January 27, 2020

ஞானசாரரின் நளீமீக்கள் தொடர்பான, குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலடி

“முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட சுய வெறுப்பின் காரணமாக துவேச மனப்பான்மையுடன் நளீமிய்யா பட்டதாரிகளை பார்ப்பது பிழையானது.”

மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் – பொதுச் செயலாளர்,  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை

துவேஷிகள் சிலர் நளீமிய்யா கலாபீடத்தை இனவாதப் பார்வையில் பார்த்தாலும் பெரும்பாலான படித்த மக்கள் நளீமிய்யா தொடர்பில் நல்ல பார்வையைக் கொண்டுள்ளனர். நாட்டுக்குச் சேவை செய்யும் உயர்ந்த பதவிகளில் நளீமிக்களே உள்ளனர். இந்நாட்டில் முஸ்லிம்கள் சார்பாக அரசின் உயர் பதவிகளுக்கு ஆட்களை அனுப்பிய தனி ஸ்தாபனமாக நளீமிய்யா காணப்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக துவேச மனப்பான்மையுடன் நளீமிய்யா பட்டதாரிகளை பார்ப்பது பிழையானது. நளீமிய்யாவில் கற்று வருபவர்கள் நல்ல தெளிவான கருத்துக்களை சொல்கின்றனர். உலகளாவிய அறிஞர்களின் நல்ல பல கருத்துக்களை பெற்று சமூகத்திற்கு வழங்குகிறார்கள். அதற்காக வேண்டி அவர்களுடன் தொடர்புபட்டுள்ளார்கள், அவர்களுடைய சிந்தனையை வளர்க்கின்றார்கள் என்று குறிப்பிடுவது முறையல்ல.

“ஜாமியா பற்றி ஞானசார தேரர் கூறும் கருத்துக்கள் அடிப்படைகள் அற்றவை.”

உஸ்தாத் ஆசாத் அப்துல் முஈத் – தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா

இந்நாட்டில் வாழ்கின்ற சமூகங்களில் கல்வி ரீதியாக மிகவும் பின்னடைந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. இந்த இடைவெளியை நிரப்புகின்ற பலதரப்புகளில் ஒன்றாக நளீமியா கலாபீடம் காணப்படுகின்றது.

மார்க்கக் கல்வியையும், அரசாங்கத்தின் பல்கலைக்கழகக் கல்வியையும், உயர்ந்த பண்பாடுகளையும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கிய அதன் கல்வித் திட்டத்தினூடாக இந்தநாட்டிற்கு நற்பிரஜைகளை உருவாக்குவதில் ஜாமியா பெரும் பங்காற்றியது என்றால் அது மிகையாகாது.

இந்த வகையில்தான் நாட்டின் பல்வேறு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் நளீமியா பட்டதாரிகள் சிறந்த முன்னுதாரணம் உள்ளவர் களாகவும், தமது பதவியை துஷ்பிரயோகம் செய்யாதவர்களாகவும், ஊழலற்ற சிறந்த நிர்வாகிகளாகவும் இன்றுவரை செயற்பட்டு வருகின்றனர். ஞானசார தேரர் குற்றம் சாட்டுவது போன்று அல்லாமல் நளீமியா கலாபீட பட்டதாரிகள் கலாபீடத்தில் கல்வி பயின்று, தமது பட்டப் படிப்பை பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்து,  அரச ஆட்சேர்ப்பின் முறையான, நேர்மையான வழிமுறைகளினூடான உள்வாங்கப்பட்டே தமது பணிகளை ஆற்றி வருகின்றனர்.

இவ்வாறான நேர்மையான கல்வி, பண்பாட்டு பின்புலத்தில் உள்ளவர்களை முறையற்ற வகையில் குற்றம்சாட்டுவதும் அவர்களை கைதுசெய்ய வேண்டும் எனப் பேசுவதும் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளாகும். அது மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் இளைஞர்களையும் தாம் கற்ற கல்வியினூடாக தீவிர சிந்தனையற்ற நடுநிலையான போக்கை வலியுறுத்தி வழிகாட்டி வரும் நளீமியா கலாபீடத்தை அடிப்படைவாதத்தின் தோற்றுவாய் எனக் குறிப்பிடும் ஞானசாரதேரர் அவர்களின் கருத்து முழு முஸ்லிம் சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்கின்றது.

