Header Ads



தேசிய பாதுகாப்பு துறைசார் குழு அறிக்கைகளை, முஸ்லிம் எம்.பி. க்கள் அங்கீகரித்தது எப்படி?

இன்று  (26.02.2020) நவமணிப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்
தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை முழுமையாக முஸ்லிம் சமூகத்தை இலக்காக முன்வைத்த ஒன்றாகவே உள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக தலைமையிலான 17 அங்கத்தவர்கள் கொண்ட தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 16 விடயங்களில் அனேகமானவை முஸ்லிம்கள் தொடர்பானதாகும்.

அடையாளத்தை உறுதி செய்ய முடியாத முக மூடிகளைத் தடை செய்தல், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டிய முறைமை, முஸ்லிம் சிவில் சமூகத்தை வலுவூட்டுதல், வக்பு சட்டத்தினை திருத்தியமை, இன அடிப்படையிலான மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவினை இடைநிறுத்தல், மத்ரஸாக்களைக் கட்டுப்படுத்தல், ஹலால் சான்றுதிப்படுத்தல் போன்றன முஸ்லிம் சமூகம் தொடர்பாக நேரடியாகச் சொல்லப்படும் விடயங்களாக உள்ளன.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டது முதல் நாட்டின் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் தொடராக இது தொடர்பான செய்திகள் மாறி மாறி வெளிவந்த வண்ணமுள்ளன. இந்தக் குழு முன்வைத்துள்ள சில விடயங்கள் முஸ்லிம் சமூகம் தொடர்பான உண்மைக்குப் புறம்பான கருத்துக்களாக இருக்கின்றன. குழு முன்வைத்துள்ள சில சிபாரிசுகள் முஸ்லிம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களாகும். ஆனால் சில விடயங்களை மாற்றுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

இந்தக் குழுவின் அறிக்கையில் இந்தியாவிலிருந்து இரு முஸ்லிம் தீவிவரவாதிகள் உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தின் பின் இலங்கைக்கு வந்து விரிவுரை நடத்தியதாக திங்களன்று வெளியான சிங்கள தினசரி ஒன்று முதற்பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தின் பின் இலங்கைக்கு இப்படிப்பட்ட எவரும் வந்திராத நிலையில் இச் செய்தியினை வெளியிட்ட நோக்கம் என்ன? என முஸ்லிம்கள் கேள்வி எழுப்புன்றனர்.

நாடெங்கிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரசாக்கள் நடாத்தப்படுவதாகவும், அதில் 317 மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அறிக்கைப்படி 317 மத்ரசாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இன்றும் சில மதரசாக்கள் பதிவு செய்யப்படாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க ஆயிரத்துக்கு மேல் மதரசாக்கள் இருப்பதாக கூறுவதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரிக்கின்றார்களா? என்ற கேள்வி சமூகத்தில் எழுப்பப்பட்டு வருகின்றது.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், மதரசாக்கள் என்பன தொடர்பாக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமூகம் சார்பிலே பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டு அமைச்சரவைக்குக்கூட சமர்ப்பித்திருக்கின்ற நிலையிலேயே அது தொடர்பாக எதுவும் குறிப்பிடாது இந்தக் குழு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி 21 முஸ்லிம் உறுப்பினர்களும் அங்கீகரித்தார்களா? இந்தக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய இரு முஸ்லிம் உறுப்பினர்களும் இதற்கு அங்கீகாரம் வழங்கினார்களா? என்ற கேள்வியை சமூகம் எழுப்புகின்றது.

ஆளுமைமிகு அறிவுசார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தமது சமூகம் சார்பில் அனுப்பிவைக்க தவறியதன் விளைவை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்து வருகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வழிதவறிய சிறிய குழு ஒன்றே செய்தது. முஸ்லிம் சமூகம் அதனை முற்றாக நிராகரித்துள்ளது. பொதுவாக காலத்திற்கு ஏற்ப நாட்டில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்திலும் செய்யப்பட வேண்டும். அதில் வாத பிரதிவாதங்கள் இல்லை. ஆனால் அநியாயமாக முஸ்லிம் சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த முற்படுவதனை அங்கீகரிக்க முடியாது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 21 முஸ்லிம் பிரதிநிதிகளும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு சிபாரிசுகள் தொடர்பாக தம் கடமையை செய்ய தவறியவர்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

1 comment:

  1. what is foolish question? if you send parliament who does not care about Muslim society they dont care all about these

    ReplyDelete

Powered by Blogger.