Header Ads



ரதன தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டம் - ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட வேண்டும்

- எம்.எம்.எம்.நூறுல் ஹக் -

முஸ்லிம் அரசியல் களத்தில் வேறொரு தலையிடி தொடங்கப்பட்டிருக்கின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இறுதி கால கட்டத்தில் உரத்துப் பேசப்பட்டு வந்த முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் இப்போது முற்றாக நீக்கப்படுவது என்ற கதையாடலுக்குள் சிக்க வைக்கப்படும் ஒரு பொறிமுறை மேற்கிளப்பப்பட்டிருக்கிறது. இது திருத்தத்தின் மூலம் விளையும் ஆபத்துக்களையும் விட பேராபத்தாக முஸ்லிம் சமூகத்திற்கு அமைந்து விடக் கூடிய அச்சுறுத்தல் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தனிநபர் பிரேரணைகளாக இதனை தயாரித்து அவை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் மசோதாவின் உள்ளடக்கம் பின்வறுமாறு காணப்படுகின்றது.

1. '1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்ஸிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டம் பற்றியதாகும். இந்த சட்டம் மீளப் பெறப்பட வேண்டும்' என்றும், 2. '1907ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க திருமணங்கள் (பொது) கட்டளைச் சட்டம்' பற்றியதாகும்.

இதில் 'முஸ்லிம்களினதும் தவிர்ந்த வேறு திருமணங்கள்' என்ற சொற்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் முன்வைக்கின்றது. இதன் ஊடாக இலங்கையில் நடைபெறும் அனைத்து திருமணங்களுக்கும் உள்ளதைப் போன்றுதான் முஸ்லிம்களுடைய விவாகம், விவாரத்துச் சட்டமும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடாகவே நாம் இதனைப் பார்க்கலாம்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற பிரதிநிதி துஷித விஜேமான்ன இன்னொரு தனிநபர் மசோதாவில் 'இலங்கையில் நடைபெறும் அனைத்து திருமணங்களுக்கும் குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு நாடாளுமன்ற பிரதிநிதிகளினதும் மசோதாக்கள் 16.12.2019ஆம், 18.12.2019ஆம் திகதிகளில் வெளிவந்த வர்த்தமானிகளில்  அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்விரு மசோதாக்களின் பின்னணியில் முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம் குறிவைக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் அதுரலியே ரத்ன தேரரின் முன்வைப்பு முஸ்லிம்களுக்கு என தனித்து திருமண சட்டமென்று ஒன்று அடியோடு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது. இவரது கூற்றோடு வைத்து துஷித விஜேமான்னாவின் கோரிக்கையை நோக்கினால் இது ஒரளவு பாதகத் தன்மையைக் கொண்டது என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய நமது நாட்டின் அரசியல் கள நிலவரத்தில் இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த முன்னெடுப்பு அவர்களுக்கு நேர்எதிரான அரசியல் கட்சியாக காணப்படும் பொதுஜன பெரமுனவிக்கு ஏற்படுத்தும் பாதகத்தைவிட தமது அரசியல் இருப்பை தாங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குத்தான் மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க மறந்திருக்கிறார்கள்.

பொதுவாக ஐக்கிய தேசிய கட்சி என்றாலும் சரி, பொதுஜன பெரமுன என்றாலும் சரி அனைத்தும் பெருந்தேசியவாதத்தில் இயங்குவதில் இருந்து வேறுபட்டதல்ல என்ற பொதுமையான கணிப்பீட்டுக்கு புற நடையாகிவிடாது என்பதை பல கட்டங்களிலும் ஆதாரபூர்வமாக அவை நிரூபித்து வந்திருக்கின்றன. இந்த இனவாத கூர்மைப்படுத்தலுக்கு ரணிலோ, சஜித்தோ விதிவிலக்காகிவிட முடியாது.

என்றாலும் மஹிந்த - கோட்டாபய அணியினர்தான் முஸ்லிம்களின் மொத்த எதிரிகள் என பறைசாற்றி, பகிரங்க பிரசாரத்தில் ஈடுபட்ட நமது முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளக் கட்சிகளாக முஸ்லிம் சமூகத்திடம் வெகுவாகவும் ஆழமாகவும் பதிவாகியும், அதிகரித்த முஸ்லிம் வாக்குப் பலத்தையும் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதை நமது முஸ்லிம் அரசியல் களம் நன்கறிந்த ஒன்று என்பதற்கு அப்பால் நமது நாட்டு மக்கள் யாபேரும் அறிந்த ஒன்றுமாகும்.