இந்த இடத்தில் ஞானசார தேரர் அவர்கள் நளீமியா கலாபீடத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அதன் உண்மைத் தன்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டுமென இங்கு நாம் அவருக்கு ஆலோசனை வழங்குகின்றோம்.

இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற அடிப்படைவாதம் என்ற சொற்பிரயோகத்தின் ஊடாக எதனைச் சொல்ல வருகின்றார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஞானசார தேரரின் நளீமியா கலாபீடத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு கலாபீடத்தின் நிர்வாகத்தினரும், பட்டதாரிகளும் உரிய வழிமுறைகளினூடாக தெளிவை வழங்க வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளனர் என்பதை இங்கு குறிப்பட விரும்புகின்றோம்.

“தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயரால் நளீமீக்களில் சிலர் தஃவாப் பணியில் ஈடுபாடு கொண்டிருப்பது இந்நிறுவனத்தின் மீதான சந்தேகங்களை மேலும் வளர்த்துள்ளது”

கலாநிதி ஏ அஸ்வர் அசாஹிம் – முன்னாள் சக உறுப்பினர் – அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா

ஜாமியா நளீமிய்யாவாக இருக்கலாம். அல்லது ஏனைய கல்வி நிறுவனங்களாக இருக்கலாம். அவை நாட்டின் முன்னேற்றத்துக்கான முதுகெலும்பு போன்றவையாகும். குறிப்பாக ஜாமியா நளீமிய்யாவைப் பற்றிக் குறிப்பிடுவதென்றால் அதுவொரு நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கல்லி நிலையமாகும். காலப் போக்கில் வெளிநாடுகளில் இயங்கும் சில இயக்கங்களின் சிந்தனைகளை சிலர் சிறிது சிறிதாக திணிக்க எத்தனித்ததால் இன்றைய இலங்கைச் சூழலில் இந்நிறுவனம் பேசுபொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்ற அல்லது தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயரால் நளீமிய்யாவின் பட்டதாரிகளில் சிலர் தஃவா பணியில் ஈடுபாடு கொண்டிருப்பதால் இந்நிறுவனத்தின் மீதான சந்தேகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இந்நிறுவனத்தை மூடி விட வேண்டும் என்ற கோரிக்கையானது நோயாளிக்கு வைத்தியம் செய்வதை விட்டுவிட்டு நோயாளியை அழிக்க வேண்டும் என கூறுவதற்கு ஒப்பானதாகும்.

ஜாமியா நளீமிய்யா கலாபீடம் மாத்திரமல்ல, ஏனைய கல்வி நிறுவனங்களும் இலங்கையின் சூழலமைவை கருத்திற் கொண்டு இயங்க வேண்டும். இந்நாட்டில் நாம் சிறுபான்மையாக வாழ்கின்றோம் என்கின்ற விடயத்தை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். தீவிரமாக பேசக் கூடிய மாணவர்களை உருவாக்குவதை தவிர்த்து இமாம்கள் மற்றும் ஏனைய உல மாக்களின் கருத்துகளுக்கு கண்ணியம் கொடுக்கக் கூடியவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய தஃவா என்னவெனில், மாற்று மதத்தவர்கள் மத்தியில் இஸ்லாம் கூறிய நல்ல விடயங்களை பிரதிபலிக்கும் வகையில் நடந்துகொள்வதற்கான போதனைகளை நாம் எமது மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதாகும். சமூக உறவுகள், வியாபாரம், அரசியல் உள்ளிட்ட சகல துறைகளிலும் முஸ்லிம்கள் தமது நற்குணத்திற்கு காரணம் இஸ்லாம் தான் என்பதை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தங்களுடைய நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் இஸ்லாம் வளர்வதற்கு இதுவே போதுமானதாகும்.

