February 21, 2020

இலங்கையில் ஹஜ் ஏற்பாடு, மாபியாக்களின் தோற்றம், கேவலப்படுத்தப்பட்ட இபாதத், ACJU பராமுகம்

- பேராசிரியர், மௌலவி. எம்.எஸ்.எம்.ஜலால்தீன் -

'(நபியே!) இப்றாஹீமை நம்முடைய வீட்டின் சமீபமாக வசிக்கும்படி செய்து, (அவரை நோக்கி) 'நீங்கள் எனக்கு எவரையும் இணையாக்காதீர்கள். என்னுடைய (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று குனிந்து சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள்' என்று நாம் கூறிய சமயத்தில்',

'(அவரை நோக்கி)' ஹஜ்ஜூக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால் நடையாகவும், உங்களிடம் வருவார்கள். இளைத்த ஒட்டகங்களின் மீது வெகுதொலைதூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள். (சூறா அல்ஹஜ் 26-27)

இஸ்லாமிய வரலாற்றில் புனித ஹஜ்ஜூக்குரிய ஏற்பாடுகளும் அது ஒரு இறை கட்டளையாக பிரகடனம் செய்யப்பட்ட நிகழ்வுகளும், இஸ்லாத்தின் தூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றோடு பின்னி பிணைந்து இருப்பதை மேற்கூறிய சூறத்துல் ஹஜ்ஜின் வசனங்கள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன. நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட இறைவனின் சோதனைகளும், அச்சோதனைகள் அனைத்தையும், தனது பூரணமான இறை நம்பிக்கை, பயபக்தி இறைவனுக்காக எதையும் இழக்கத் துணிந்த அவர்களின் தியாக வாழ்வு என்பவற்றினூடாக வெற்றி கொண்ட நிகழ்வுகளே இப்போது நாம் நிறைவேற்றுகின்ற ஹஜ்ஜின் கடமைகள் என்பதை சாதாரண ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்துள்ளனர். ஹஜ்ஜின் முக்கியமான கடமைகளான இஹ்றாம் அணிவது, தவாப் செய்வது 'ஸஃயு' எனப்படும் தொங்கோட்டம் ஓடுவது, பிராணிகளை அறுத்து 'உழ்ஹிய்யா' கொடுப்பது, ஸம்ஸம் நீர் அருந்துவது என்பன போன்ற அனைத்து கடமைகளும் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்வின் படிப்பினைகளாகவே அல்லாஹ்வால் எமக்குக் கடமையாக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஹஜ் கடமை என்பது தியாகத்தின் உச்சகட்டமாக இஸ்லாமிய அறிஞர்களால் சான்றுப்படுத்தப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தனது அன்பு மனைவியை பிரிந்தமை, தனது அன்பு மகனை அறுத்து பலியிட துணிந்தமை என்பனவெல்லாம் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தின் உச்சக்கட்டத்தை எமக்கு எடுத்துக் காட்டுவதோடு, ஒவ்வொரு வருடமும் மக்காவில் இடம்பெறும் ஹஜ் எனப்படும் புனித கடமையோடு ஒவ்வொரு ஹாஜியின் செயல் வடிவிலும் அது எமக்குள் என்றும் மறக்க முடியாத நிகழ்வாக புத்தாக்கம் பெறுகின்றது.

தியாகக் கடமையில் ஏற்பட்ட பாதிப்பு

இவ்வாறு தியாகத்தின் உச்சத்தை எடுத்துக்காட்டும் புனித ஹஜ் கடமை இன்று ஒரு களியாட்டத்தை நோக்கிய சுற்றுலாவாக இலங்கையில் மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறு மாற்றம் பெறுவதற்கான காரணங்களை ஓரளவாவது விளக்க இக்கட்டுரையின் மூலம் முயற்சிக்கின்றேன். (இன்ஷா அல்லாஹ்). எமக்குத் தெரிந்த வகையில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் ஹஜ்ஜூக்கு ஹஜ்ஜாஜிகளை அழைத்துச் செல்ல ஒரு சில பிரயாண முகவர்கள் மட்டுமே ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு புனிதமான சேவையை செய்கின்றோம் என்ற உணர்வோடு, எவ்வித இலாப நோக்குமற்று இச்சேவையை செய்து வந்ததால் அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் மதிப்புக்குரியவர்களாகவும், அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் 'புனிதக் கடமைகளின் வழிகாட்டிகள்' என்றே உணர்வே மிகைத்திருந்தது. இதன் மூலம் ஹஜ்ஜாஜிகளும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய - சர்வதேச ரீதியாக மிகக் குறைந்த - கட்டணத்திலேயே தமது வாழ்வில் ஒருமுறை மாத்திரம் நிறைவேற்றுவது கட்டாயக் கடமையான (வசதி படைத்தோருக்கு) இக்கடமையை நிறைவேற்றி வந்தார்கள். அதற்கான சகல வசதிகளையும் அரசாங்கமும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஹஜ் பிரயாண முகவர்களிடையே எவ்வித போட்டியோ, பொறாமையோ, பொய்யான வாக்குறுதிகளோ, ஹஜ் செய்பவர்களை தமது பக்கம் ஈர்ப்பதற்கான வானொலி, டெலிவிஷன், பத்திரிகை விளம்பரங்களோ அப்போது எதுவும் இருக்கவில்லை.

