Header Ads



மஹர பள்ளிவாசல் விவகாரத்தின் நிலை,, ஓய்வறையாக மாற்றினார்கள் என்பது இனத்துவேசமல்லவா?

சட்டத்தரணி சறூக்- “ஓய்வு அறையாக மாற்றப்பட்ட மஹர சிறைச்சாலை பள்ளி புத்தர் சிலையும் வைப்பு” -நவமணி பத்திரிகை 26/02/2020:
“மஹர ஜும்ஆ பள்ளியினுள் புத்தர் சிலை வைப்பு அதிகாரிகளின் ஓய்வு அறையாகவும் மாற்றம் முஸ்லிம் அமைப்புக்கள் கவலை; கண்டனம் ஜனாதிபதி,பிரதமரிடம் முறைப்பாடு”-விடிவெள்ளி பத்திரிகை 26/02/2020.

தலைப்புச்செய்தியாக கொட்டையெழுத்தில் புகைப்படங்களுடன் கூடிய செய்திகளை மேற்கூறப்பட்ட செய்தித்தாள்கள் பிரசுரித்தன. அதனைத்தொடர்ந்து சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இந்த 100 வருடபழமையான பள்ளி விடயம் இருந்தது.

பாமரன் தொடக்கம் படித்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் இது அரசாங்கத்தின் அப்பட்டமான அடிப்படை உரிமை மீறல் என்று கொதித்துக்கொண்டிருக்கின்றனர்.

“சமூகம் கண்ணீர் விடுவது எனக்கு பிடிக்காத விடயம்” என்பதால் உண்மைகளை அறியும் நோக்குடன் கொழும்பிற்கு பக்கத்திலிருக்கும் மஹரைக்குச்சென்று குறித்த பள்ளியில் கடந்த 10 வருடங்களாக அஹதியா வகுப்பு நடாத்திய மவ்லவி ஒருவரைத்தேடி கண்டுபிடித்து சர்ச்சைக்குரிய பள்ளி தொடர்பான போதுமான தகவல்களைப்பெற்று அதனை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நான் இந்த கட்டுரையை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவோ எமதுரிமைகளை யாருக்கும் தாரைவார்த்து கொடுப்பதற்காகவோ தற்போதைய ஆட்சி செய்யும் அரசாங்கத்திற்கு கூஜா தூக்குவதற்காகவோ எழுதவில்லை.

அரசியல் காரணங்களுக்காக ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகளை தமிழ்பேசும் உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மாத்திரமே இவ்வுண்மை நிலைமைகளை எழுதுகிறேன்.

இதோ அந்த உண்மைத்தகவல்கள்.

ஆரம்ப வரலாற்று காலங்களில் சிங்கள சிறையுத்தியோகத்தர்களை விட மலாய சிறையுத்தியோகத்தர்கள் சிறந்தவர்களே!
=============

கொழும்பு slave Island சிறைச்சாலையின் கைதிகளுக்கான இடவசதி போதாமையை நிபர்த்தி செய்யுமுகமாக இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலைகளின் ஒன்றாக கொழும்புக்கு வெளியே மஹர சிறைச்சாலை 1875ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அதன் தற்போதைய பரப்பளவு அண்ணளவாக 46 ஏக்கர்களாகும்.

1902/06/28ல் சிறைச்சாலை திணைக்களமானது சிங்கள சிறையுத்தியோகத்தினரின் மேற்பார்வையில் மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடூழிய சிறைத்தண்டனை பெற்ற சிறைவாசிகளில் 100 பேரை மஹர கல்குவாரியில் கல்லுடைக்கும் வேலையில் ஈடுபடுத்தியது.

அச்சிறையுத்தியோகத்தர்களின் பொடுபோக்குத்தனத்தனால் மேற்குறிப்பிட்ட 100 கைதிகளில் 79 பேர் அவ்விடத்தைவிட்டு தப்பியோடினர்.

