Header Ads



மோசடிக்காரர்களுக்கு வேட்புமனு தாக்கல்செய்ய இடமளிக்க வேண்டாம் - பிரதமரிடம் கோரிக்கை

(எம்.மனோசித்ரா)

ஊழல் மோசடியாளர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ' மார்ச் 12 ' அமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு தேர்தலின் போது வேட்பாளரொருவருக்கான செலவுக்கான வரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்திப்பு தொடர்பில் மார்ச் 12 அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது :

பொதுத் தேர்தலில் ஊழல் மோசடிகளற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக பொறுத்தமானவர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு  ' மார்ச் 12 ' அமைப்பு அனைத்து கட்சி தலைவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து இவ்விடயம் குறித்து தெளிவுபடுத்துவதற்கு மார்ச் 12 அமைப்பு எதிர்ப்பார்த்துள்ளது.

இவ்வாறு பிரதான அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்களை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மார்ச் 12 அமைப்பின் பிரதானிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது , மோசடிக்காரர்களுக்கு வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்ய இடமளிக்க வேண்டாம் என்றும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நபரொருவர் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடாது என்றும், அதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளரொருவர் செலவிடக் கூட பணத்திற்கான எல்லையை பாராளுமன்றத்தில் தெரிவிக்குமாறும், வேட்பாளர்கள் ஒழுக்கமான தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் மார்ச் 12 அமைப்பின் அதிகாரிகள் இதன் போது பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ' மார்ச் 12 ' அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் பரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ' மார்ச் 12 ' அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.