Header Ads



பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றியில் முஸ்லிம் மக்கள் பங்காளர்களாக வேண்டும் y

கேள்வி: குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களின் நிலை எவ்வாறுள்ளது?  

பதில்: இம்மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் மாகாணத்தில் உள்ள எல்லா மக்களுமே நல்ல பண்பு மிக்கவர்கள். சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழுகின்றார்கள்.  

இம்மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்து கொள்ளக்கூடியளவுக்கு வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சிதறிப் போய் சிறுபான்மை கட்சியை ஆதரிக்கின்றவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை ஆதரிக்கின்றவர்கள், ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கின்றவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆதரிக்கின்றவர்கள் என்று வேறுபட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க இடமளிக்கக்கூடாது.  

அதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலை குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் மிக முக்கியமான தேர்தலாக கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவார். அவரது வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாக வேண்டுமென நாம் கோரினோம். ஆனால் முஸ்லிம் கட்சிகளின் பிரசாரங்களால் பெரும்பாலான முஸ்லிம்கள் ஐ.தே.க. அபேட்சகர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர். என்றாலும் தேர்தல் முடிவு நாம் கூறியபடியே அமைந்தது.  

அதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றல்லாமல் எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்கள் தூர நோக்கோடு சிந்தித்து செயற்பட வேண்டும். எமது ஒவ்வொரு வாக்கும் மிகவும் பெறுமதியானது. அந்த வாக்குகளை வீணாக்கி விடக்கூடாது.  

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்களிப்பு தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?  

பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னொரு போதுமில்லாத வகையில் முஸ்லிம்கள் வாக்களித்தமைக்கு முஸ்லிம் தலைமைத்துவங்களுடைய நடவடிக்கையே முக்கிய காரணமாகும். அவர்கள் மேற்கொண்ட தவறான பிரசாரத்தை அப்பாவி மக்கள் நம்பி ஏமாந்தார்கள். அவர்கள் செய்த பிழையான வேலையால் தான் முஸ்லிம் சமூகமே திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனும் தோல்வி அடையும் சஜித்தை வெற்றிபெறுவார் என மக்களுக்கு காட்டினர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தை மேற்கொண்டனர். கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் நாட்டில் இனக்கலவரங்கள் ஏற்படும். நாடு ஒரு மியன்மாராக மாறும் என்று முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தார்கள். இதனால் தான் முஸ்லிம்கள் மிகக் குறைந்தளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு வாக்களித்தனர்.  

கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் குறிப்பிடுவதாயின்?  

பதில்: ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் அளித்த வாக்களிப்புக்கு ஏற்ப எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 125 பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கும். அதனால் ஆட்சி அமைப்பதற்கு எந்த வகையிலும் சிறுபான்மைக் கட்சிகளின் உதவி தேவைப்படாது. அதனை பொதுஜன பெரமுன எதிர்பார்க்கப் போவதுமில்லை. அதனால் கடந்த ஜனாதிபதி தேர்தலைப் போன்றல்லாது எதிர்வரும் பொதுத்தேர்தலில் தூரநோக்கோடு சிந்தித்து ஆளும் கட்சியின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாகிக் கொள்ள வேண்டும். பொய் புரட்டுக்களில் ஏமாற்றமடைந்து விடக்கூடாது.  

அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை வீணாக்கி விடாது உரிய முறையில் பாவித்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்து கொள்ள வேண்டும். இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும்.  

இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் சிங்கள மக்களுடன் சக வாழ்வுடனும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடன் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளால் தான் பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் தவறான சந்தேகப் பார்வை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமை நீக்க வேண்டும். அதற்கான பொறுப்பு முஸ்லிம் சமூகத்திடம் சுமத்தப்பட்டிருக்கின்றது.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவான பொருளாதார கொள்கையைக் கொண்டுள்ளார். அக்கொள்கை முஸ்லிம்களுக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாகும். இம்மாவட்ட முஸ்லிம்கள் வர்த்தகத் துறையில் ஈடுபடக் கூடியவர்களாக உள்ளார்கள். அவருடைய பொருளாதார திட்டத்தின் மூலம் தங்களுடைய வியாபாரத்தை பரந்த முறையில் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.  

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார். அவர் இம்மாவட்டத்தில் போட்டியிடும் போது முஸ்லிம் மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பினால் ஏற்பட்டுள்ள திரிசங்கு நிலையை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அத்தோடு இம்மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்து கொள்ளவும் முஸ்லிம்கள் செயற்பட வேண்டும்.  

