Header Ads



2/3 பெரும்பான்மை பெற அரசாங்கம் முன்னெடுத்துள்ள, தீர்மானங்கள் முற்றிலும் தவறானதாகும்

(இராஜதுரை  ஹஷான்)

 பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறும் நோக்கில் அரசாங்கம் பொருளாதார ரீதியில் தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் முற்றிலும் தவறானதாகும்.

இந்நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் அடிப்படை செலவுகள்  அனைத்தையும் குறைத்துக் கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று 5 இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறும் நோக்கில்   பொருளாதாரம் ரீதியில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் இன்று   நுகர்வோர், வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் வட்டி மற்றும் சம்பளம் செலுத்திய   பின்னர் தேசிய வருமானம் இல்லாமல் போன ஒரே அரசாங்கமாக  நடப்பு அரசாங்கத்தினை குறிப்பிடலாம்.

பொருளாதாரம் மற்றும் தேசிய வருமானம் ஆகியவை தொடர்பான சவால்கள் இரண்டு வகைப்படும்.

நாட்டின்  தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது வியத்மன( நிபுணர்களின் குழு)  ஆகியோரது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது.

நல்லாட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக குற்றஞ்சாட்டும் வியத்மக உறுப்பினர்கள் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தேசிய பொருளாதாரத்தின் நிலைமை எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பில் கருத்துரைப்பதில்லை. 

10வருட கால ஆட்சியில்  தேசிய பொருளாதாரம் எதிர்க்கொண்ட சவால்கள், மற்றும் நெருக்கடிகளுக்கு 2015ம் ஆண்டு  நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு  கூற வேண்டிய  நிலை தோற்றம் பெற்றன.

தேசிய பொருளாதாரம் தொடர்பான  கொள்கைகள் பாரம்பரிய அடிப்படையிலே இன்றும் நாம் பின்பற்றுகின்றோம். நல்லாட்சி அரசாங்கமும்,  நடப்பு அரசாங்கமும் பழைய பொருளாதார கொள்கைகளுக்கு அமையவே செயற்பட்டன, செயற்படுகின்றன. புதிய பொருளாதார கொள்கை முறைமை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு பல்வேறுப்பட்ட அரசியல் மற்றும் பொதுக்காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.