ஹஜ் பிரயாண மாபியாக்களின் தோற்றம்

இன்று 'மாபியாக்கள்' என்ற சொல், எமது ஊடகங்களில் பல்வேறு விதமான மிகக் கேவலமான மனித நாகரிகத்துக்கு கேடு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினருக்கு பொதுவாக கூறப்படுகின்றது. 'தமது செயற்பாடுகளில் சட்ட விரோத பயங்கரவாத வழிகளில் செயற்படும் குழுவினரே மாபியா' என வரைவிலக்கணப்படுத்துகின்றது. இன்று ஹஜ் பிரயாண முகவர்களாகச் செயற்படுபவர்களில் பலர், இஸ்லாமிய விழுமியங்களை மட்டுமல்ல, சாதாரண மனித விழுமியங்களைக் கூட கவனத்தில் எடுக்காது, எவ்வழியிலாவது அதிக பணத்தை ஈட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனேயே, மிக அதீத வேட்கையோடு செயற்படுவதனாலேயே இவர்களை 'மாபியாக்கள்' என அழைப்பதை தவிர வேறு சொற்பிரயோகம் எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு இவர்கள் செயற்படுவதை என்னால் பின்வரும் நிலைகளில் உறுதிப்படுத்த முடியும்.

குறுகிய காலத்தில் அதிக உச்ச வருமானம்

சாதாரணமாக ஒரு தொழிலில் ஈடுபடும் ஒருவன், நாட்டின் சட்ட ஒழுங்குகளை பின்பற்றி தொழில் செய்யும் போது, அவனால் அதிக இலாபத்தை ஈட்ட முடியாது. அதிலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் அவன் மிக அதிகமான கடப்பாடுகளுடன் ஹறாம், ஹலால் பேணி ஈடுபட வேண்டியுள்ளதால், அவனாலும் மிக அதிகமான கொள்ளை இலாபத்தை ஈட்ட முடியாது. இவ்வளவுக்கும் அவனது பண முதலீடு, நெற்றி வியர்வை சிந்திய உடலுழைப்பு, குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு தியாகங்கள் என்பன எல்லாம் அங்கு முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் ஈடுபடும் ஒருவர் மிகக் குறுகிய காலத்தில் பல கோடி ரூபாக்களை சம்பாதிப்பதை, இத்தொழிலில் ஈடுபடும் பலரை நாம் அவதானிக்கும் போது, மிக இலகுவாக கண்டு கொள்ளலாம். சாதாரணமாக தாம் அழைத்துச் செல்லும் ஒரு ஹாஜியிடமிருந்து, அனைத்து செலவுகளும் போக ஒரு இலட்ச ரூபாயை நிகர இலாபமாக ஹஜ் முகவரினால் பெற்றுக் கொள்ள முடிகின்றது. எமது ஊர்களிலேயே ஹஜ் முகவர்களாக செயல்படும் பலர், சாதாரண நிலையிலிருந்த தமது வாழ்வுச் சூழலை, ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் ஈடுபட்ட மிகக் குறுகிய காலத்திலேயே பல்வேறு வாழ்க்கை வசதிகளையும் பெற்று, ஊரிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக திகழ்வதை என்னால் நிரூபிக்க முடியும். தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் வாகனங்கள், பலகோடி செலவிட்ட ஆடம்பர வீடுகள், கொழும்பில் வீடுகள், வங்கிகளில் கோடிக்கணக்கில் பண முதலீடு என்பனவெல்லாம் எனது கூற்றை நிரூபிக்கும் சான்றுகளாகும். இவ்வாறான ஹஜ் பிரயாண முகவர்கள் பலர், தாம் ஏற்கனவே வகித்து வந்த நிரந்தர வருமானமுடைய, கொழுத்த சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தையே துச்சமாக தூக்கி எறிந்து விட்டு ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் நிரந்தரமாக ஈடுபடுபவர்களாகும். அண்மையில் ஹஜ் பிரயாண முகவர் தொழிலில் ஈடுபடும் ஒருவர், மற்றொருவருடனான வாய்த்தர்க்கத்தின் போது, அவரையறியாமலேயே ஹஜ் பிரயாண தொழிலின் மூலம் தான் சம்பாதித்த பல சொத்துக்களைப் பட்டியலிட்டு காட்டியதை என்னால் நிரூபிக்க முடியும். இவ்வாறு கொள்ளை இலாபமீட்டும் தொழிலாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஒரு புனிதமான சேவையாக, குறைந்த இலாபத்துடன் வழிநடத்திச் செல்லும் பல ஹஜ் பிரயாண முகவர்களும் எமது நாட்டில் உள்ளதையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு 'துஆ'வும் செய்கின்றேன்.