“நளீமீக்கள் மற்றவர் உள்ளத்தில் நல்லெண்ணம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.”


அப்துல் ஹமீத் (பஹ்ஜி) – தேசியப் பிறைக் குழுத் தலைவர், பெரிய பள்ளிவாசல் ஷரீஆ கவுன்சில் உப தலைவர், பிரதான இமாம் – கொழும்பு பெரிய பள்ளிவாசல், சாதுலியா தரீக்காவுடைய இலங்கைத் தலைவர்.

நளீம் ஹாஜியார் அவர்களின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே ஜாமியா நளீமிய்யா கலாபீடமாகும். சமூகத்தில் படித்தவர்கள் வர வேண்டும், அவர்கள் உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்கின்ற நல்ல நிய்யத்திலேயே இந்நிறுவனத்தை ஆரம்பித்தார். ஊரைக் குழப்புவது அல்லது பிரச்சினைப்பட்டுக்கொள்வது அல்லது பத்வாக்களை வழங்கி சமூகங்களுக்கிடையில் குழப்பத்தை உண்டுபண்ணுவது போன்ற நோக்கங்களுக்காக இந்நிறுவனம் உருவாக்கப்படவில்லை.

முன்பு ஒரு அறிஞர் ஒரு பத்வாவை வழங்கியிருப்பார். தற்போது அதில் நாங்கள் போய் பத்வா கொடுக்கும் போது பிரச்சினை ஏற்படும் அல்லவா? இது  வரை காலமும் நாம் எங்கும் பத்வா வழங்கச் செல்வதில்லை. அது சரியில்லை. முன்னால் வாழ்ந்த உலமாக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படி நாமும் போய்க் கொண்டுள்ளோம். இந்நாட்டில் நளீமீக்கள் முன்னோர்கள் வாழ்ந்தது போன்று குறிப்பாக சாதுலியா தரீக்காவைப் பின்பற்றி வாழ்ந்த நளீம் ஹாஜியாரைப் போன்று மற்றைய முஸ்லிம்களுடனும் மாற்று மத சகோதரர்களின் உள்ளத்தில் நல்லெண்ணம் ஏற்படும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும்.

இவர்கள் மற்ற மக்களது நல்லெண்ணத்தை விட்டும் அகலக் காரணம் என்ன வெனில், அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை, அவர்கள் கொண்டிருக்கும் சில கருத்துக்கள்தான். உதாரணமாக பாடசாலைகளுக்கான பாடத் திட்டங்களில் முன்னர் மத்ஹப்,   தசவ்வுப், தராவீஹ் போன்ற விடயங்களை பற்றி அழகிய முறையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கான பாடத் திட்டங்களை வகுப்பதற்கு நளீமிக்களே அதிகம் பங்கு கொண்டார்கள். அவர்கள் இப்னு தைமியா, அபுல் அஹ்லா மௌதூதி போன்ற நவீன கால சிந்தனையாளர்களது கருத்துக்களை பாடப் புத்தகங்களில் புகுத்தி மாணவர்களது உள்ளங்களில் அவ்விடயத்தை போட்டார்கள்.

பழையதை இல்லாமல் செய்து புதியதொன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்திலேயே போட்டிருக்கிறார்கள். மாற்று மத சகோதரர்கள் அல்லது எமது சமூகத்தின் பழைமைவாதிகளுக்கிடையில் மிகப்பெரும் பிரச்சினையேற்படுவதற்கு இதுவே முதற் காரணம்.

இரண்டாவது, இந்நாட்டில் இஸ்லாத்திற்காக வேண்டி பாடுபட்டு தொண்டாற்றிய முன்னைய காலத்தில் வாழ்ந்த பெரும் பெரும் உலமாக்கள், சூபிக்கள், இறை நேசர்கள் இங்கு வந்து பள்ளிவாசல்களை கட்டி, மத்ரஸாக்களை உருவாக்கி மாற்று மத சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் இன்று இல்லாமல் போகக் காரணமும் எமது சில தீய சிந்தனைகளாகும்.

