் உதவியோடு ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வியாழனன்று மாலை நிலவரப்படி, குரு தேஜ்பகதூர் மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகள் வெளியிட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருவரும், ஜே.பி.சி மருத்துவனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குருதேஜ்பகதூர் மருத்துவமனையில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை இராணுவப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்த வன்முறையின்போது முஸ்லிம் மக்களின் சொத்துகள், உடமைகள், கடைகள் உள்ளிட்ட அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர். வீடுகளை சூறையாடினர். குழந்தைகள் உட்பட எவரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இதனால் அச்சமடைந்த இஸ்லாமியர்கள் பாதுகாப்பான பகுதிக்கு தஞ்சமடைய டெல்லியில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய இஸ்லாமியர் ஒருவர், “இதுவரை இப்படி ஒரு வன்முறையை நான் பார்த்ததில்லை. திடீரென ஏற்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் உடனே குறி வைத்து வந்தது எங்கள் பகுதிக்குதான்.

நான் நடத்திய தையல் கடை சேதம் என்றார்கள். எதாவது கதவை உடைத்திருப்பார்கள் என்றுதான் நினைந்தேன். ஆனால் நிலைமை கட்டுக்குள் வந்ததும் நேரில் சென்று பார்த்தேன். கடை முற்றிலும் சிதைந்து போய் உள்ளது. எனது வீடும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தினமும் அச்சத்துடன் வாழ முடியாது. பிரிஜ்புரியில் இருந்து வெளியேறுவதுதான் நல்ல முடிவு” என வேதனையுடன் தெரிவித்தார்.

அதேபோல் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உறவினர்கள் இறுதிச்சடங்குக்கு கூட டெல்லிக்கு வர அச்சப்படுவதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர். டெல்லி கலவரத்தில் தந்தையை இழந்த ஷாஹில் என்ற இளைஞர் கூறுகையில், “வன்முறையின்போது என் தந்தை வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். வன்முறையாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் உள்ளே வாருங்கள் என்று எனது தாய் சொல்லிக்கொண்டிருந்த நிமிடத்திலேயே வீட்டின் நுழைவாயில் முன்பாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இரண்டு நாட்களாகியும் குடும்பத்தினரிடம் எனது அப்பாவின் உடல் ஒப்படைக்கப்படவில்லை. உடற்கூறாய்வு, வழக்குப்பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்த பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என்கிறார்கள்.

என்னுடன் ஒன்றாகப் படித்த, என் பகுதியில் வசிக்கும் நண்பர்களே இப்போது எங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். ஒரே நிமிடத்தில் அனைத்தையும் மறந்துவிட்டனர். நான் என் தந்தையின் உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்ய விரும்புகிறேன். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. டெல்லிக்கு வர அச்சப்பட்டு வெளியூரில் உள்ள உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு வரவே அச்சப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

சொந்த நாட்டில் இஸ்லாமிய மக்களை விரட்டி அடிக்கும் இந்துத்வா கும்பலுக்கு எதிராக நாடுமுழுவதும் கண்டனம் குவிந்து வருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment