Header Ads



ரிஷாத்தின் மனைவி, அவரது சகோதரரின் வங்கிக்கணக்குகளை சோதனையிட நீதிமன்றம் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி கே.எம்.ஏ.ஆய்ஷா, ரிஷாத்தின் சகோதரர் பதியுதீன் மொஹம்மட் ரியாஜ் ஆகியோரின் வங்கிக் கணக்குகளையும், ச.தோ.ச. நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் தொடர்பில் கைதாகியுள்ள மொஹம்மட் இம்ரான் எனும் சந்தேக நபரின் வங்கிக் கணக்குகளையும் சோதனைக்குட்படுத்துமாறு கல்கிசை நீதிவான் இன்று உத்தரவிட்டார். 

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் பிரதான  பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை ஏற்றே  கல்கிசை நீதிவான் உதேஷ் ரணதுங்க இந்த உத்தரவை வழங்கினார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்  பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டபிள்யூ. திலக்கரத்ன ஆகியோருக்கு, கடந்த வாரம்  ச.தொ.ச நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக  புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.   

கடந்த ஏழாம் திகதி இந்த விடயம் தொடர்பில் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்து பெற்றுக் கொண்ட சோதனை உத்தரவுக்கமைய சோதனை நடவடிக்கைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்து ஆவணங்கள் பலவற்றை மீட்டுள்ளதுடன் ஒருவரைக் கைதும் செய்துள்ளனர்.  

இது குறித்த நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று மீள கல்கிசை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதாகியுள்ள சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் 13 வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார். 

இந்த வழக்கு விசாரணையின்போது சி.ஐ.டி.யின் விசாரணையாளர்கள் சார்பில் விசாரணை அதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா, பொலிஸ் பரிசோதகர் பிரியஞ்ஜித் மற்றும் சார்ஜன் பெரமுன  ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

இந்த விவகாரத்தில் கைதாகி விளக்கமறியலில் உள்ள மொஹம்மட் இம்ரான் எனும் சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த உள்ளிட்ட குழுவினர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments

Powered by Blogger.