கைதிகள் தப்பியோடியதற்கு காரணமாக இருந்த மஹர சிங்கள சிறையுத்தியோகத்தர்களின் சேவைகளில் அதிர்ப்தியடைந்த அரசாங்கமானது பொலிஸ் மற்றும் சிறைச்சாலைத்திணைக்களங்களிலிருந்த 
நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை மாத்திரம் பொறுக்கியெடுத்தபோது அவர்கள் அனைவரும் மலாய் உத்தியோகத்தர்களாக இருந்தனர்.

அரசர்கள் காலம் தொட்டு ஆட்சியாளர்கள் தங்களது மெய்ப்பாதுகாவளர்களாக நம்பிக்கைக்கு பாத்திரமான முஸ்லிம்களைத்தான் தேர்ந்தெடுத்து வந்துள்ளார்கள் என்பது மறைக்கப்பட்டுவரும் வரலாறாகும் என்பது யாவரும் அறிந்த உண்மையே!

சிறைத்திணைக்களம் தேரந்தெடுக்கப்பட்ட விசேட சிறைச்சாலை மலாய உத்தியோகத்தர்களைக்கொண்ட MAHARA MALAY GUARD ஐ 1/01/1903ல் உருவாக்கி மஹர சிறைவளாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தது.

இந்த உத்தியோகத்தர்களின் சிறப்பான சேவைகளைப்பெற்றுக்கொள்வதற்காக சிறைவளாகத்தினுள்ளே அவர்களுக்கானதங்குமிடவசதி, உடற்பயிற்சிச்சாலை ,வாசிகசாலை, அவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை மற்றும் பள்ளிவாசலுக்கும் மையவாடிக்குமான இரு காணி துண்டுகள் ஆகியன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன.

100% மலாயர்களைக்கொண்ட சிறைச்சாலை படையணியான MAHARA MALAY GUARD பொறுப்பை முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட சிறையுத்தியோகத்தராக வேலை செய்துகொண்டிருந்த Mr.Bahar என்னும் மலாயரை மஹரைக்கு இடம் மாற்றி அவருக்கு வழங்கப்பட்டது.

அவரைத்தொடர்ந்து Samsudeen, Musafer ,C.H.Lantra,M.H.Mahat,T.K.Doole ,T.T.Packirally,T.Z.Saldin மற்றும் T.S.J.Cuttilan ஆகிய மலாய இனத்தினர் மஹர சிறைப்பொறுப்புதாரியாக கடமையாற்றினர்.

பள்ளிவாசலுக்கும் மையவாடிக்கும் அரசாங்கத்தினால் காணிவழங்கப்பட்டதாக 1902ம் ஆண்டின் இலங்கை நிர்வாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கான எந்தவித ஆவணங்களும் சான்றுக்காக காட்டுவதற்கு இன்றுவரை அச்சகோதரர்களிடமில்லை.அவர்களிடமிருப்பதோ அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் அவைகளுக்கான பதில்களுமே!

ஆரம்பத்தில் சிறிய தொழுகையறையுடன் உருவாக்கப்பட்ட பள்ளியானது அதன்பிற்பாடு பலதடவை தனவந்தர்கள் பொதுமக்களின் உதவியால் புதுப்பிக்கப்பட்டது .

அந்த வரிசையில் 14/05/1950 ல் அரசாங்க கட்டட ஒப்பந்ததாரரான S.Abdul Rahiman என்பவரால் இப்பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு ராகம மஹர பகுதி முஸ்லிம்களும் வைத்தியத்துறை மாணவர்களும் தொழுகைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.அத்துடன் மேற்குறிப்பிட்ட மையவாடியில் ஜனாசாக்களையும் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அடக்கிவந்தனர்.

பள்ளிவாசல் பதிவானது தமக்கு எல்லா உரிமைகளையும் தந்துவிடும் என பள்ளி நிருவாகத்தை நம்பவைத்த வக்புப்பிரிவு. 
==========================

எனக்கு தெரிந்தவகையில் வக்பு என்பது ஒருவர் தனது இறப்பின் பின்னர் மறுமை நாள் வரைக்கும
தமக்கு நன்மை வர வேண்டும் எனும் நோக்கத்திற்காக ஒரு அசையும் ்அல்லது அசையாத சொத்தை மனித தேவைகளுக்காக வழங்குவதே வக்பு எனப்படும்.