ஆகவே இந்த அரிய சந்தர்ப்பத்தை குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முஸ்லிம்கள் தவறுவார்களாயின் அது வரலாற்றில் விடக்கூடிய ஒரு துரதிர்ஷ்டமானதாகவே இருக்கும். அதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து போட்டியிடும் முஸ்லிம் அபேட்சகருக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கும், நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீளவும் செய்யாதிருக்கவும் முடியும்.  

கேள்வி: இந்த அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு இடமில்லை எனக் கூறப்படுகிறதே ?  

பதில்: முஸ்லிம் என்ற வகையில் என்னை வடமேல் மாகாண ஆளுநராக நியமித்ததானது சிறுபான்மை சமூகத்துக்கு ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் வழங்கிய முழுமையான அங்கீகாரமாகும். வடமேல் மாகாணம் என்பது கணிசமானளவு சிங்கள மக்கள் வாழும் பிரதேசம் மாத்திரமல்லாமல் பெளத்த புரதான அம்சங்களை கொண்ட ஒரு பகுதியும் கூட. அவ்வாறு முக்கியம் மிக்க மாகாணத்திற்கு ஆளுநராக ஒரு முஸ்லிமை எவரால் தான் நியமிக்க முடியும்? ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் மட்டும் தான் இதனைச் செய்ய முடியும். அப்படியான அரசாங்கத்தை இனவாத அரசாங்கம் என்று எவ்வாறு கூற முடியும்.  

ஆகவே மக்களை தவறான வழியில் வழிநடத்தியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் தொடர்ந்தும் ஐக்கியமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் கட்சிகள் சரியான வழிகாட்டுவனவாக இருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களை பிழையான பாதையில் இட்டு சென்றிருக்க மாட்டார்கள்.

அக்கட்சிகள் அவர்களது தனிப்பட்ட நலன்களை முன்நிலைப்படுத்தியே செயற்படுகின்றன. இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் சமூகத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம்கள் ஐ.தே.க, மு.கா, அ.இ.ம.கா கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.  

கேள்வி: நிறைவாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?  

பதில்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு அதிகளவிலான சேவைகள் கிடைக்கப்பெற்றது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினதும் ஆட்சியிலும் தான். ஐ.தே.க. ஆட்சிபீடத்தில் இருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் பலவித பாதிப்புக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். ஐ.தே.க ஆட்சிகளில் இருந்து தம் சமூகத்திற்கு செய்த சேவைகளை முஸ்லிம் தலைவர்களால் கூற முடியுமா? இதனை நான் ஒரு சவாலாகக் கேட்கின்றேன். அவர்களால் எதனையும் கூற முடியாது. அவர்கள் தங்களது நலன்களுக்காக சமூகத்தையே திரிசங்கு நிலைக்கு உள்ளாக்கி உள்ளார்கள்.  

தற்போது ஜனாதிபதி தலைமையில் புதிய அரசாங்கம் எவ்வளவு சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதை ஒரு தரம் நோக்க வேண்டும். இன்று சிறுபான்மையினர் அச்சம் பீதியின்றி வாழுகின்றனர். ஸ்ரீ ல.பொ.பெரமுன ஜனாதிபதி தேர்தல் வெற்றியை எவ்வாறு கொண்டாடியது என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் 2015 இல் நல்லாட்சியில் வன்முறைகளோடு தான் கொண்டாடினர். எத்தனையோ வீடுகள் எரியூட்டப்பட்டன.   அன்று எதிர்க்கட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் அடி உதைக்கும் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். இது நாடெங்கிலும் நடந்தன. ஆனால் இத்தேர்தலில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் கூட எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. ஏனெனில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பொலிஸாருக்கு வழங்கிய ஆணையே இதற்கு அடிப்படைக் காரணமாகும். தன்னுடைய வெற்றியில் எவரும் ஒரு துளி இரத்தம் சிந்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். அதனால் தேர்தல் வெற்றியை மக்கள் அமைதியான முறையில் கொண்டாடினார்கள். மக்கள் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி பொதுச் சுவர்களில் அழகான சித்திரங்கள் வரைந்து அழகுபடுத்தி வெற்றியை கொண்டாடினார்கள். இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொண்டாடப்பட்டது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.    

நேர்காணல்: இக்பால் அலி    

2 comments:

  1. You have received big amount from pppp mahinda??????you also better to go home.

    ReplyDelete
  2. உம்மை போல சூதாட்டக்காரர்களை முஸ்லிம்கள் பாராளுமன்றம் அனுப்பினால் எப்படியிருக்கும்?

    ReplyDelete

Powered by Blogger.