Header Ads



கட்சி கூட்டங்களில் நடப்பவற்றை ஊடகங்களில், பேசுபவர்கள்தான் எதிர்கட்சிகளுடன் டீல் வைத்துள்ளார்கள்

கட்சி கூட்டங்களில் நடப்பவற்றை ஊடகங்களில் பேசுபவர்கள்தான் எதிர்கட்சிகளுடன் டீல் வைத்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியா சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வருகின்றனர். இதுவரை அவர்களின் செயற்பாடு பூச்சியமாகவே உள்ளது .அவர்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் பூர்தியாகவுள்ளன. இந்த மூன்று மாதங்களில் அவர்கள் ஏதாவது செய்துள்ளார்களா என சிந்தித்து பாருங்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் சப்ரிகம திட்டம் என கூறினார்கள். இன்று எங்காவது அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? கடந்த மாதம் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என கூறினார்கள். மார்ச் மாதம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு என கூறுகின்றனர். ஆனால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தை கலைப்போம் என எனவும் கூறுகின்றார்கள். பாராளுமன்றத்தை கலைத்து எவ்வாறு வேலைவாய்ப்பு வழங்குவது?

எமது நாட்டின் ஒரு அங்குல காணியையும் வெளிநாடுகளுக்கு கொடுக்கமாட்டோம் என கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமே ஆட்சிக்கு வந்தவுடன் சங்ரில்லா ஹோட்டலுக்கு அருகில் உள்ள காணியை சிங்கபூருக்கு விற்பனை செய்தது.வில்பத்து பற்றி பேசிய இந்த அரசுதான் இன்று மைதானம் அமைக்கவும் அபிவிருத்திகளுக்கும் காடுகளை அழிக்க வேண்டும் என கூறுகிறது.

இவ்வாறு இந்த அரசின் பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் கூற பல விடயங்கள் இருக்கையில் கூட்டணி பற்றியும் சின்னம் பற்றியும் பேசி கால நேரத்தை வீணாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. கட்சி என்ற ரீதியில் ஒற்றுமையாக பயணிப்பது முக்கியம். ஆகவே குழுக்களாக பிரியாமல் ஒரே அணியில் நின்று இந்த அரசின் பொய் வாக்குறுதிகள் சம்மந்தமாக மக்களை தெளிவுபடுத்துவதன் மூலம் நாம் இலகுவாக பாராளுமன்ற தேர்தலை வெற்றி கொள்ளலாம். அதை விடுத்து கட்சி கூடங்களில் நடப்பவற்றை ஊடகங்களில் வந்து பேசுவதால் எமக்கு எந்தவித நன்மையுமில்லை. அவ்வாறு பேசுபவர்கள்தான் எதிர்கட்சிகளுடன் டீல் வைத்துள்ளார்கள் என்பதே எனது கருத்து என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.