காணியிருப்பவர் அதனை பாடசாலைக்கோ மத்ரசாக்களுக்கோ அனாதை இல்லங்களுக்கோ வைத்திய சாலைகளுக்கோ அல்லது பள்ளிவாசல்களுக்கோ வக்பு சொத்தாக வழங்கலாம்.

அப்படியான சொத்துக்களை பராமரிக்கும் நம்பிக்கையாளர்கள் அதனை வக்பு பிரிவுக்கு தெரியப்படுத்தி அதன் ஆவணங்களை பாதுகாப்புக்காக வக்புப்பிரிவுக்கு வழங்க வேண்டும்.அவ்வாதனங்கள் குறித்த தேவைகளுக்காக பாவிக்கப்படுகிறதா எனப்பார்ப்பதே வக்பு பிரிவின் கடமையாகும்.

இவ்வாறான வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கு வருபவர்களிடம் சட்டரீதியான உறுதிகளை (Deed)கோரவேண்டியது வக்பு பிரிவுக்கு பொறுப்பானவரின் கடமையாகும்.

ஆனால் குறித்த காணியில் ஒரு பள்ளி இயங்குவதில் எனக்கு எந்தவிதப்பிரச்சினையுமில்லையென ஒருவரின் கடிதம் மட்டும் போதும் அப்பள்ளியைப் பதிவு செய்வதற்கு என்று வக்பு பிரிவுக்கு பொறுப்பானவர் இன்றும் பொறுப்பற்றமுறையில் கூறுகின்றார்.

இதே போன்ற சிந்தனையைக்கொண்ட வக்பு பிரிவு பொறுப்பாளர் ஒருவர் மேற்கூறப்பட்ட சிறைச்சாலை ஜும்மாப்பள்ளியை 7/01/1967ம் ஆண்டு அப்போதைய சிறைச்சாலைச் ஆணையாளராக இருந்த F.D.L.Ratnayake என்பவரின் சிபார்சுக்கடிதத்தைப்பெற்று 2/3/1967 ல் வக்பு பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவிலக்கமாக R/1076/GM/31 வழங்குவதற்கு காரணமாகியுள்ளார்.

பதிவு செய்வதற்கு தேவையான வக்பு சொத்துக்குரிய ஆவணத்தை(Deed) கொண்டு வாருங்கள் பதிவு செய்து தருகிறேன் என வக்பு பிரிவுக்கு பொறுப்பானவர் கூறியிருந்தால் அம்மலாய் மக்கள் ஏதாவது செய்து அரசாங்கத்திடமிருந்து அந்தப்பள்ளிக்கான காணி உறுதியை பெற்றிருப்பார்கள் அல்லது வேறு ஒரு இடத்தில் காணியொரு துண்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றிருப்பர்.

வக்பு என்றால் என்னவென தெரியாத அலுவளர்கள் வக்புபிரிவில்வேலைசெய்வதால் வக்பு செய்யப்பட்ட பள்ளிக்காணியின் ஒரு பகுதியை ஒரு நம்பிக்கையாளர் தனது மகளின் கணவனுக்கு சீதனமாக எழுதிக்கொடுத்த வரலாற்றையும் எமது சமூகத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.இவற்றிற்கான துரித மாற்றமொன்று தேவை.

ுசிறைச்சாலை வளாகத்திற்குள்10 பேர்ச்சஸ் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட காணிக்காகவும் பள்ளியிலிருந்து அரை மைல் மற்றும் சிறையுத்தியோக விடுதிகளிலிருந்து 200 மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் 40 பேர்ச்சஸ் பரப்புள்ள மையவாடிக்காகவும் இம்மலாய் சகோதரர்கள் அன்றிலிருந்து இன்றுவரை போராடி வருகின்றனர்.

