Header Ads



ஐதேகவில் இணைய ஹக்கீமுக்கும், எனக்கும் ரணில் கோரிக்கை விடுத்தார்

ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க ஆகிய இருவருடன் சம்பிக்க ரணவக்கவும் தம் ஜாதிக ஹெல உறுமய கட்சியை கலைத்து விட்டு, நேரடியாக ஐதேகவில் இணைவது என்று நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிவானது.
இதேமாதிரி, “ஐதேகவில் அங்கத்துவம் பெற்று நேரடியாக இணையுங்கள்” என்ற கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்க, எனக்கும், நண்பர் ரவுப் ஹக்கீமுக்கும் பல ஆண்டுகளுக்கு முன் விடுத்தார். இருவரும், உடனடியாக அதை நிராகரித்து விட்டோம்.
இன்று, ராஜித, அர்ஜுன ஆகியோர் ஐதேகவில் நேரடியாக இணைந்து கொண்டிருக்கிறார்கள். சம்பிக்க ரணவக்கவும் தன் ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியை கலைத்து விட்டு, கட்சி அங்கத்தவர்களுடன் ஐதேகவில் நேரடியாக இணைய போகிறார். எதிர்வரும் தேர்தலுக்கு முன் அல்லது பின் அது நடைபெறும். இப்போதே அவர், மகரகமை (கொழும்பு) தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். இன்னொரு JHU எம்பியான கரு பரணவிதான, பெல்மதுள்ளை (இரத்தினபுரி) தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.
இந்த பின்னணியில், சம்பிக்க ரணவக்கவை பார்த்தால், அவர் இன்று சஜித் பிரேமதாசா தலைமையில் நாம் அமைக்கும் பரந்த எதிரணி கூட்டணியில், ஒரு பிரதான கட்சி தலைவர்.
இந்நிலையில், சம்பிக்க ரணவக்க, ஒரு “சிங்கள பெளத்த தீவிரவாதி, பேரினவாதி” என்ற கருத்து இப்போது அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. ஓரளவு தமிழர்களும், அதிகளவு தமிழ் பேசும் முஸ்லிம்களும், இந்த கருத்தை இங்கு வந்து வலியுறுத்துகிறார்கள்.
இவர்களிடம் நான் திருப்பி கேட்பது ஒன்றுதான், “அப்படியானால், என்ன செய்ய சொல்கிறீர்கள்?” இதற்கு உருப்படியான பதில் இல்லை.
நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் முன் இன்று பெருந்தொகை தெரிவுகள் இல்லை.
SLPP, UNP, SLFP, JHU மற்றும் JVP, வாசுதேவ, திஸ்ஸ விதாரண, டிவ் குணசேகர ஆகிய இடதுசாரி என அழைத்துக்கொள்ளும் கட்சிகள் உட்பட எல்லா சிங்கள பின்னணி கட்சிகளும், “இந்நாடு ஒரு சிங்கள பெளத்த நாடு” என்ற அடிப்படையிலேயே இன்று செயற்படுகிறார்கள். இந்நாட்டு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள “பெளத்த மதத்திற்கான பிரதான அந்தஸ்து” என்பதில் கை வைக்க இவர்கள் எவரும் தயாரில்லை.
ஆனால், இதற்குள்ளே SLPP என்ற ஆளும் கட்சி கூட்டணி, “சிங்கள-பெளத்தம் மட்டும்” என்பதில் உறுதியாக இருக்கிறது. ஏனைய இன, மதத்தவர் நாம் சொல்வதை கேட்டு, கொடுப்பதை வாங்கிக்கொண்டு, மூடிக்கொண்டு வாழ வேண்டும் என்ற “சிங்கள-பெளத்த நாட்டு கொள்கையை” கடைபிடிக்கிறது.
இன்று UNP/UNF ஆகிய கட்சிகள், இந்த “சிங்கள-பெளத்தம் மட்டும்” என்று எண்ணாமல் தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைத்து “இலங்கை நாட்டு கொள்கையையில்” செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.
எங்கள் கூட்டில் இல்லாவிட்டாலும் கூட, JVPயின் நிலைப்பாடும் இதுவே.
இதில் எங்கள் கூட்டணிக்கு தேவையான சிங்கள-பெளத்த வர்ணத்தை இன்று பூசுபவர், சம்பிக்க ரணவக்கதான். இதனால்தான் இந்த அரசு அவரை முதலில் கைது செய்து சிறையில் அடைத்தது. தமது சிங்கள வாக்கு வங்கியில் ஓட்டை போடுவார் என அவரை கண்டு அரசு பயப்படுகிறது.
