Header Ads



தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ள, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எயார்லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் மோசடிகள் தொடர்பாக வெளிப்பட்டிருக்கும் அறிக்கைகளை அடிப்படையாக்கொண்டு ஜனாதிபதி விசேட நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்து தனது நேர்மைத்தன்மையை வெளிப்படுத்தவேண்டும்.

இல்லாவிட்டால் அவரும் இந்த மோசடிகளுக்கு பங்காளியாக கருதப்படுவார். அத்துடன் அரசாங்கம் கணக்கு வாக்கெடுப்பை வாபஸ்பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம் தனது இயலாமை வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3மாதங்களுக்கு பிறகு கணக்கு வாக்கெடுப்பொன்றை முன்வைக்கமுடியாமல் தனது இயலாத நிலையை வெளிப்படுத்தி இருக்கின்றது.

நாங்கள் 48 பேர் இருக்கும் நிலையில் 2015இல் ஆட்சிக்குவந்து சில தினங்களிலே வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம். என்றாலும் அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்வைக்க இருந்த கணக்கறிக்கைக்கு நாங்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்தோம்.

ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் அரசாங்கம் எதிர்வரும் தேர்தலுக்கு செலவழிக்க தேவையான கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்ததால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

மேலும் எயார் லங்கா நிறுவனம் லாபமீட்டும் நிறுவனமாகவே இருந்துவந்தது. 2007வரை எமிரேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டதால் லாபமீட்டும் நிறுவகமாக இருந்தது. ஆனால் வெளிநாட்டு விஜயமொன்றின்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமிரேட் நிறுவனத்தினால் விமானத்துக்கு ஆசனம் ஒதுக்கவில்லை என்பதற்காக 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய தீர்மானிக்கப்பட்டது.அதன் பின்னர் எயார் லங்கா நிறுவனத்தின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ்வின் மைத்துனர் நிஷாந்த விக்ரமசிங்கவை நியமித்தார்.

அந்த காலம் முதல் எயார்லங்கா நிறுவனம் வருடாந்தம் கோடிக்கணக்கில் நட்டமடைந்து வந்தது.

அத்துடன் எயார்பஸ் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களுக்காக 290 கோடி ரூபா தரகுப்பணம் வழங்கப்பட்டிருக்கின்றது. நிறுவனத்தின் தலைவரால் மாத்திரம் இதனை மேற்கொள்ளமுடியாது. இதற்கு அரசியல்வாதிகளின் ஆசிர்வாதமும் இருக்கவேண்டும். அதுதொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. 

அதனால்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் நேர்மையானவர் என்பதை வெளிப்படுத்த, எயார்பஸ் கொள்வனவு தொடர்பாக பிரித்தானிய வழக்கு அறிக்கை, கோப்குழு அறிக்கை, ஜே,சி,வெலியமுன அறிக்கை மற்றும் கணக்காளர் நாயகத்தின் விசேட அறிக்கை என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு விசேட நீதிமன்றில் வழங்குதாக்கல் செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக கருதப்படுவார் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.