Header Ads



நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் வாசுதேவ கவலை

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் பண வீக்கம் கடந்த வருட ஜனவரி மாதத்தையும் பார்க்க இவ்வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை உயர்வே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கம் வட் வரியை குறைத்தும் மக்களுக்கு அதன் நன்மை கிடைக்காமல் இருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில தினங்களில் மக்களின் வாழ்க்கைச்சுமையை குறைப்பதற்காக வட்வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இருந்தபோதும் மக்களின் அன்றாட உணவுப்பொருட்களுக்கான விலையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. வாழ்க்கைச்செலவும் அதிகரித்திருப்பதாகவே அறியமுடிகின்றது. 

அத்துடன் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதத்திற்கும் பார்க்க ஜனவரியில் பணவீக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த வருடம் ஜனவரி மாதத்திற்கும் பார்க்க இந்த வருட ஜனவரி மாத பணவீக்கம் அதிகரித்திருக்கின்றது. உணவுப்பொருட்களுக்கான விலை அதிகரிப்பே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணமாகும்.

இருந்தபோதும் தற்போது நெல் அறுவடை காலம் ஆரம்பித்திருக்கின்றது. அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து முறையாக நெல்லை பெற்றுக்கொண்டு விலை நிர்ணயமொன்றை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயிக்கலாம்.

மேலும் அரசாங்கம் வட்வரியை குறைத்தாலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களுக்குகூட வரி குறைப்பின் நன்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களும் தற்போது விரக்தியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. தொலைந்தவன் வழியைப் பின்பற்றி கடனின் வட்டியைச் செலுத்த மீண்டும் கடன் எடுத்தால் என்ன நடக்கும். எல்லாக்குப் பைகளும் ஒரேவழியில்தான் செல்கின்றனர். பொதுமக்கள் தெருவில் நடமாட அவர்களின் சொத்தை உல்லாசமாக அனுபவிக்கின்றார்கள் அந்த மந்தி(ரி)கள்.

    ReplyDelete

Powered by Blogger.