ஹஜ்ஜாஜிகளை கவரும் விளம்பரங்கள்

இன்று இலங்கையிலுள்ள வானொலி, தொலைக்காட்சி, தனசரிப் பத்திரிகைகளில் எல்லாம் ஹஜ் பிரயாண முகவர்களின் விளம்பரங்களே நிறைந்து காணப்படுகின்றன. ஆதிகமான பணத்தை செலவிட்டு செய்யப்படும் இவ்விளம்பரங்கள் மூலமே, ஹஜ் பிரயாண முகவர் தொழில் எவ்வளவு இலாபம் தரக்கூடியது என்பதை எம்மால் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும், ஒரு இஸ்லாமிய அதிகாரி பின்வருமாறு கூறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வருமானத்தில் அதிக வருமானம் முஸ்லிம்களின் விளம்பரங்கள் மூலமாகவே பெறப்படுவதாகவும், அதிலும் 95 வீத வருமானங்கள் ஹஜ், உம்றா பிரயாண முகவர்களின் விளம்பரங்கள் மூலமாகவே கிடைப்பதாகவும் ஒழிவுமறைவின்றிக் கூறினார். அந்தளவுக்கு தமது ஹஜ், உம்றா பிரயாண தொழிலை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி, அதிக வாடிக்கையாளர்களை தம்பக்கம் கவர்வதில் இவர்கள் குறியாக உள்ளனர். உவர்கள் விளம்பரப்படுத்தும் சில வாசகங்கள் பின்வருமாறு உள்ளன.

'ஹஜ்ஜாஜிகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிட வசதி'
'கஃபதுள்ளாவுக்கு மிக அண்மையில் ஹோட்டல்கள்'
'தினமும் வாய்க்கு ருசியான பிரயாணி சாப்பாடு மற்றும் உள்ளுரில் கிடைக்க கூடிய வகையில் சாப்பாட்டு ஒழுங்குகள்'
'நேரடியாக மக்கா மதீனாவுக்கு செல்லக்கூடிய விமான சேவை வழங்குதல்'
'உங்கள் ஊரிலிருந்தே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய குளிரூட்டப்பட்ட பஸ் வசதிகள்'

இவ்வாறு பல விளம்பரங்கள், இவைகளில் எதுவுமே புனிதமான - தியாகத்தின் உறைவிடமான - ஹஜ் இபாதத்தின் உயிரோட்டத்தை நினைவுபடுத்துவதாக அமையாதது மட்டுமன்றி, அக்குறிக்கோள்களை மாசுபடுத்துவதாகவே அமைந்துள்ளன.

