Header Ads



ரணில் நாளை நாடு திரும்புகிறார்; சஜித்துடன் பேசவும் தீர்மானம்

இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் வந்தவுடன் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

சமத்துவ மக்கள் சக்தியின் தேர்தல் சின்னம் தொடர்பில் அடுத்த வார இறுதிக்குள் தீர்வு காணப்படவிருப்பதாகவும் பெரும்பாலும் அன்னம் சின்னத்தை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் மக்கள் சக்தி வட்டாரம் தெரிவித்தது.

ஐக்கிய தேசிய கட்சியில் நவீன் திசாநாயக்க, தயாகமகே, பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட சிலர் தத்தமது மாவட்டங்களில் ஐ.தே.க சார்பில் யானைச்சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில் அது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கூடவிருக்கும் செயற்குழுக்கூட்டத்தில் பேசித் தீர்மானிக்கப்படவிருப்பதாக ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

சஜித் தரப்புக்கும் ஐ.தே.கவின் சிலருக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரத்துக்குள் இதனை தீர்த்துக் கொள்ளுமாறும் கேட்டிருக்கின்றார்.

தங்கள் மாவட்டங்களில் யானைச் சின்னத்தில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியுமென நவீன், தயா கமகே, ரங்கே பண்டார உள்ளிட்டோர் சுட்டிக்காட்டி வருவதாக தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம் தானும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த சின்னம் விவகாரம் காரணமாக கட்சிக்குள் இழுபறி நிலை நீடிப்பது நெருக்கடி நிலை தொடர்வதையே காட்டுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான முரண்பாடுகள் கலையப்பட்டுள்ளபோதும் கட்சி மட்டத்தில் நெருக்கடிகள் தளரவில்லை என்பதையே வெளிப்படையாகக் காணமுடிகிறது. எவ்வாறெனினும் இந்த வார இறுதிக்குள் இவற்றுக்கு முடிவு காண்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் இதற்கான காலக்கெடுவாக வியாழக்கிழமை நடக்கவிருக்கும் செயற்குழுவாகவே அமையலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ.எம். நிலாம்

No comments

Powered by Blogger.