பள்ளிக் காணிக்கான போராட்டம் வெற்றியளிக்காத போதும் மையவாடிக்கான போராட்டமானது அக்காணிக்கான சொந்தக்காரனான இலங்கை துறைமுக அதிகார சபையின் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் நிலுவையிலிருந்து வருகிறது.

மலாயர்களுக்கும் சிங்கள சிறையுத்தியோகத்தர்களுக்குமுள்ள உறவுகள்
============================

ராகமையிலுள்ள முஸ்லிம்களும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து குறித்த பள்ளியை பராமரிப்பதற்காக MAHARA NUGEGODA MUSLIM ASSOCiATION எனும் அமைப்பு 29/06/1967 உருவாக்கினர்.

இதில் தலைவராக மஹர சிறைச்சாலை Chief Jailer தெரிவு செய்யப்பட்டு பள்ளி சிறப்பாக இயங்கி வந்தது.தற்போதைய தலைவராக T.M.H.Hafeel Singa Laxana( 2012-2021) தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு வருகிறார்.

100 வருடங்கள் பழமைவாய்ந்த இப்பள்ளியுடன் Slave Island ல் அமைந்துள்ள Malay Military Mosque-Java Lane,Akbar Mosque ,Wekanda Mosque ,கண்டி மற்றும் குருநாகல ஆகிய இடங்களில் மலாய் சகோதரர்களின் புராதான பள்ளிகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளி ஆரம்பித்ததிலிருந்து ஐநேர தொழுகைகளுடன் ஜும்மா தொழுகை இரு பெருநாள் தொழுகைகள் ரசூல் மற்றும் குத்தூப் மவ்லத்துக்கள் கொடியேற்றங்கள் தப்லீக் ஜமாஆத் வேலைகள் மற்றும் அஹதியா வகுப்புக்கள் ஆகியன பக்கத்து பள்ளிகளான மாபோல அக்பர் டவுன் மற்றும் ரோஷ் விலா பள்ளி நிர்வாகங்ளுடன் இணைந்து நடத்தி வந்துள்ளனர்.இந்நிகழ்வுகளில் மலாய் சகோதரர்கள் அவர்கள் குடும்பம் சகிதம் கலந்து வந்திருக்கிறார்கள்.

1965லிருந்து சிறைச்சாலை அதிகாரிகள் இந்தப்பள்ளியை தங்களுக்கான வாசிகசாலையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேயிருந்தனர்.

இவர்களை சமாளிப்பதற்காக The Young boys Welfare Association எனும் அமைப்பையுருவாக்கிய மலாய சகோதரர்கள் ஒவ்வொரு வருடமும் மவ்லத் சடங்கை ஒலிபெருக்கியெல்லாம் போட்டு ஊர் முழுதும் முழக்கி எல்லா சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் கிடுவு சாப்பாடு வழங்கி பெரிய விழாவாக கொண்டாடி வந்தனர்.

ஆனால் அண்மைய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் பள்ளியை மூடுவதற்கான சந்தர்ப்பத்தை சிறையுத்தியோகத்தர்களுக்கு வழங்கியது.

சிறையுத்தியோகத்தர்களின் பலநாள் கனவாகிய ஓய்வறையாக குறித்த பள்ளியானது கடந்த 5/02/2020யிலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது.

சிறைச்சாலை திணைக்களத்தினரின் வாதம் என்ன?

எப்போது இந்தப்பள்ளி பதிவு செய்யப்பட்டதோ அதிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்வரை பள்ளியின் நிருவாகத்தினரால் இந்தப்பள்ளிக்கும் மையவாடிக்குமுரிய காணிகளை வேறாக தங்களுக்குப்பிரித்துத்தாருங்கள் என கேட்ட போதெல்லாம் சிறைத்திணைக்களத்தினரின் கருத்தானது பின்வருமாறு இருக்கிறது.

உத்தியோகத்திலிருந்த முஸ்லிம் சிறையுத்தியோகத்தினருக்காக வழங்கப்பட்ட இப்பள்ளியானது தற்போது முஸ்லிம் சிறை உத்தியோகத்தர்கள் தமது சிறைச்சாலை சேவையிலில்லாத போது அங்கு அந்தப்பள்ளிக்கான தேவைப்பாடு இங்கு இல்லை எங்கின்றனர்.