மஸ்ஜித், குத்பா மிம்பர்களிலும் விளம்பரம்

ஹஜ், உம்ராவுக்கான விளம்பரம் செய்யும் முக்கிய தலங்களாக இன்று, மஸ்ஜிதுகளும், பள்ளிவாயல் மிம்பர்களும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவைகளில் செய்யப்படும் விளம்பரங்களில் ஹஜ், உம்ரா பற்றி வரும் பெருமானார் பொன்மொழிகளை மிக ஆணித்தரமாகவும், மிகைப்படவும் கூறி, இவ்விரு இபாதத்துக்களுக்குமாக பெருமானார் கூறியுள்ள நன்மைகளை ஹஜ், உம்ராக்களில் ஈடுபடுவோர் அடையக்கூடிய நன்மைகளாகக் கூட்டிப் பெருக்கி மிக அழகாக உரையாற்றுவதை எமதூர் மஸ்ஜித்துக்களில் அடிக்கடி காணலாம். உதாரணமாக கஃபதுள்ளாவில் அல்லது மஸ்ஜிதுன் நபவியில் ஒரு ரக்கஅத் தொழுதால் எவ்வளவு நன்மை கிடைக்குமென நபி பெருமானார் கூறியுள்ளார்களோ அதை அவ்விரு புனித தலங்களிலும், அவர்கள் தங்கும் முழு நாட்களும் தொடர்ச்சியாக செய்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என கூட்டிப் பெருக்கி, அதை அவர்கள் செலவழிக்கும் உம்ராவுக்கான செலவு (சுமார் 150,000ஃ-), ஹஜ்ஜாஜிக்கான செலவு (சுமார் 6½ இலட்சம் ரூபா) என்பவற்றுக்கு நிகரப்படுத்தி, இப்பணம் வெறுமனே இருந்தால் மறுமையில் எமக்கு இவ்வளவு நன்மைகளை எமக்கு ஈட்டித்தருமா? என மிக அழகாக, சாதாரண மனிதர்களை கவரக்கூடிய வகையில் கேள்வி எழுப்பி, அவர்களையும், மற்றவர்களையும் இக்கடமையை உடனடியாகச் செய்யத்தூண்டும் வகையில் தமது பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவர்களின் உரையும், காட்டும் கணக்கும் மிகச் சரியாக அமைந்திருந்தாலும், அவர்களின் உண்மையான உள்நோக்கம், ஹஜ், உம்ரா நிறைவேற்றுபவர்களிடமிருந்து எப்படி பணத்தை சுருட்டலாம் என்பதாகவே அமைந்துள்ளன. இந்த உரைக்காக அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகள், அவர்களின் அக்கறை, ஆவேசம் என்பனவெல்லாம் வெளிப்படையாகவே அவர்களது உள்நோக்கத்தை எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இதற்காக மிகச் சிறந்த முறையில் 'பயான்' செய்யக்கூடிய உலமாக்களைக் கூட ஒவ்வொரு பிரயாண முகவரும் தம்மோடு தொடர்ந்து வைத்திருந்து, இவ்விடயத்தில் அவர்களுக்கு பயிற்சியளிப்பதையும் நாமறிவோம். ஹஜ், உம்ராவின் மூலம் அதிக பணம் ஈட்டுவது ஒன்று மட்டுமே இவர்களின் முழு நோக்கமாகும்.

