Header Ads



அடிப்படைவாதத்தினால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமிய, இளைஞர்களை நல்வழிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கை

"உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமை பெற்றுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்."

இவ்வாறு சட்டம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் விசேட பயிற்சி பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

'உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் திருப்திப்படும் வகையில் இல்லை' என்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பொலிஸார், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றகரத்தன்மை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று  பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் சட்டம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுபடுத்தலை வாங்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதராட்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. இஸ்லாத்தின் அடிப்படைகளை சரியாக அறிந்து நடப்போரை இஸ்லாமே நல்வழிப்படுத்தும்.

    பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட சமூக விரோதிகளை சட்டம் தண்டித்து சீர்திருதித்தும்.

    ReplyDelete

Powered by Blogger.