Header Ads



தாமரை மொட்டுவில் களமிறங்குவோம், மூன்றில் இரண்டு பெறுவோம் - அடித்துக்கூறும் மஹிந்த

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதன் பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு 'தாமரை மொட்டு' சின்னத்திலேயே களமிறங்கும். இந்தத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது,

"ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மாதிரி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளும் ஓரணியில் ஒற்றுமையுடன் நிற்கின்றன. எனவே, எமது 'மொட்டு' அணியின் வெற்றி எப்போதும் உறுதியாகவே இருக்கும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான யானைக் கூட்டணி படுதோல்வியடைந்தே தீரும். அந்தக் கூட்டணிக்குள் வெடித்த தலைமைப் பதவிக்கான மோதல் இன்று நடுவீதியில் வந்து நிற்கின்றது.

அந்தக் கூட்டணிக்குள் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என ஓர் அணியினரும், வாழ்நாள் முழுவதும் ரணிலே தலைவராக இருக்கவேண்டும் என்பதில் இன்னொரு அணியினரும் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றனர். இது அந்தக் கூட்டணியின் ஆதரவாளர்களைச் சினம்கொள்ள வைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலையும்விட நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியினர் படுதோல்வியைச் சந்திப்பார்கள். இந்தத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவோம் - இது உறுதி" - என்றார்.

No comments

Powered by Blogger.