பொய்யான வாக்குறுதிகள்

ஹஜ்ஜாஜிகளை தொடர்ந்து கவருவதற்காக அவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு என்ற பெயரில், ஹஜ்ஜூக்கு செல்வதற்கு முன்பே, ஆடம்பரமான ஹோட்டல்கள், வரவேற்பு மண்டபங்களுக்கு அவர்களை வரவழைத்து மிக அதிக செலவில் விஷேட சாப்பாடு வைபவங்களை ஹஜ் முகவர்கள் பலமுறை ஒழுங்கு செய்கின்றனர். அவ்வருடம் ஹஜ்ஜூக்கு செல்வதற்கு பதிவு செய்துள்ளவர்களை மட்டுமன்றி, அடுத்தடுத்த வருடங்களில் ஹஜ்ஜூக்கு செல்லக் கூடியவர்களாக தாம் கருதும் முக்கிய பிரமுகர்களையும் அந்த விருந்து வைபவத்துக்கு மிக திட்ட முறையில் அழைக்கின்றனர். இவ்வாறு சுமார் 70 ஹஜ்ஜாஜிகளை அழைத்துச் செல்லும் ஒரு முகவர், ஒரு வைபவத்துக்கு மட்டும் வரவேற்று மண்டபம் உட்பட செலவுகளுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடுவதை என்னால் நிரூபிக்க முடியும். இவ்வாறு பல விருந்து வைபவங்கள் ஹஜ் பிரயாணத்துக்கு முன்னாலேயே முகவர்களால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இவ்வாறான வைபவத்தின் ஓர் அங்கமாக தம்மோடு, இத்தொழிலில் உறுதுணையாக ஈடுபடும் ஒரு மௌலவி மூலம் ஒரு வழிகாட்டல் பயானும் ஒழுங்கு செய்யப்படும். இறுதியில் ஹஜ் முகவர், தமது ஹஜ் குழுவில் இணைந்து கொண்டோருக்கு என்னென்ன வசதிகள், ஏனைய சரித்திர இடங்களுக்கான பிரயாணங்கள் பற்றியெல்லாம் மிக விஷேடமாக உரையாற்றுவார்கள். அவர்களின் உரைகள் எல்லாம் அவ்வருடம் ஹஜ்ஜூக்கு செல்பவர்களுக்கு மட்டுமன்றி, அடுத்த வருடம் செல்ல உத்தேசித்துள்ளவர்களுக்கும் நாவூறும் வகையில் மிக கவர்ச்சிகரமானதாக அமையும். அவ்வாறு அங்கு வழங்கப்படும் வாக்குறுதிகளில் முழுவதும் நிறைவேற்றப்படுவதில்லை. சிலவேளைகளில் அவ்வாறு வாக்குறுதி வழங்கிய சில வரலாற்றுப் பிரயாணங்களுக்கு மேலதிக கட்டணங்களையும் ஹஜ்ஜாஜிகளிடம் அறவிடுவதை நான் கண்டுள்ளேன். இவ்வாறான பொய்யான பல வாக்குறுதிகளை, இப்புனித கடமையிலே வழங்குவதை பல ஹஜ் முகவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜூக்கு சென்று வந்த பல ஹஜ்ஜாஜிகளை நாம் சந்தித்து உரையாடுகின்ற போது, ஹஜ் முகவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், பொய்யும், புரட்டும் நிகழ்ந்த தமது அனுபவங்களையும், புனிதமான கடமையை நிறைவேற்றி வந்த நாம் நாவடக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட கைவிட்டு, மிகப் பகிரங்கமாக கதைப்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம்.

கஃபதுள்ளாவில் நடக்கும் மோசடிகள்

2014ம் ஆண்டில் நான் ஹஜ்ஜூக்கு சென்ற போது கட்டாயமாக கொடுக்க வேண்டிய குர்பானி (தம்மு) கொடுப்பதற்காக எமது குழுவில் ஐவரை தெரிவு செய்தார்கள். தொடர்ந்து தவாப், திலாவத் ஏனைய இபாதத்துகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாம், ஹஜ் முகவரோடு குர்பானி ஆடுகளை பெறக்கூடிய (ஏற்கனவே பணம் கொடுத்து ஓடர் செய்யப்பட்ட) இடத்துக்குப் போய் பல மணித்தியாலம் காத்திருந்தும், குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்ட மௌலவியால் ஆடுகள் கொண்டு வரப்படவில்லை. மட்டுமன்றி, அவரிடம் பணம் கொடுத்த வேறு சில முகவர்களும் ஆடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பல நூற்றுக்கணக்கான ஆடுகளை விநியோகிக்கும் ஓடர்களை பெற்ற அவர் அப்போது தலைமறைவாகியுள்ளதை அறிந்து அன்று முழுவதும் எமது பெறுமதியான நாட்கள் வீணாக கழிந்தன. இறுதியாக நாமே வேறொரு இடத்துக்குச் சென்று புதிதாக ஆடுகளைப் பெற்று குர்பானி கொடுத்து எமது இருப்பிடம் திரும்ப இரவு நேரமாகிவிட்டது. குர்பானிக்காக மக்காவில் இயங்கும் வங்கிகளில் பணம் செலுத்தும் நடைமுறை உள்ளபோதும், ஹஜ் முகவர்கள் தமது மோசடி உழைப்புக்காக அதற்கு ஹஜ்ஜாஜிகளை விடுவதில்லை. இவ்வாறான பல மோசடிகள் மக்கா மதீனாவில் ஹஜ் முகவர்களால் இடம்பெறுகின்றன.

