Header Ads



மலேசிய பிரதமர் ஆகிறார் மொகிதின் யாசின்

மலேசியாவின் பிரதமராக மொகிதின் யாசினை அந்நாட்டு மாமன்னர் அப்துல்லா நியமித்து உத்தரவிட்டுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தாம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் மூலம் மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதை நம்ப முடிகிறது என்பதால் அவரை பிரதமராக நியமிப்பதாக மாமன்னர் அறிவித்துள்ளார்.

மாமன்னரின் இந்த முடிவை மலேசிய மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை, மார்ச் 1ஆம் தேதி, 72 வயதாகும் மொகிதின் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தற்போது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள மகாதீர் முகமது தலைமையேற்றுள்ள பெர்சாத்து கட்சியை 2016இல் தொடங்கியவர் யாசின்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மகாதீர்.

2015இல் அவரை கட்சியில் இருந்து நீக்கிய அம்னோ (தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு) கட்சி அவருக்கு ஆதரவளித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அம்னோ கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2015 வரை துணை பிரதமராக இருந்த இவர், ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விமர்சித்ததால் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டவராவார்.

சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஜோகூர் மாகாணத்துக்கும், 1986 முதல் 1995 வரை சுமார் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார் மொகிதின் யாசின்.

அன்வார் ஆதரவாளர்கள் ஏமாற்றம்

முன்னதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பாக மகாதீர் பிரதமராக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. இன்று மதியம் மாமன்னரை நேரில் சந்தித்தார் அன்வார் இப்ராகிம்.

அப்போது பக்காத்தான் கூட்டணி சார்பாக மகாதீரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக அவர் மாமன்னரிடம் தெரிவித்தார்.

எனினும் அன்வார் அரண்மனைக்கு வந்து சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு மொகிதின் யாசினை பிரதமராக நியமிக்கும் அறிவிப்பை அரண்மனை வெளியிட்டது. இதனால் அன்வார் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இனியும் காலம் தாழ்த்த முடியாது: மாமன்னர்அறிக்கை

இது தொடர்பாக மாமன்னரின் அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அதிகாரபூர்வக் அறிக்கையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடம் இருந்தும், சுயேச்சையாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும், அடுத்த பிரதமருக்கான வேட்பாளரை முன்மொழியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறு வேட்பாளருக்கான நியமனங்களைப் பெற்றது, மாமன்னர் கடந்த இரண்டு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய நேர்காணல்களின் தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் மொகிதின் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், அதனால் அவரைப் பிரதமராக மாமன்னர் நியமித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

"நாம் அனைவரும் விரும்பும் இந்த நாட்டின் மக்களின் நலன்களுக்காகவும், அரசாங்கம் ஒன்று அமைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தும், பிரதமர் நியமனத்தில் இனியும் காலம் கடத்த முடியாது என்றும் மாமன்னர் கருதுகிறார். நாட்டில் நீடித்து வரும் அரசியல் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அனைத்துத் தரப்புகளுக்கும் இதுவே சரியான முடிவான அமையும் என மாமன்னர் கருதுகிறார்," என அரண்மனைக் காப்பாளர் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.