இப்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இரண்டறக் கலந்த கட்சிகளாகவும் அதன் ஊதுகுழலாகவும் அடிவருடிகளாகவும் செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அதன் தலைவர்களும்தான் அதுரலியே ரத்ன தேரர் மற்றும் துஷித விஜேமான்னவினர் விரித்த ஆப்பில் மாட்டிக் கொண்டு பலியாகிவிடப்போகும் அபாயத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நெருக்கடிக்கு இதன் மூலம் தள்ளப்படுகின்றனர்.

உண்மையில், இந்த சட்டங்கள் இயற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும் நிலை தோன்றினால் இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறான நிலையை தோற்றுவிக்கும் என்பது குறித்து முஸ்லிம் சமூகம் அக்கறையற்று இருக்க முடியுமா?

நமது முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள கட்சிகளின் தலைவர்களான றஊப் ஹக்கீம், றிஷாட் கூறியது போன்று மஹிந்த - கோட்டாபய அணியினர் முஸ்லிம்களின் விரோதிகள் என்றால், இந்த மசோதா அவர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த தித்திப்பான விடயமாகத்தானே அமையும். அப்படியானால் அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடுவார்களா? அல்லது நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ நிறைவேற்றிக் கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதிலிருந்து விலகிச் செல்வார்களா?

முஸ்ஸிம் விவாகம், விவாகரத்துச் சட்டத்தை முழுமையாக அகற்றிவிடக் கூடிய வாய்ப்பு வலிந்து வரும்போதும், அதேநேரம் பொதுஜன பெரமுனவினால் முதலில் தொடங்கி வைக்கப்பட்டது என்கின்ற பெயரில்லாது வரும் இந்த வாய்ப்பு எவ்வளவு விலை கொடுத்தாலும் அவர்களுக்கு கிடைக்குமா? ஆயின் நேரடியாக முஸ்லிம் விரோதப் போக்குக்கு ஐக்கிய தேசிய கட்சியை முன்னிறுத்திவிட்டு, ஒரு மறைமுக ஆதரவுக் கரத்தை நீட்டினாலே நிறைவேறுவதற்குப் போதுமானதாக இராதா?

இன்று நடைமுறையில் இருக்கின்ற அரசாங்கம் மஹிந்த - கோட்டாபய அணியினருடைய சார்பானதாக இருந்தாலும் அது தனிப் பெரும்பான்மையைக் கொண்டதல்ல. மாறாக ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்ந்த அணியினர் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் ஆளும் அணியினரை விட அதிகமாகவும் இருப்புக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாக்கெடுப்புடன் தொடர்புபட்ட சட்டங்களை இயற்றும் முஸ்தீபுக்கு இன்றைய ஆளும் தரப்பினர்கள் பெரும்பாலும் முதலில் ஆர்வம் காட்டாத ஒரு போக்கைத்தான் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிவரை இருக்கப் பார்ப்பனர் என்கின்ற ஒரு ஆறுதல் முஸ்லிம் சமூகத்திற்கு இப்போதைக்கு இதனைத் தவிர வேறில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் மேற்சொன்ன இரு நாடாளுமன்ற பிரதிநிதிகளும் தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விவாதித்து, வாக்கெடுப்புக்கு விடப்படுமானால், அது வெற்றி பெறுவதற்குத் தேவையான நாடாளுமன்ற பிரதிதிதிகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டல்ல என்பது நமது கவனத்திற்குரியது. இவ்வாறான ஒரு சட்டமூலம் சட்டமாக அங்கீகரிக்கப்படுவதற்கு தேவைப்படும் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தொகை என்பது பின்வருமாறு அமைந்திருந்தால் போதுமானது.

அதாவது, ஒரு நாடாளுமன்றம் கூடுவதற்குப் போதுமான கோரத்திற்குரிய நாடாளுமன்ற பிரதிநிதிகளான இருபது பேர் பிரசன்னமாகி இருக்கும் ஒரு கூட்டத்தொடரில் (அதுவும் கோரம் பற்றி யாரும் அன்றைய அமர்வில் கேள்வி எழுப்பாவிட்டால் கோரம் பற்றி கவனம் கொள்ளப்பட மாட்டாது) நடாத்தப்படும் வாக்கெடுப்பில் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகளைவிட ஒரு வாக்கு அதிகமாக ஆதரித்து கிடைத்தால் அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டதாக கொள்ளப்படும். அதன் பின்னர் சட்டமாவதற்கு சபாநாயகர் கையெழுத்திட்டவுடன், சட்டம் அமுலாகும் தினம் எனக் குறிப்பிடப்படும் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

ஆகவே, இன்றைய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடன் வருமாயின் மஹிந்த - கோட்டாபய அணியினரின் கடைக்கண் பார்வை ஒன்றே நிறைவேற்றப் போதுமானது. இது முஸ்லிம் சமூகம் ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு நிலையாகும்.