சம்பிக்கவை பற்றி இன்று விமர்சிக்கும் பலரை விட எனக்கு அவரை நன்கு தெரியும். பலமுறை நாம் கொள்கை அடிப்படையில் முரண்பட்டுளோம். மோதிக்கொண்டுள்ளோம்.
முன்பு ஒருமுறை, புலிகளின் கை ஓங்கி இருந்த வேளையில், பாராளுமன்றத்தில் பேசிய முன்னாள் கூட்டமைப்பு எம்பி கஜேந்திரன் (இப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி), அப்போது யாழ்குடாவில் நிலைப்பெற்றிருந்த 35,000 சிங்கள இராணுவ வீரர்களையும் கொன்று சவப்பெட்டியில் போட்டு கொழும்புக்கு அனுப்புவோம் என ஆவேசமாக உரையாற்றி இருந்தார்.
அவரது இந்த கருத்து சபையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்த, இந்த கருத்து, பதிவேட்டிலிருந்து (ஹன்சார்ட்) அகற்றப்பட்டது.
இதையடுத்து ஒருமுறை, டெய்லிமிரர் பத்திரிக்கையில் செவ்வி அளித்த சம்பிக்க ரணவக்க, “35,000 சிங்கள இராணுவ வீரர்களையும் கொன்று சவப்பெட்டியில் போட்டு கொழும்புக்கு அனுப்புவதாக கொழும்பு எம்பி மனோ கணேசன் கூறுகிறார். அப்படி நடந்தால், கொழும்பில் வாழும் தமிழர்கள் உடனடி பதிலடி ஆபத்தை எதிர்நோக்குவார்கள்” என்று கூறி இருந்தார்.
நான் கூறாததை நான் கூறியதாக கூறிய சம்பிக்க ரணவக்கவுடன் நான் கடுமையாக முரண்பட்டேன். பத்திரிகை என் மறுப்பை வெளியிட்டது.
காலங்கள் யாருக்காகவும் நிற்பதில்லை. அது வேகமாக ஒடுகிறது. புதிய படிப்பினைகளை, புதிய அனுபவங்களை, வேகமாக மனிதருக்கு காலம் கொண்டு வருகிறது. புது போதனைகளை தருகிறது. ஆகவே மனிதர்களும் மாறுகிறார்கள். என்னுள்ளும் மாற்றம் இருக்கிறது.
இன்று நான் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் பேசி போவதை போல், மிக சுலபமாக சிங்கள மக்கள் மத்தியில் சிங்களம் பேசி போகிறேன். எனக்கு அவர்கள் மிகுந்த வரவேற்பையும் தருகிறார்கள். “சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கூட்டிணைத்து, இலங்கை நாட்டை கட்டி எழுப்புவோம்” என்பதுதான் அவர்களை நோக்கிய என் கோரிக்கை. இதுதான் என் வழி.
இந்நாட்டில், இனவாதம், மதவாதம், எல்லா இன, மத அணிகளிடமும் இருக்கிறது. ஆக, சிங்கள பெளத்தர்கள் மட்டுமே இனவாதிகள். நாம் எல்லோரும் சுத்தம் என்பதில்லை. வரலாற்றில் இருந்து பாடம் படித்து நாம் எல்லோரும் மாறுகிறோம். அவர்களும் மாறுகிறார்கள்.
இன்று எம்முன் உள்ள, “சிங்கள-பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை நாம் நிராகரிக்கிறோம். முழு இலங்கை தாய்நாட்டு கொள்கையை ஏற்கிறோம். எங்கள் முன், நான் சொல்வது போல், பல தெரிவுகள் இல்லை. இருக்கும் சில தெரிவுகளில் ஒன்றை ஏற்கிறோம்.
"மீண்டும் ஆயுதம் தூக்கும்" தெரிவு எனக்கு உடன்பாடானதல்ல. "நாட்டை விட்டு வெளியேறும்" தெரிவும் எனக்கு உடன்பாடானதல்ல. "சிங்கள-பெளத்தம் மட்டும்" என்ற தெரிவும் எனக்கு உடன்பாடானதல்ல.
எல்லாம் கடந்து போகும். போகின்றன. எமது எதிரணி கூட்டணியில், நண்பர் சம்பிக்க ரணவக்க முக்கியமான பங்காளியாக செயற்படுவார்! Mano Ganesan Mp

3 comments:

  1. Great practical article.

    ReplyDelete
  2. சம்பிக்கவை விட புழுத்த இனவாதி இவன். சம்பிக்க நேரடியாக இனவாதம் பேசும் ஒரு பெளத்த தேசியவாதி ஆனால் இவன் முன்னொன்றும் பின்னொன்றும் பேசி கழுத்தறுக்கும் நயவஞ்சக நடிகன். முஸ்லிம்களுக்கு அறிவுரைகூற உனக்கு எந்த உரிமையும் இல்லை

    ReplyDelete
  3. Mr Mano, you are correct. We have limited choice. We can't accept everyone and we can't reject everyone. We have to find the less harmful one and join in the political system.

    ReplyDelete

Powered by Blogger.