Header Ads



பள்ளிவாசலில் நடந்த, இந்துத் திருமணம்


கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளத்தை சேர்ந்த அசோகன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.  அவரின் மனைவி பிந்து,  கூலி வேலைக்கு சென்று இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை பராமரித்து வருகிறார். 

இந்நிலையில், மூத்த மகள் அஞ்சு திருமண வயதை எட்டிய நிலையில், வரதட்சணைக்கு எவ்வித பணமும் இல்லாமல் பிந்து தவித்து வந்துள்ளார். பிந்துவின் உறவினர் சரத் என்பவர், அஞ்சுவை திருமணம் செய்து கொள்ள முன்வந்துள்ளார். திருமண செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில் அஞ்சுவின் சகோதரர் நிலைமையை தனது இஸ்லாமிய நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் ஜமாத் நிர்வாகிகளிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர். 

இளைஞர்களின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சு - சரத் திருமண செலவை  ஜமாத் ஏற்று கொள்ளும் என பிந்துவிடம் நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர். அதன்படி ஜமாத் லெட்டர் பேடில் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அவ்வட்டார மக்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.  திருமண நாளான 19.01.2020 சேராப்பள்ளி முஸ்லீம் பள்ளிவாசலில் இந்து முறைப்படி அனைத்து சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றது. 

மணமகளை அழைத்து வந்ததை தவிர வேறு எந்த ஏற்பாடுகளையும் தாய் பிந்து செய்யவில்லை. தங்க ஆபரணங்கள் முதல் உணவு ஏற்பாடுகள் வரை அனைத்தையும் ஏற்று கொண்ட ஜமாத் நிர்வாகிகள் அந்த பள்ளி வளாகத்தை அமர்க்களப்படுத்தி இருந்தனர். அனைத்து மத மக்களும் திரண்டு மணமக்களை வாழ்த்தியதோடு சமூக ஊடகங்களில் இந்நிகழ்வு வைரலாக பரவியது. திருமண விழாவில் பங்கேற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் ஆரிப், இந்த நிகழ்ச்சி நாட்டுக்கே  முன்னுதாரணம் எனவும்,  தற்போதைய காலகட்டத்தில் சமூகத்திற்கு அவசியமான ஒன்று எனவும்  தெரிவித்தார். 

எதிர்பார்க்காத அளவுக்கு தங்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்றதாக மணமக்கள் தெரிவித்தனர். மதத்தின் பெயரால் மக்களை மோதவிடும் சூழலில் அவற்றை முறியடிக்கும் வகையில் காயங்குளம் ஜமாத் நிர்வாகிகளின் முயற்சியில் நடந்த  திருமணத்தை கேரள முதலமைச்சர் தனது இணைய தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார். மக்களை பிரிக்க சில சக்திகள் முயன்றாலும், தங்களின் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று அந்த சக்திகளுக்கே பாடம் புகட்டும் வகையில் நடந்த இந்த திருமண நிகழ்வு இந்த காலத்தில் ஒரு ஆச்சர்யம்தான்...  

1 comment:

  1. "நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்;

    இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் -

    அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும்

    -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது."

    (அல்குர்ஆன் : 57:18)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.