கைதிகள் தொழுவதற்கு வேறான அறையொன்றை ஒதுக்கியுள்ளோம்.வெளியார் சிறைச்சாலையில் பிரதான வாயிலூடாக சிறைவளாகத்திற்குள் வந்து போவது எமது பாதுகாப்பிற்குஅச்சுறுத்தலாவதுடன் எமது நிருவாக கடமைகளைக் கொண்டு நடாத்துவதற்கு இடஞ்சலாக இருக்கிறது என தங்களது பக்க நியாத்தை எடுத்துக்கூறுகின்றனர்.

அத்துடன் பள்ளி நிருவாகத்தின் கடந்த கால பின்வரும் செயற்பாடுகள் அனைத்தும் சட்டரீதியாக அவர்களுக்கு நியாயத்தைப்பெற்றுக்கொடுப்பதற்கு தடங்களாக அமைகின்றன அவையாவன.

1.பள்ளியைப்பதிவு செய்வதற்காக அதிகாரமற்றவரிடம் சிபார்சுக்கடிதத்தை பெற்றமை.

2.பள்ளியின் மவ்லவி இரவு வேலைகளில் தங்குவதற்கு கூடபிரதான சிறையதிகாரியிடம் அனுமதி பெற்றமை.

3.நோன்பு காலங்களில் இரவு நேரத்தொழுகைகளுக்கான அனுமதியைப்பெற்றமை.

4.மையத்தை பிரதான வாயிலூடாக பள்ளிக்குள் கொண்டு வருதற்கும் தொழுவிப்பதற்கும் அனுமதி பெற்றமை.

5.பள்ளிக்கான காணியையும் மையவாடிக்காணியையும் பிரித்துத்தரும்படி வேண்டிக்கொண்ட ஆவணங்கள்.

6.மேற்கூறப்பட்ட தேவைகளுக்காக அனுப்பப்பட்ட வேண்டுகோள்களுக்காக சிறைச்சாலை ஆணையாளரினால் அனுப்பப்பட்ட பதில் ஆவணங்கள்.

7.கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இழுத்து மூடப்பட்ட பள்ளியை திறப்பதற்காக சட்டரீதியான நடவடிக்கையெடுக்காமல் இருக்கும் பள்ளி நிருவாகத்தின் அமைதி.(ஒரு letter of demand மூலமாக நாடுபூராகவும் மூடப்பட்ட பல பள்ளிகளை அல்லாஹ்வின் உதவியால் துறந்துள்ளோம்).

8. பள்ளியின் தண்ணீர் மட்டும் மின்சாரக்கட்டணங்களையும் சிறைச்சாலை நிருவாகமே இன்றுவரைக்கும் கட்டிக்கொண்டிருக்கின்றமை.

100% மலாயர்கள் உத்தியோகம் பார்த்த சந்தர்ப்பத்தில் சேவையைச்சீராக செய்வதற்காக சேவையிலிருக்கும் காலத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட தொழுகையிடத்தை பொது மக்கள் பாவனைக்காக அரசாங்கத்திடம் கேட்டு அடம் பிடிப்பது எந்த வகையில் நியாயமாகும்.

அந்தப்பிரதேசத்தில் சிறைச்சாலை எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும் 40பேர்சஸ் மையவாடிக்காணியை மலாய் மக்களின் உன்னத சேவையைக்கருத்தில் கொண்டு அரசாங்கத்திடமிருந்து சட்டரீதீயாகப்பெற்று அதில் குறித்த பள்ளியை நிறுபவதற்கு முயற்சிப்பதே பொருத்தமான விடயமாகும்.

