January 28, 2020

தற்கொலைக்கு தயாராகி வரும் ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோருடன் நடத்திய அலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்தார் என்று வெளியாகி இருக்கும் செய்தியால், ஐ.தே.க பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்தப் பிரச்சினை, முடிந்தவரை மூடி மறைக்கப்பட்டாலும், அக்கட்சியின் இருப்பை வெகுவாகப் பாதித்துள்ளதும் இதை விடப் பாரதூரமான மற்றொரு பிரச்சினையையும் ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்நோக்கி வருகிறது. அதுதான், அக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உட்கட்சிப் போராட்டமாகும்.  

கடந்த பல மாதங்களாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், அடிக்கடி கூடி, இந்தப் பிரச்சினையைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும், ஏதோ சமயச் சடங்கொன்றைப் போல், ஒவ்வொரு சுற்றுப் பேச்சுவார்த்தையின் இறுதியிலும், பிரச்சினை ஆரம்பித்த இடத்துக்கே வருகிறது. அதாவது, தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கான இறுதி முடிவு, அடுத்த சுற்றுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.  

அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் என்ற வடிவத்தில், இரட்டை அதிகாரங்களை உருவாக்கியிருப்பதைப் போல், ஐ.தே.கவுக்குள்ளும் தற்போது இரட்டை அதிகாரம் உருவாகியிருக்கிறது.   

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கட்சியின் தீர்மானமெடுக்கும் அமைப்பான செயற்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது; அதுதான் அவரது பலமாகக் கருதப்படுகிறது.   

மறுபுறம், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலும் நாடு முழுவதிலுமுள்ள சாதாரண உறுப்பினர்களிலும் பெரும்பான்மையோரின் ஆதரவு இருக்கிறது.  

கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினை நீடிப்பதற்கு, இதுவே பிரதான காரணமாக இருக்கிறது. செயற்குழுவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிலும் பெரும்பான்மையினர், இவ்விருவரில் ஒருவரை ஆதரிக்கும் நிலை இருந்தால், பிரச்சினை எழுந்தாலும் இன்று இருப்பதைப் போல், சிக்கலான நிலை ஏற்பட்டு இருக்காது.  

மாதிவெலயில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் திட்டத்திலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, பொலிஸார் கடந்த நான்காம் திகதி, அவர், பலருடன் நடத்திய அலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகள் அடங்கிய, சில இறுவட்டுகளைக் கைப்பற்றியதை அடுத்து, அந்த உரையாடல்கள் தொடர்பாக, நாட்டில் உருவாகியிருக்கும் சர்ச்சைகள், ஐ.தே.கவின் உட்கட்சிப் பூசலை மூடி மறைத்து இருப்பதை, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரும்பலாம்.  

அது, அவருக்கு ஆறுதலாக இருந்தாலும், அதனால் அப் பிரச்சினைக்கான தீர்வு தாமதமாவது, அக்கட்சிக்கு நல்லதல்ல. ஏனெனில், அந்தத் தாமதம், ஒரு சில வாரங்களில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு, அக் கட்சியின் ஆயத்தங்களையும் தாமதப்படுத்தலாம். அது, அக்கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கலாம்.  பொதுத் தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இல்லை. சட்டப்படி, அத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் தான் நடைபெற வேண்டும்.   

ஆனால், ஐ.தே.கவுக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ள இந்த நாடாளுமன்றத்தை வைத்துக் கொண்டு இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு செப்டெம்பர் மாதம் வரை, எந்தவொரு சட்டமூலத்தையோ, பிரேரணையையோ நிறைவேற்றிக் கொள்ள முடியாது.   

எனவே, ஜனாதிபதி கோட்டாபய அதற்கு முன்னர், தமக்குச் சட்டத்தால் அதிகாரம் வழங்கப்பட்ட உடனேயே, நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாகத் தேர்தலை நடத்தி, தமக்குச் சாதகமான நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  

நாடாளுமன்றம் கூடிய முதலாவது நாளிலிருந்து, நாலரை ஆண்டுகள் சென்றதன் பின்னரே, ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் கூறுகிறது.   

அதாவது, எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பத்திலேயே, ஜனாதிபதி கோட்டாபய நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கூடும். எனவே, பொதுத் தேர்தலுக்கு மேலும் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கின்றன.   

அதற்குள் ஐ.தே.க தமது உட்கட்சிப் பூசலைத் தீர்த்துக் கொள்ளாவிட்டால், அக்கட்சி தேர்தலின் போது, துடைத்தெறியப்படவும் கூடும். எனவே, இந்தப் பிரச்சினையை இழுத்தடிப்பது, தற்கொலை முயற்சியைப் போன்றதாகும்.  

அரசியல் கட்சிகளுக்குள் அதுவும் குறிப்பாக, பிரதான கட்சிகளுக்குள் தலைமைத்துவச் சண்டைகள் காணப்பட்ட முதலாவது சம்பவம் இதுவல்ல.  

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள், சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமைக்கு எதிராக, 1980களின் ஆரம்பத்தில் மைத்திரிபால சேனாநாயக்கவின் தலைமையில் கிளர்ச்சியொன்று ஏற்பட்டது. அதேகாலத்தில், சந்திரிகா குமாரதுங்கவுக்கும் அவரது சகோதரர் அநுரா பண்டாரநாயக்கவுக்கும் இடையே தலைமைத்துவப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.  

