Header Ads



தென்னாசியாவின் முதலாவது தலைவர்

“ஆசியாவின் எதிர்காலம்” சர்வதேச மாநாட்டில் கருத்துரை வழங்கவிருக்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் என்றவகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதல் குறிப்பிடத்தக்கதாக அமையுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.

மே மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறும் “ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இவ்விஜயம் வெற்றிகரமானதாகவும் பயனுறுதிமிக்கதாகவும் அமையுமென்பதற்கு ஜப்பான் அரசாங்கம் உறுதியளிப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் AKIRA SUGIYAMA இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது தெரிவித்தார்.

இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த அரச தலைவர்கள், வர்த்தக துறையினர் மற்றும் கல்விமான்கள் பங்குபற்றவுள்ளனர்.

சுபீட்சமானதொரு வலயத்தை உருவாக்கும் நோக்குடன் வருடாந்தம் இடம்பெறும் இம்மாநாடு, 1995ஆம் ஆண்டு ஆரம்பமானது.

இவ்விஜயத்தின்போது ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுடன் இடம்பெறும் கலந்துரையாடல் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு உதவுமென்றும் தூதுவர் குறிப்பிட்டார். 

ஜப்பான் வர்த்தக சமூகத்துடனான சந்திப்பும் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகுமென்றும் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையை டிஜிட்டல் மயப்படுத்தல், கொழும்பு துறைமுக வடக்கு முனையம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள இயற்கை வாயுத்திட்டம் குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.