Header Ads



ரஞ்சனின் கைதுக்கு, ஐதேக யே காரணம் - பொதுஜன பெரமுன Mp தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கைதுக்குப் பின்னால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் சூழ்ச்சி இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புர நிராகரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரே அவரது கைதுக்குப் பின்னால் சூழ்ச்சி செய்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

“நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே பொலிஸார் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்தனர். அரசாங்கம் அதில் தலையிட்டு செயற்பட்டிருந்தால் அவரால் நேற்றைய தினத்தில் பிணையில் வெளியே வந்திருக்க முடியாது. கடந்த அரசாங்கம் எமது உறுப்பினர்களைக் கைது செய்து மூன்று நான்கு மாதங்களுக்கு விளக்கமறியலில் வைத்தது. ஆனாலும் அண்மையில் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டபோது அதில் அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடவில்லை என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

நாங்கள் தலையீடு செய்திருந்தால் அவர்களால் வெளியே வந்திருக்கமுடியாது. பொய்யான குற்றச்சாட்டுக்களையாவது நாங்கள் முன்வைத்திருப்போம். கடந்த அரசாங்கமே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எமது கட்சியினரை உள்ளே தள்ளியது.

அரசாங்கம் இன்று அந்த விவகாரத்தில் தலையீடுகளை செய்வதில்லை என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும்.

ஊழல் மோசடி ஆணைக்குழுவில் நாங்கள் சென்று முறைப்பாடு செய்தநிலையில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பலரும் உள்ளனர். அந்த இடத்திலிருந்து பொலிஸார் பணிகளை ஆரம்பித்தால் சிறந்தது என்றும், சில்லறைத்தனமான செயற்பாடுகள் அநாவசியமானது என்றும் மக்கள் உணர்கிறார்கள்.

எனினும் யாராவது சிறிய குற்றத்தை செய்திருந்தால் பொலிஸார் அதற்கு நடவடிக்கை எடுப்பது சாதாரண விடயம். ஆனாலும் ரஞ்சன் ராமநாயக்க மீது ஐக்கிய தேசியக் கட்சியினரே பல குற்றச்சாட்டுக்களை அண்மைய நாட்களாக சுமத்தினார்கள்.

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு ரஞ்சன் ராமநாயக்கவே காரணம் என்றும்,மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கு வேட்புமனுவை வழங்க வேண்டாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரே கூறியிருந்த நிலையில் அவருடைய இல்லத்தில் உள்ளவை என்ன என்பதையும் அவர்களே அறிந்திருக்கக்கூடும்.

ஆகையால் இந்தக் கைதுக்குப் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியினரே செயற்பட்டிருக்கலாம்”என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.