அரசியல் மயப்படுத்தப்பட்ட இபாதத்

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையின் அரசியலிலும், சமூக தளத்திலும் பேசப்படும் முக்கிய விடயமாக ஹஜ் வணக்கம் மாறியுள்ளது. அடுத்தடுத்து வந்த பல அரசாங்கங்களில் ஹஜ் ஏற்பாட்டுக்கென புதிய புதிய அமைச்சுகளும் ஏற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு, ஆளுக்காள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தவதுடன் மட்டுமல்லாது, ஹஜ் முகவர்களால் பல வழக்குகள் பல வருடங்களில் தொடரப்படுமளவுக்கு ஹஜ் பிரயாண ஒழுங்குகள், முகவர் மாபியாக்களிடையே மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இன்றுவரை இதற்கான தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை மட்டுமன்றி, ஹஜ்ஜாஜிகள் ஹஜ் பிரயாணத்துக்கென செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இன்று ஒரு ஹாஜி தனது முகவருக்கு மாத்திரம் ஆறரை இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வதிகரிப்புக்கான பல உள்நாட்டு, வெளிநாட்டு காரணங்கள் இருப்பதையுமு; நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட, ஹஜ் முகவர்களின் அதிக இலாபமீட்டும் பேராசையே இவ்வதிகரிப்புக்கான 70மூ வீத காரணமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு முகவரும் பல வழிகளில் போட்டியிடுகின்றனர். எதிர்காலத்தில் பல கொலைச் சம்பவங்கள் கூட ஹஜ் பிரயாண முகவர்கள் மூலம் ஏற்படக்கூடிய அளவுக்கு இத்தொழிலில் பலமான போட்டித் தன்மை காணப்படுகின்றது. இலங்கையில் ஹஜ் பிரயாணத்தில் வருடாந்தம் ஹஜ்ஜாஜிகளால் (6 இலட்சம் ஒ 4000) 2400 மில்லியன் ரூபாக்கள் முதலீடு செய்யப்படுவதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

நீதிமன்ற வழக்குகளில் கேவலப்படுத்தப்பட்ட ஹஜ் இபாதத்

ஹஜ் முகவர்களால் அரசாங்க ஹஜ் கமிட்டிக்கு அல்லது அமைச்சுக்கு எதிராக கடந்த காலங்களில் மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மீயுயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், என்பவற்றில் பல வழக்குகள் தொடரப்பட்டு, வாதாடப்பட்டு வந்ததை நாம் பலமுறை ஊடகங்களின் மூலம் அறியக் கிடைத்தது. துரதிஷ்டவசமாக, இவ்வாறான நீதிமன்றங்களின் நீதிபதிகள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் எல்லோரும் (95மூ) அந்நிய மதத்தவர்கள் மட்டுமன்றி, வழக்குகளுக்கு வருபவர்களும் கூட பெரும்பாலும் அந்நிய மதத்தவர்களாகவே உள்ளனர். இங்கு நடைபெறும் ஹஜ் உம்ரா பயண முகவர்களின் வழங்குகளின் வாதாட்டங்களின் போது, முஸ்லிம் சமூகமே தலைகுனியுமளவுக்கு விடயங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டதோடு, மறுநாள் வெளிவரும் குறிப்பாக சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் கூட இவ்விடயங்கள் முக்கிய தலைப்பு செய்தியாகவும் இடம்பெற்று இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தையும் ஹஜ், உம்ரா போன்ற கடமைகளையும் முழு நாடே சந்தி சிரிக்குமளவுக்கு இவர்களால் கேவலப்படுத்தப்பட்டதையும் நாமறிவோம்.

மாற்றத்தை வேண்டி

ஹஜ் பிரயாண முகவர்களின் விடயம் தொடர்ந்து வந்த பல அரசாங்கங்களின் பேசு பொருளாகக் காணப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட புதிய அரசாங்கத்தின் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், ஹஜ் பிரயாணத்துக்கென புதிய கமிட்டி ஒன்றை தெரிவு செய்துள்ளதோடு, ஹஜ்ஜாஜிகளின் நலன் சார்ந்த பல விடயங்கள் பற்றி முதன் முறையாக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கதே. அதில் முக்கியமாக ஒரு ஹாஜியின் பிரயாண செலவை ஐந்து இலட்சமாகக் குறைக்க வேண்டும் என்பதும், ஹாஜிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பை முழுமையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஹஜ் கமிட்டியே ஏற்க வேண்டும் என்பதும் மிகவும் வரவேற்கத்தக்க விடயங்களாகும். எமது அண்டைய நாடான இந்தியாவில் கூட ஹாஜிகளை குறைந்த செலவில் அரசாங்க ஹஜ் கமிட்டியினூடாக அழைத்துச் செல்லும் ஏற்பாடு பல சகாப்தங்களாக நடைபெற்று வருகின்றன. எனது கட்டுரையில் கூறிய பல மோசடிகள், மாபியா செயற்பாடு, கொள்ளை இலாப மீட்டல் போன்ற பல மோசமான செயற்பாடுகளுக்கு புதிய அரசாங்கமும் பிரதம மந்திரியும் முன் மொழிந்துள்ள இவ்வேற்பாடுகள் முற்றுப் புள்ளி வைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். எனினும் பல எதிர் விளைவுகளையும் நாம் இதில் எதிர்பார்க்கலாம். அதற்கான எதிர் விளைவுகளை தவிர்ந்து கொள்ளக்கூடிய சில ஆலோசனைகளை பின்வருமாறு முன் வைக்கின்றேன்.

