Header Ads



ஜாமிஆ நளீமிய்யாவுக்கு, சென்ற அபூ தாலிபுக்கள்


அஷ்ஷைக் பளீல் (நளீமி)

கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மதத் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய RRG (பொறுப்பு வாய்ந்த ஆட்சிக்கான மதங்கள்) எனப்படும்  அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த 16ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

அக்குழுவில் :-

பௌத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராஹுல அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் களனி பல்கலைக்கழக சமூகவியல் கற்கைநெறிகள் பீடத்தின் வரலாற்றுத் துறைத் தலைவருமான கல்கந்தே தம்மானந்த தேரர், 

கொழும்பு மாவட்ட முன்னை நாள் அங்கிலிக்கன் பேராயர்  துலிப் கே சிக்கேரா , 

சின்மயா மிஷன் அமைப்பின் இலங்கை பணிமனையைச் சேர்ந்த சுவாமி குணாதினந்தா   சரஸ்வதி குருக்கள், 

தேசிய சூரா சபை, தேசிய ஷரியா கவுன்சில் ஆகியவற்றைச் சேர்ந்த அஷ்ஷைக் ஸியாரத் இப்ராஹிம் (கபூரி), 

கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் தாரா டீ மெல், பட்டயக் கணக்காளரும் பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான திருவாளர்  ஹர்ஷ குணசேன, 

தேசபந்து அஷ்ஷைக் முனீர் முளப்பர்(நளீமி) ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.

RRG என்பது அரசியல் சார்பியங்கள் எதுவும் இல்லாத, சுதந்திரமான ஓர் அமைப்பாகும். அது நாட்டில் பொறுப்புமிக்க, வகைகூறும் அரசியல் ஒழுங்கொன்று அமைய வேண்டும் என்பதற்காகவும் சமூகங்களுக்கிடையிலும் பல்லின சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையிலும்  அன்னியோன்யத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் தன்னார்வு நிறுவனமாகும்.

ஜாமியாவுக்கான அவர்களது விஜயத்தின் போது நளீமியாவின் வாசிகசாலை, பள்ளிவாயல் நிர்வாக கட்டடம், விரிவுரை மண்டபங்கள்  போன்றவற்றைப் பார்வையிட்டனர். வாசிகசாலையானது பல மொழிகளிலான,பல்துறை சார்ந்த நூல்களை உள்ளடக்கியிருப்பதை அவர்கள் கண்டறிந்து கொண்டார்கள். ஜாமிஆவின் ஏழு வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்ய முன்னர் ஒவ்வொரு  மாணவரும் கட்டாயமமாக ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிகப்பட்டு வாசிகசாலையில் வைக்கப்பட்டுள்ள சில ஆய்வுக் கட்டுரைகளை அவர்கள் பார்வையிட்டனர். மத ஒப்பீட்டாய்வு, இன நல்லிணக்கம் தொடர்பாக சிங்கள, ஆங்கில ,அரபு, தமிழ் மொழிகளில் அமைந்த ஆய்வுகளும் அங்கு கணிசமான அளவு இருந்தன.

அதிதிகள் ஜாமியா நளீமியா பணிப்பாளர் கலாநிதி சுக்ரி, பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், விரிவுரையாளர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோரால் வரவேற்கப்பட்டனர். கலாநிதி இர்பான் அவர்கள் ஜாமிஆவின் கொள்கைகள், இலக்குகள், அதன் பாடத்திட்டம், கடந்த கால செயற்பாடுகள் என்பன தொடர்பான விளக்கத்தை அளித்தார். குறிப்பாக ஜாமிஆ மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் இஸ்லாத்தின் நடுநிலை, மிதவாத சிந்தனையை முன்வைக்கவும் பாடத்திட்டத்திற்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாகவும் இதுவரைக்கும் அத்துறைக்கான நளீமீக்களது ஆக்கங்கள்
தொடர்பாகவும் அந்த விளக்கம் அமைந்தது.

குறிப்பாக இது தொடர்பாக ஜாமிஆவின் வளாகத்துக்குள் இடம்பெற்ற கல்வி முகாம்கள், ஆய்வரங்குகள் பற்றிய ஆவணம் அவர்களுக்கு எழுத்துருவில் கையளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து RRG  பற்றிய அறிமுகத்தை ஹர்ஷ முன்வைத்தார். விரிவுரையாளர்கள் உத்தியோகத்தர்களுக்கான தனியான அமர்வை தொடர்ந்து ஐந்தாம் ஆறாம் ஏழாம் வருடங்களில் கல்வி பயிலும் ஜாமிஆ மாணவர்களுக்கான RRG அமைப்பினரின் சந்திப்பு இடம்பெற்றது.
அவர்கள்  தொடுத்த வினாக்களுக்கு அதிதிகள் விளக்கமளித்தனர்.

இவ்விரு அமர்வுகளின் போதும் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

ஜாமிஆ என்பது ஏககாலத்தில் ஆன்மாவோடும் அறிவோடும் உரையாடுவதற்கான செயல்முறைகளை கொண்டிருக்கிறது. இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் கடப்பாட்டை ஜாமிஆ சுமந்திக்கிறது, அதற்கான தகுதியை அது பெற்றிருப்பதை என்பதை உணர முடிகிறது போன்ற முக்கிய கருத்துக்களை அவர்கள் முன்வைத்தார்கள்.

பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதங்கள் தொடர்பான விரிவுரைகளை அந்தந்த சமயங்களைச் சேர்ந்த தேர்ச்சி மிக்க வளவாளர்களை அழைத்து செய்வதற்கு உதவ முடியும் என RRG அமைப்பினர் தெரிவித்துடன் இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்கும் விரிவுரைகளை நளீமிய்யா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

 சமூகங்களுக்கிடையிலான வன்முறைகளுக்கும் தப்பான கருத்துப் பரவலுக்கு பிரதான காரணம் ஒவ்வொரு சாராரும் ஒதுங்கி வாழ்வதாகும் என்றும் எனவே அடிக்கடி சந்தித்து கொள்வதற்கான இது போன்ற நிகழ்வுகள் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இலங்கையில் இன முரண்பாடுகளுக்குப் பின்னணியில் அரசியல்வாதிகளது நலன்களே காரணமாகும். பிரித்தாளும் கொள்கைக்கு நாம் பலியாக விடலாகாது. மதத்தலைவர்கள் பிடிவாதம், குறுகிய சிந்தனை என்பவற்றில் இருந்து வெளிவர வேண்டும். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் !

நளீமியா பற்றிய வித்தியாசமான சில  அபிப்பிராயங்கள் வெளியில் பரப்பப்படும் இந்த காலகட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் அவசியம் என நாம் கருதுகிறோம். நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திக்கும் நல்லுள்ளம் கொண்ட சகோதர இனங்களைச் சேர்ந்த அபூதாலிபுகள் இருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.  இருக்கிறார்கள்.

வருகை தந்த பிரமுகர்கள் மிகவுமே காத்திரமான கருத்துக்களை பரிமாறியதுடன் இதன்  தொடராக பல நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்றும் கூறினர்.

அல்லாஹ் எமது நிறுவனத்தையும் ஏனைய இஸ்லாமிய நிறுவனங்களையும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஏன் முழு உலக மாந்தர்களையும் பாதுகாப்பானாக!

No comments

Powered by Blogger.