Header Ads



மொட்டுக் கட்சியின் வாலில் தொங்கும், பரிதாப நிலையில் மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தமது பலத்தை அறிய தனித்து போட்டியிடாது, மொட்டுக் கட்சியின் வாலில் தொங்கி போட்டியிடும் அளவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் பரிதாப நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று முற்பகல் தனது வீட்டில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். கட்சி சார்பற்ற ஜனாதிபதியை உருவாக்க நாங்கள் அன்று முயற்சித்தோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி கட்சி சார்பானவராக மாறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறிசேன கரைந்து போக நடவடிக்கை எடுத்தார். இதன் பலனாகவே தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேவையான வகையில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுக்கின்றனர். போட்டியிட வாய்ப்பை வழங்குவதா இல்லையா, ஒரு மாவட்டத்திற்கு எத்தனை வேட்பாளர்கள் வழங்குவது என்பதை பொதுஜன பெரமுனவின் தலைவர்களே தீர்மானிப்பர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வெட்கமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்த கட்சிக்கு 15 சதவீதத்திற்கும் மேல் வாக்கு வங்கி இருக்கின்றது. குறைந்தது ஒரு மாவட்டத்தில் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியும் முதுகெலும்பு இருந்தால் தனித்து போட்டியிடலாம்.

அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று பொதுஜன பெரமுனவை உருவாக்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவமதித்தவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று தருவதாக வெட்கமின்றி கூறுகிறார். இதனை அடிக்கடி கூறும் அளவுக்கு அவர் பலவீனமாகியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பணயம் வைத்து, மகிந்த ராஜபக்சவுக்கு மூன்றில் இரண்டு பெற்றுக்கொடுக்க மைத்திரிபால சிறிசேன இணைக்கின்றார் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றாக அழிக்கும் வேலை. பலத்தை காட்ட தனித்து போட்டியிட முடியும். தற்போது மொட்டுக் கட்சியின் வாலில் தொங்கி பரிதாப நிலைக்கு சென்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினை குறித்த வருத்தம் அரசாங்கத்திற்கே இருந்தது. கட்சிக்குள் வெறும் கருத்து மோதல்களே இருந்தன. எமது கூட்டணியின் சின்னம் தொடர்பாக அரசாங்கத்திற்கு பெரிய வலி இருந்தது. நோயாளி குழம்பினாலும் மருத்துவர் குழப்பமடைய மாட்டார்.

அது போல் நாங்கள் குழப்பமடைய மாட்டோம். தற்போது கூட்டணியை அமைக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. சின்னம் தொடர்பான பிரச்சினையே இருக்கின்றது. யானை சின்னத்தில் போட்டியிடுவோம் அல்லது அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவோம். அதுவும் இல்லை என்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்போது பிளவுப்படும் என நினைத்து அரசாங்கத்திற்கு நித்திரை வரவில்லை. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிடுவோம் என விஜேபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. என்ன சேர் நீங்க இப்படி சொலறீங்க! அவரது அறிவையும் அனுபவத்தையும் மொட்டு கட்சிக்கு வழங்கப் போகிறாராமே. மிஸ் பண்ணிராதங்கோ?
    இந்த மனுசன நெனச்சா அழுவதா சிரிப்பதா என்று ஒண்ணுமே புரியல்ல?

    ReplyDelete
  2. அப்பாவித்தனமாக கொல்லப்பட்ட 290 மேற்பட்டவர்களின் உயிருக்குப் பொறுப்புக்கூறி அதற்குரிய நட்டத்தையும், அத்தகைய பாரிய கொலைக்குற்றத்துக்கான உரிய தண்டனையையும் முன்னாள் சனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த நாட்டு பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.