இப்படியான ஆக்க பூர்வமான நடவடிக்கையை விட்டுட்டு எமது பாட்டன் முப்பாட்டன் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய காணி அல்லாஹுக்காக வக்பு செய்யப்பட்டு அதில் பள்ளியை உருவாக்கி அதில் 100 வருடங்களாக சமய கடமைகளைச்செய்து வந்த போது அதிலுள்ளவர்களை விரட்டிவிட்டு புத்தர் சிலையை வைத்து ஓய்வறையாக மாற்றினார்கள் என்று செய்திகளைப்பரப்புவது பச்சை இனத்துவேசமல்லவா?

அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கிகளை நிறப்புவதற்காக எதையும் பேசலாம் அப்பேச்சானது உணர்ச்சி வசப்படுபவர்களை உசுப்பேற்றலாம் ஆனால் உண்மையான விடயங்களை ஆராய்ந்து மக்களுக்கு விழிப்பூட்டுவதே ஊடகங்களின் ஊடக தர்மமல்லவா?.

எது எப்படியிருந்தாலும் “இனத்துவேசத்தை எவர் பேசினாலும் அது குற்றமே!”

3 comments:

  1. மலாயர்கள் செவையிலிருதந்து இல்லாமலாகி எவ்வளவு நீண்ட நாட்கள் இருக்கும்.இருந்தும் ஈஸ்டர் தாக்குதல் நடக்கும் வரை பள்ளி வாசல் இயங்கியது தானே.தொடர்ந்து மூடியே இருந்தாலும் பின்னர் ஏதோ சட்ட ரீதியாகவோ பேச்சுவர்த்தை மூலமாகவோ திறந்து வைக்க முடிந்திருக்கும் தானே.திடிரென புத்தர் சிலையை பள்ளியினுள் வைத்தது பிழை இல்லையா? முஸ்லிம் மலாய் சமூகத்தவர்கள் நாட்டுக்காக நீதித் துறைக்காக சிறைச் சாலை சேவைக்காக நம்பிக்கையுடன் சேவை செய்ததற்கு நன்றிக் கடனுக்காகவாவது மீண்டும் திறக்க வைத்திருக்களாம் இல்லையா? இதில் பாதிக்கப் படுவது பள்ளியில்லாமல் அந்தப் பகுதி முஸ்லிம்களே.
    ஒருவன் தாயைக் கொலை செய்தாலும் அதற்கு சார்பாக பல காரணங்களையும் கூறுவான்.அதே போல் தான் இக் கட்டுரையும்.எவ்வளவு தான் சட்டத் தரணியாய் இருந்தாலும் அரசுக்கு கூஜா தூக்கவில்லை என்று கூறி கட்டுரையை ஆரம்பித்தாலும் இது கூஜா தான்.தான் தூக்குவது கூஜா தான் என்று தெரிந்ததனால் தான் ஆரம்பத்திலேயே கூஜா தூக்க வில்லை எனக் கூறி ஆரம்பிக்கிறார்.

    ReplyDelete
  2. சட்டத்தரணி சறுக்கி ட்கு நன்றிகள்.
    இப்படியொரு அனைவருக்கும் வரும் தகவல்களை பெற்று தந்தமைக்கு நன்றிகள்.
    வாதப்பிரதிவாதங்களை பார்க்கும் போது உங்களது பாகங்கள் விட்டுக் கொடுப்பதற்கு காரணிகளால் சாதகமாய் அமைகின்றது.
    தங்களது நேரத்தை செலவழித்து இதில் ஈடுபட்டதற்காக மக்கள் சார்பாக மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
    உங்களது தொலைபேசி இலக்கத்தை மீண்டும் ஒரு முறை பகிர்ந்து அளியுங்கள் தயவுசெய்து.
    ஒரு சட்டத்தரணி என்றவகையில் உங்களுக்கே உரித்தான உரைநடையில் விளக்கம் விளக்கமாக பகுதி பகுதியாக இந்தக் கட்டுரையை அழகாக தொகுத்து உள்ளீர்கள்.

    ReplyDelete
  3. உண்மையான முஸ்லிமாக வாழ்ந்திருந்தால் பள்ளியென்ன அந்த வலாகமே முஸ்லிம்களுக்கு சொந்தமாகி இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.