உதாரணமாக சில முஸ்லிம் நாடுகளில் சில இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. அது போன்று மலேசியாவில் வஹாபிசம் தடைசெய்யப்பட்டுள்ளது. இப்படி தடைசெய்யப்பட்ட நாடுகளில் கூட எமது இஸ்லாத்தின் பெயரால் வருகின்ற பயங்கரவாத அல்லது தீவிரவாத இயக்கங்கள் தடைசெய்யப்பட்டும் இலங்கையில் அப்படியொரு தடை விதிக்கப்படவில்லை. காரணம், இலங்கைக்கு இது விடயம் பற்றித் தெரியாமல் உள்ளதாகும். இருந் தும் இவர்கள் உள்ளால் பாடப் புத்தகங்களிலும், தனியார் பாடசாலைகளிலும் சில சிந்தனைகளை புகுத்தியிருப்பதானது முன்னால் வாழ்ந்தவர்களை உண்மையிலேயே இழிவுபடுத்தியது போன்றுள்ளது.

முன்னால் வாழ்ந்தவர்கள் சரியில்லை. பின்னால் வாழ்ந்தவர்களே சரியென்பதை காண்பிக்கவே அவர்கள் இந்த வேலையை செய்திருக்கிறார்கள்.  முன்னால் வாழ்ந்த உலமாக்கள் அல்லது செய்ஹ்மார்கள் அல்லது இஸ்லாத்திற்காக தொண்டாற்றிய பெரும் பெரும் அறிஞர்களது சிந்தனைகள் அழிக்கப்பட்டு அவர்கள் சரியில்லை, அப்படியொன்று இல்லை என்றும் அபுல் அஹ்லா மௌதூதி, இப்னு தைமியா போன்றவர்களே புதிதாக கிளம்பி வந்து இஸ்லாத்துக்கு அரும் பங்காற்றியுள்ளனர் என்கின்ற சிந்தனையை போட்டுள்ளார்கள். இது மிகப்பெரும் தவறல்லவா?

இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சூபியாக்களுடைய தியாகத்திலேயே இஸ்லாம் பரவியது. அவற்றையெல்லாம் மறந்து நூறு, இருநுறு வருடங்களுக்குள் வந்த ஆட்களை பெரியவர்களாக்கி, இவர்கள்தான் எல்லாவற்றையும் செய்தார்கள், பழையவைகள் அனைத்தும் பிழையானவை எனக் கூறும் போதே பிரச்சினை வருகிறது. குனூத்தை இல்லாமல் செய்தார்கள், தராவீஹூடைய எண்ணிக்கையைக் குறைத்தார்கள். இப்படி பழமையான மத்ஹபின் போக்கில் இந்நாட்டில் 90 வீதம் மத்ஹபை பின்பற்றி வாழ்ந்த மக்களின் உள்ளத்தில் இருக்கும் எல்லாவற்றையும் பித்அத், ஷிர்க் என்றார்கள்.

இது காபிர்களுக்கு மத்தியிலும் பாரியளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. பழமையை உடைக்கின்றார்கள், பழமையான முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களில் சிலர் எதிரியாக இருக்கின்றார்கள் என்கின்ற கருத்து அன்னிய மக்கள் மத்தியிலும் சென்றிருக்கிறது.

அவர்களுடைய போதனை ஒருபுறத்தில் செல்லட்டும் பரவாயில்லை, ஆனால் அவர்கள் அதனை கொஞ்சம் நிதானமாகக் கையாள்வது சிறந்தது. பழையது சரியில்லை, பழையது பிழை, பழையது பித்அத் என்று சொல்வது தவறானது. நளீமீக்கள் படிக்கின்றார்கள் என்பது உண்மை. பட்டங்களை பெறுகின்றார்கள். அரச பதவிகளில் சேவை புரிகின்றார்கள். ஆனால், அவர்களுள் மத்ரஸாக்களில் இல்மை கற்பிப்பவர்கள் மிக மிகக் குறைவு.