இன்று நடைமுறைமையில் இருக்கும் முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? அல்லது திருத்தம் தேவையே இல்லையா? என்று விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது ஒரு பாரிய அச்சுறுத்தலுக்கு உரிய விடயமல்ல. ஏனெனில், அது முஸ்லிம் குடிமைச் சமூகத்தின் ஆலோசனைகள், உலமாக்களின் அபிப்பிராயங்கள் திரட்டப்பட்டு நமது நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு தீர்வாக வரக்கூடிய சாத்தியம் கொண்டது. ஆனால், முற்றாக இல்லாமற் செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சி என்பது முஸ்லிம் சமூகத்தின் கைகளுக்கு அப்பாலான அதிகாரத்தின் வலிமையுடன் கூர்மைப்படுத்தப்படும் ஒன்று என்பதினால் அது மிகவும் பேரபாத்தானது.

அந்த வகையில் அகப்பட்ட ஒன்றாகவே ஐக்கிய தேசி கட்சி சார்பான நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் அண்மைய முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டம் குறித்தான வர்த்தமானி அறிவித்தல் வெளிப்பட்டிருக்கின்றது. ஆதலால் இதனை ஒரு சதாரண விடயமாகக் கருதியோ, இன்றைய நடைமுறை நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்றும் முயற்சிகள் எதுவும் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிவரை நடைபெறாது என உறுதியாக நம்பி இருப்பதை விடவும், முளையிலேயே கிள்ளி எறிவது குறித்து சிந்திப்பதுதான் முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த ஆரோக்கியங்களை தரக்கூடியது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம் முற்றாக நமது நாட்டிலிருந்து அகற்றப்படல் வேண்டும் என்று யாரும் பேசக்கூடாது மட்டுமன்றி, அவ்வாறான நிலை தோற்றுவிக்கப்பட்டால் அதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் உரத்து குரல் கொடுத்து எதிர்க்க வேண்டிய கடமைப்பாடும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதை நமது நாட்டின் மிக உயர்ந்த சட்ட அந்தஸ்துக்குரிய அரசியலமைப்பு எடுத்துக் காட்டுகின்றது. இதனை பின்வரும் அரசியலமைப்பின் வாசகங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்க முடியும்.

உறுப்புரை 9. 'இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ஆம், 14(1)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்' (ஆதாரம்: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு. அத்தியாயம் 2.)

உறுப்புரை 10. 'ஆளொவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுதற்கான சுதந்திர முட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடைய வராதல் வேண்டும்'. (ஆதாரம்: இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு அத்தியாயம் 03)

உறுப்புரிமை14(1)(உ). 'தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்'. (ஆதாரம்: இலங்கைச் சனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு அத்தியாயம் 03).

இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், முஸ்லிம் விவாவகம், விவக ரத்துச் சட்டம் என்பது ஒரு முஸ்லிமுக்கு அவன் பின்பற்றும் இஸ்லாமிய மதத்தின் வழியில் உள்ள ஒரு வாழிபாடுடன் தொடர்புபடுகின்றது. திருமணம் புரிவது, அதிலிருந்து விடுபடுவது என்பது இஸ்லாத்தின் வணக்க வழிபாட்டுடன் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதனை உரிய முறைப்படி செய்தால்தான் மத வழிபாட்டை சரியாக அனுஷ்டித்ததாக அமையும்.

அப்படியாயின், முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம் மதத்துடன் சம்பந்தப்பட்டது என்பதினால், அது மதக் கடமையை சாருவதினால் மதச் சுதந்திர பாதுகாப்புக்கு உட்பட்டுவிடுகின்றது. அதனை முற்றாக அகற்றுவதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணான கோரிக்கை என்றாகிவிடுகின்றது. ஆகையால் அகற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாத பொறுப்பும் கடப்பாட்டிற்கும் உரித்துப் பெறுகிறது. 

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தனிநபராக கொண்டுவரும் முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துச் சட்டத்தின் துணையோடு போராடியேனும் நிலைநாட்டத் துணிவது நமது உரிமைத்துவத்திற்கு உட்பட்ட ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் முஸ்லிம் அரசியல் களத்தில் இதற்கான எதிர்ப்புக்களை முறையாக பதிவு செய்வதுடன், அதனை நடைமுறைக்கு வராது உடனடியாக தடுப்பதும் நம்மீது கடமையான ஒன்றென்பதையும் புரிந்து செயற்படுவோமாக!

1 comment:

  1. Saudi Arabia had recently passed a law making the minimum age for marriage to be 18 years.

    ReplyDelete

Powered by Blogger.