ஹஜ்ஜூக்கு பதிவு செய்யும் நடைமுறையை ஒவ்வொரு ஊரிலுமுள்ள பிரதேச காரியாலயம், குறிப்பாக முஸ்லிம் சமூக, கலாசார உத்தியோகத்தர் மூலம் மேற்கொண்டு பதிவுகளை பெறலாம். அதற்காக அவ்வூழியருக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளையும் வழங்கலாம்.

ஒவ்வொரு ஊரிலுமுள்ள பள்ளிவாயல் நிர்வாகம், உலமா சபைகளின் ஒத்துழைப்பையும் பெறலாம். ஹஜ் செய்பவர்களுக்கான விஷேட சொற்பொழிவுகளை இந்நிறுவனங்களின் மூலம் ஏற்பாடு செய்வதோடு அதற்கான கொடுப்பனவுகளையும் வழங்கலாம்.

ஹஜ்ஜாஜிகள் மக்கா, மதீனாவில் தங்குவதற்கான போதுமான ஹோட்டல்கள், தங்குமிடங்களை எவ்வித குறையுமின்றி, முற்பதிவு செய்வதற்கான முன்னேற்பாடுகளை ஹஜ் கமிட்டி மிகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும்.

அவ்வாறே விமானப் பிரயாணத்துக்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அதிக விமானப் பதிவுகள் செய்யப்படும் போது அதிகளவிலான விலைக் கழிவுகளும் எமக்குக் கிடைக்கும்.

ஹஜ் ஒழுங்குக்கென சவூதியில் செயற்படும் அமைச்சர், அமைச்சு, முஅல்லிம், முவத்திப் போன்றோரோடு, இலங்கை அரசாங்கத்தின் அனுமதி பெற்ற ஹஜ் கமிட்டி ஊடாக அரச உத்தியோக பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும்.

இலங்கை ஹஜ் கமிட்டியில் மிகவும் தைரியமும், அனுபவமும் தகைமையும் கொண்ட உறுப்பினர்களின் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஹஜ்ஜின் இறுதியில் ஒவ்வொரு ஹாஜியிடமும் வினாக்கொத்தின் மூலம் (ஞரநளவழைnயெசைந) அவர்களின் கருத்துக்களை ரகசியமாகப் பெற்று எதிர்காலத்தில் மேலும் பல நல்ல நடைமுறைகளை அமுல்படுத்தலாம். 

ஜம்இய்யத்துல் உலமாவின் பராமுகம்

ஹஸ் பிரயாண விடயத்தில் பல இழு பறிகள் தொடர்ந்த வண்ணம் உள்ள போதும், இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இவ்விடயத்தில் இன்றுவரை பராமுகமாகவே இருந்து வருகின்றது. புதிய அரசாங்கத்தால் இப்போது கூறப்படும் முன்மொழிவுகளைக் கூட அவர்கள் சிலவேளை எதிர்க்க முற்படலாம். ஏனெனில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முக்கிய பதவிகளில் உள்ள பலர் இலங்கையின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற ஹஜ் முகவர்களாக உள்ளார்கள் என்பதையும், உலமா சபை அவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

'அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்'

2 கருத்துரைகள்:

If any writer is being called a professor he should also reveal his speciality and other details as well. Jaffna Muslim should publish these in future including the e mail of the writer.this is what other news sites are doing.otherwise someone may hoodwing the readers by fake titles

It all goes to SAUDI GOVERNEMT and it's ineptitude leadership and policy makers who cannot administrate this event in any professional manners in and outside Saudi Arabia. They have made a lot in HAJJ facilities but agents in all countries use this ibada as trade and make fortunate

Post a comment