Header Ads



ஷாஹின் பா என்பது...

Marx Anthonisamy

ஷாஹின் பா - இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கணம். முஸ்லிம் பெண்கள் என்றால் முக்காடு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்கள். முஸ்லிம் இளைஞர்கள் என்றால் தாடி வைத்துக் கொண்டு கைகளில் துப்பாக்கியுடன் திரிபவர்கள் என்கிற இன்றைய கட்டமைப்புகள் தகர்ந்து தூளாகிய ஒரு கணத்தில் நாம் நின்று கொண்டுள்ளோம்.
அவர்கள் இது கண்டுதான் அதிக ஆத்திரப் படுகிறார்கள். ஒரு அமைச்சர் "கோலி மாரோ" எனத் தொண்டை வரளக் கத்துகிறார். நேற்று கிரிராஜ் சிங் என்கிற இன்னொரு அமைச்சர் ஷாஹின் பா பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யப்படும் களமாக உள்ளது எனக் கூவுகிறார்.
இதுவரை சங்கிகள் இருவர் அங்கு குழுமியுள்ள மக்kaள் திரளுக்கு முன் துப்பாக்கிகளை உயர்த்தி உள்ளனர். இப்போது பிடிபட்டுள்ள கபில் குஜ்ஜார் என்பவன் ஆம் ஆத்மி தலைவர்களுடன் நிற்பதாக அவர்கள் ஏதோ ஒரு படத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவனது தந்தை தன் மகன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் ரசிகன் என உண்Mஐயை ஒப்புக் கொண்டுள்ள செய்தி இன்று பத்திரிகைகளில் வந்துள்ளது.
யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் இன்று சுமார் இருபது பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னும் ஷாஹின்பா விலிருந்து முஸ்லிம் பெண்களை விரட்ட முடியவில்லை என அவர்கள் ஆத்திரம் கொள்கின்றனர். இங்கும் இப்போது அவர்கள் முன் துப்பாக்கிகள் காட்டப்படுகின்றன.
ஆனால் போராடுபவர்கள் அஞ்சவில்லை என்கிறபோது வேறு கதைகளைக் கட்டத் தொடங்கியுள்ளனர். இப்போது அவர்கள் பயங்கரவாதிகள் உற்பத்தி செய்யப்படும் இடமாக ஷாஹின்பாவைச் சித்திரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இன்னொருபக்கம் இந்துக்கள் எல்லோரையும் காவிமயப் படுத்திவிட்டோம் என்கிற அவர்களின் நம்பிக்கையும் இன்று சிதைந்துள்ளது. இந்து அடையாளத்தை உயர்த்திப் பிடித்த பின்னும் கூட இந்த நாட்டில் ஒரு பகுதி மக்ளைக் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கி, ஒரு "இந்து நாட்டை" உருவாக்குவது என்பதற்கான ஒரு பொது ஒப்புதலை ஏற்படுத்த முடியவில்லை என்பது இன்று அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தாங்கள் நினைத்ததுபோல இனி காந்தி, நேரு, அம்பேத்கர், பகத்சிங் ஆகியோருக்கக் காலமில்லை என்பது பொய்யாகிப் போனதை அவர்கள் உணர்கிறார்கள்... எங்கெங்கு திரும்பினாலும் கைகளில் இவர்களின் படங்களுடன் மக்கள் திரள்....
பால்கோட், புல்வாமா அல்லது பாகிஸ்தான் ஆபத்து என்கிற சொல்லாடல்களும் இனி தங்களின் அரசியல் தோல்விகளையும், பொருளாதாரப் பின்னடைவுகளையும் மக்கள் கண்களிலிருந்து மறைக்கப் போதாது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கின்றனர்.
பெரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாவற்றையும் அடிமைகளாக்கிவிட்டாலும் வெறும் சமூக ஊடகங்களின் ஊடாகவும் மக்களுக்குச் செய்திகள் போய்விடும் என்பதையும் அவர்கள் இன்று உணர வேண்டியவர்களாகி விட்டனர்.
அதுமட்டுமல்ல இன்றைய சமூகப் பிளவை நோக்கிய இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஏதோ முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆபத்து விளைவிப்பது என்பதாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் பன்முகத் தன்மைக்கும், இதன் இயல்பான secular ethos க்குமே ஆபத்தாக உள்ளதையும், அது எல்லோருக்குமே தீங்கானது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளத் தலைப்பட்டுள்ளதையும் இவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
நவீன இந்திய வரலாற்றில் 'ஷாஹின்பா' என்பது பெண்களின் உறுதியாக்கத்தின் அடையாளமாகவும் அரசியல் சட்ட மதிப்பீடுகளின் மீது மக்களின் கவனம் ஈர்க்கப்பட்ட ஒரு கணமாகவும் அமைந்துவிட்டதைக் கண்டு இவர்கள் அதிர்ந்து நிற்பதைத்தான் இவர்களின் இன்றைய இந்த எதிர்வினைகள் வெளிப்படுத்துகின்றன.

No comments

Powered by Blogger.