Header Ads



ஈரானிய தளபதிக்கு பாக்தாதில், ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி

அமெரிக்க ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈரானிய தளபதிக்கு பாக்தாதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாக்தாத் வீதிகளில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு சாவு, இஸ்ரேலுக்கு சாவு என போர் முழக்கமிட்டனர்.

குறித்த இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஈராக்கின் பிரதமர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தேவைப்பட்டால் அமெரிக்க ராணுவத்தை ஈராக்கில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஊர்வலமானது பாக்தாத்தில் உள்ள ஷியா இஸ்லாத்தில் மிகவும் மதிக்கத்தக்க இமாம் காதிம் ஆலயத்தில் இருந்து தொடங்கியது.

அதன் பின்னர் தெற்கே Green Zone என அறியப்படும் உயர் பாதுகாப்பு கொண்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் செயல்படும் பகுதிக்கு சென்றனர்.

இதற்கிடையில் கோபமடைந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈரானின் தலைநகரில் உள்ள ஐ.நா அலுவலகங்களுக்கு வெளியே நின்று, தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்று கோரினர்.

மூன்று நாள் தொடர் மத சடங்குகளுக்கு பின்னர் செவ்வாய் அன்று குவாசிமின் சொந்த ஊரான கெர்மனில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

நேற்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தமது வலக்கரமாக இதுவரை செயல்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான 62 வயது தளபதி குவாசிமின் குடும்ப வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.