Header Ads



நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்த குரல் பதிவுகளில், தவறான வார்த்தைகள் இல்லை

நாடாளுமன்றத்துக்கு நான் சமர்ப்பித்திருக்கும் குரல் பதிவுகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரது குரல் பதிவுகளும் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்களுடன் நான் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி உரையாடவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இன்றைய அமர்வின்போத அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றில், சபாநாயகர் தெரிவித்ததாக ரஞ்சனின் குரல் பதிவுகளில் அதிகமானவை தவறான வார்த்தகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் சிறைச்சாலை வாகனத்தில் நாடாளுமன்றத்துக்கு வரும்போது சற்று காலதாமதமானது. அதனால் நீங்கள் அவ்வாறான வார்த்தையை பிரயோகித்தீர்களா என எனக்கு தெரியாது.

அத்துடன் எனது குரல் பதிவுகள் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கும் தினத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்கு வந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் அவர்கள் மேற்கொண்ட சேவைகள் தொடர்பாக அறியும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.

அதன் பிரகாரம் நான் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்த குரல் பதிவுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு குரல் பதிவுகள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரு குரல் பதிவு, ராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவின் ஒரு குரல் பதிவு என்பன உள்ளன.

அத்துடன், ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவி ஆஷா அளுத்கமகேயின் இரண்டு குரல் பதிவுகள், அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவின் ஒரு குரல்பதிவு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் ஒரு குரல் பதிவும் உள்ளடங்கி இருக்கின்றன.

இந்த குரல் பதிவுகள் எதிலும் தவறான வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.