Header Ads



சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானிக்கான, அமைச்சரவை தடையை நீக்குமாறு கோரிக்கை

சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானியை இடைநிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

மன்றத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையாக இருக்கின்ற தனியான நகர சபையை ஏற்படுத்துவதற்காக புதிய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்தமைக்காக நாம் ஏலவே நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தோம். அதற்காக மீண்டுமொரு முறை எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

எனினும் சாய்ந்தமருது நகர சபையை ஏற்படுத்துவதற்காக இம்மாதம் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஒரு வாரம் கடப்பதற்கு முன்பதாகவே கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது எமது சாய்ந்தமருது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எமது மக்களின் நீண்ட கால தாகத்தை தீர்ப்பதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எமது மண்ணுக்கு முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களின் அழைப்பின் பேரில் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைவாகவே சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் துரிதமாக வெளியிடப்பட்டிருந்தது.  

இவ்வாறான வர்த்தமானி அறிவித்தலை சிலரின் விசமத்தனமான பிரசாரம் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக அமைச்சரவையினால் இடைநிறுத்தம் செய்வதென்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒரு வர்த்தமானி அறிவித்தலூடாக எமது கோரிக்கையினை நிறைவேற்றி விட்டு மறுபக்கம் அந்த வர்த்தமானிக்கு அமைச்சரவை இடைக்கால தடை விதித்திருப்பதானது எமது மக்களை மிகப்பெரும் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

மேற்படி எமது கோரிக்கையானது கடந்த 30 வருட காலமாக இருந்து வருகின்ற ஒரு அடிப்படை உரிமையோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும். 1987 காலப்பகுதிக்கு முன் இருந்த எமது சபை அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசினால் இரவோடு இரவாக இல்லாதொழிக்கப்பட்டது. அத்தகைய சபையினையே நாம் மீளவும் கோரி நிற்கிறோம். மாறாக அது இனத்துவ அடையாளத்துடனான ஒரு கோரிக்கையல்ல என்பதனையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

எனவே எமது யதார்த்தபூர்வமான கோரிக்கையினை உடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை விதிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக மீளப்பெறுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்.

இவ்வாறு அக்கடிதங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.  

No comments

Powered by Blogger.