ஐ.தே.கவுக்குள்ளும் 1960களின் இறுதியில், கட்சித் தலைவர் டட்லி சேனாநாயக்கவுக்கும் உப தலைவர் ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையே தலைமைத்துவப் போராட்டமொன்று இடம்பெற்றது.   

1991ஆம் ஆண்டு, ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக, காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றோர் கிளர்ந்தெழுந்தனர். ஆனால், இரண்டு கட்சிகளிலும் அந்தக் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி பெறவில்லை.  

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே, ஐ.தே.கவுக்குள் கூடுதலான கிளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அவருக்கு எதிராகப் பாரியளவிலான நான்கு உட்கட்சிக் கிளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.   

அவ்வனைத்தின் போதும், கட்சியின் தேர்தல் தோல்விக்கு, ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பு என்றும், அவரது தலைமையின் கீழ், தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்றும் கிளர்ச்சிக்காரர்களால் கூறப்பட்டது.  

தொடர்ந்து, ஐ.தே.க தேர்தல்களில் தோல்வியடைவது தொடர்பான கட்சியின் உறுப்பினர்களினதும் இரண்டாம் மட்டத் தலைவர்களினதும் இந்த ஆதங்கமும் விரக்தியும் நியாயமல்ல என்று கூற முடியாது.   

ஏனெனில், 17 ஆண்டுகள் நாட்டை ஆட்சி புரிந்துவிட்டு, 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிலும் பொதுத் தேர்தல் ஒன்றிலும் தோல்வியடைந்து அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதன் பின்னர், இன்றுவரை ஐ.தே.கவால் நிலையான அரசாங்கமொன்றை உருவாக்க முடியாமல் போயுள்ளது.  

1994ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.தே.க இரண்டு முறை அரசாங்கங்களை உருவாக்கிய போதிலும், அவை நிலைத்திருக்கவில்லை; தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்யவில்லை.   

2001ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.கவின் அரசாங்கத்தை, இரண்டு வருடம் இரண்டு மாதங்களில், அதாவது 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலைத்துவிட்டார். ஐ.தே.க அரசாங்கம், தமிழீழ விடுதலை புலிகளுடன் அப்போது நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளே அதற்குக் காரணமாகியது.  

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி, அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட ஐ.தே.க, மூன்றாண்டுகளில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் படுதோல்வியடைந்தது.   

அந்தத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சார்பாக உருவான அலையின் காரணமாகவே, கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார்.   

அத்தோடு, பதவிக் காலம் முடிவடைய மேலும் ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிடம் கையளித்துவிட்டார்.  

அது ஒரு புறமிருக்க, 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தவிர்ந்த எந்தவொரு தேர்தலிலும், அதாவது ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போன்ற எந்தத் தேர்தல்களிலும் ஐ.தே.க வெற்றி பெறவில்லை.   

ஆங்காங்கே ஓரிரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை, அக்கட்சி கைப்பற்றியதை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, கட்சித் தொண்டர்களின் மன வேதனை நியாயமானது.  

தமது தலைமையை எதிர்த்து, கட்சியின் இரண்டாந்தரத் தலைவர்கள் கிளர்ச்சி நடத்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒரே பதில் தான் எப்போதும் இருந்தது.   
அதாவது, கட்சித் தலைவர் பதவிக்குப் பதிலாக, தலைமைத்துவச் சபையொன்றை நியமிப்பதாகவே அவர் எப்போதும் கூறி வந்துள்ளார். ஆனால், கிளர்ச்சிக்காரர்கள் திருப்திப்படும் வகையில், அவர் ஒரு போதும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  

இது போன்ற பிரச்சினைகளால், ஐ.தே.கவோ அல்லது நாட்டில் எந்தவொரு கட்சியோ அழிந்து போவதால், மக்கள் அடையும் நட்டம் எதுவும் இல்லை.   

ஆனால், இப்போது பிரச்சினை என்னவென்றால், ஐ.தே.க இம்முறை தேர்தலில் துடைத்தெறியப்பட்டால், நாடு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியொன்றை இழந்துவிடும். பலமான எதிர்க் கட்சியானது, ஜனநாயகத்துக்கு அத்தியாவசியமான காரணியொன்றாகும்.இப்போது கட்சித் தலைமை பதவியை சஜித்திடம் வழங்க வேண்டும் என்றே அவரது ஆதரவாளர்கள் நெருக்குதலைக் கொடுக்கிறார்கள். ஆனால், ரணில் அதற்குத் தயாராக இல்லை.   

பொதுத் தேர்தலும் நெருங்கி வருகிறது. நாட்டுத் தலைமைக்கான போராட்டத்தைக் கைவிட்டு, ஐ.தே.க தலைவர்கள் கட்சித் தலைமைக்கான போராட்டத்துக்கு முன்னுரிமை வழங்கினால் அக்கட்சியின் நிலைமை படு மோசமானதாகி விடுவதைத் தவிர்க்க முடியாது. எம்.எஸ்.எம். ஐயூப்

1 கருத்துரைகள்:

ரணிலின் நரி தந்திரத்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும்வரை அடுத்த கட்டம் பேச்சு பேச்சு என்று கட்சியே ஏமாற்றுவார்.

Post a comment