நளீமிக்களில் ஒரு சிலரைத் தவிர இஸ்லாமியத் துறையில் அகீதாவுடைய துறையில் அதாவது சரீஆவுடைய துறையில் ஆழமாகக் கற்கின்றார்களா? என்பது கேள்விக்குறியே. படிப்பு மாத்திரமே அவர்களது நோக்கம். சிறு சிறு குழுக்களாக சேர்ந்து கொண்டு பேஸ்புக்கிலும், பத்திரிகைகளிலும் அது கூடாது, இது கூடும் என்று வீணான பத்வாக்களை வழங்குகின்றார்கள். இப்படி குழுக்களாக சேர்ந்து கொண்டு சண்டைபிடித்தால் யாருக்கு நஷ்டம். எமது சமூகத்துக்குத் தான் நட்டம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

“நளீமிக்கள் தங்களுக்கான நாட்டுப் பங்களிப்பையும் சமூகப் பங்களிப்பையும் சரியாகச் செய்வதன் மூலம் இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள முடியும்.”

என்.எம். அமீன் – தலைவர், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா

நளீமீக்கள் இந்த நாட்டில் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யாவின் பட்டதாரிகள். இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்துடைய கிறீம் என்று சொல்கின்ற அதாவது க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறப்பாக சித்திபெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படையிலான கல்வியையும் உலகக் கல்வியையும் வழங்குகின்ற ஒரு நிறுவனமே நளீமிய்யா ஆகும். உண்மையிலேயே நளீமிய்யா பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை புரிந்துகொள்ளாத சிலர் தெரிவித்து வருகின்றனர். நளீமிய்யா உண்மையில் முஸ்லிம்களுடைய முதுசமாகும். நளீமிய்யா பட்டதாரிகள் இந்நாட்டின் உயர் பதவிகளில் உள்ளனர். அவர்கள் அந்த இடங்களுக்குத் தானாக வரவில்லை. நாட்டில் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சைகளில் அவர்கள் தெரிவாகி அதனூடாகத் தான் உயர் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த இடங்களில் திறமையான முறையில் சிறப்பாக சேவையாற்றியிருக்கிறார்கள். உதாரணமாக இந்த நாட்டினுடைய தேர்தல் ஆணையாளராக ஒரு முஸ்லிம் இருந்ததென்றால் அது நளீமிய்யாவின் உற்பத்தியாகத்தான் உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் சிலர் முஸ்லிம் சமூகத்தை குழப்பிவிடுவதற்கான கருத்துக்களை தெரிவிப்பார்கள். நளீமிகள் தங்களுடைய செயற்பாட்டு முன்மாதிரியால் அதனை வெற்றிகொள்ள வேண்டும். இதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இன்று இப்படி தொடர்ந்து சில நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக எங்களை அடிக்க முற்படுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் வெற்றியளிக்காது. நளீமிக்கள் தங்களுக்கான நாட்டுப் பங்களிப்பையும் சமூகப் பங்களிப்பையும் சரியாகச் செய்வதன் மூலம் இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள முடியும்.

 அதனை இப்போதே பெற்றிருக்கின்றார்கள். பல்வேறு அரச நிறுவனங்களில் அவர்கள் பணிபுரிகின்றார்கள். முன்மாதிரிமிக்கவர்களாக இருக்கின்றார்கள். அரச துறையில் ஏனையவர்களோடு ஒப்பிடும்போது நளீமீக்கள் நேர்மை, சிறப்பான செயற்திறன் காரணமாக இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும். ஒட்டுமொத்த பெரும்பான்மை சமூகங்களும் இப்படிப் பேசவில்லை. அவர்களோடு பணிபுரிந்தவர்கள் நளீமீக்களை புரிந்துகொண்டிருப்பார்கள். ஆகவே நாம் எங்களுடைய செயற்பாடுகள் மூலம் தான் எங்களுக்கான எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள முடியும். மீள்பார்வை

1 கருத்துரைகள்:

The only way out is thru AHLAQ,

Post a comment