Header Ads



பலஹத்துறை வரலாற்றில் கணிதத்துறையில், முதல் பெண் பட்டதாரி

நீர்கொழும்பு, போருதோட்டையைச் சேர்ந்த மொஹமட் தாஹிர் மொஹமட் (பரீத்) - மொஹமட் தாவூஸ் பாத்திமா தஸ்லீமா தம்பதிகளின் மூத்த புதல்வி பாத்திமா சஹ்லா தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். Bachelor of Science (Joint Major) in Electronics and Mathematics, Mathematical Modelling & Statistics. இவர் தனது பட்டத்தை Second class (lower division) தரத்தில் பெற்றிருக்கின்றார். 2020 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி குளியாப்பிட்டியில் அமைந்துள்ள வயம்ப பல்கலைக்கழகத்தில் இந்த பட்டமளிப்பு இடம்பெற்றது.

பலஹத்துறையில் பரீத் சேர் என்று கூறினால் அறியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு குறைவு. கணிதப் பாட கற்பித்தலில் இவர் முன்னர் பிரபலமாக அறியப்பட்டவர். பின்னர் தனது பொருளாதார, இதர காரணிகளால் தற்போது குவைத் நாட்டில் பணி புரிந்து வருகின்றார். இந்த பரீத் சேரின் மூத்த புதல்வி தான் பாத்திமா சஹ்லா. இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்/அல்-பலாஹ் கல்லூரியில் (Gr-1 to Gr-5) கற்றதுடன், பின்னர் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி (Gr-6 to 9), நீர்/ விஜயரத்தினம் இந்துக் கல்லூரி (Gr-10 to O/L), மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி (A/L) ஆகிய பாடசாலைகளிலும் கல்வியைத் தொடர்ந்தவராவார். இரண்டாவது புதல்வி பாத்திமா ஹஸ்னா நீர்/அல்-பலாஹ் கல்லூரியிலும், மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியிலும் கற்று, தற்போது நீர்/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் கற்றுவருவதுடன், மாணவத் தலைவியாகவும் திகழ்கின்றார்.

சவால்களும், சாதனைப் படிகளும்!

சஹ்லாவின் சாதனை இலகுவாக வாய்த்ததல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வயம்ப பல்கலைகழகத்தின் Faculty of Applied Science இல் தனது பல்கலை நாட்களை கடந்திருக்கின்றார். இதில் பகிடிவதை (Ragging), குடும்பத்தை பிரிந்திருந்த நாட்கள், உணவுப் போராட்டம் என பல்வேறு சவால்களை ஏனைய பல்கலை மாணவர்களைப் போல் இவரும் கடந்திருக்கின்றார். நாட்டில் நிலைமைகள் அசாதாரண கட்டங்கள் பலதை தாண்டி இருக்கின்றது. இதன்போதும் இவர் பல அசௌகரியங்களை சந்திக்காமல் இல்லை. இலத்திரனியல்துறை மாணவியான இவர் தனது இறுதி Project ஐ சமர்ப்பிக்க வேண்டிய கால கட்டம் என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முடிவடைந்து ஓரிரு நாட்கள். வீடுகள் சோதனையிடப்படும் காலகட்டம், கடும் அச்சத்தில் தனது Project பொருட்களையே வீசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஆரம்பத்தில் இருந்து அதை செய்து கிராம உத்தியோகத்தரின் கடிதமும் பெற்று, நீர்கொழும்பில் இருந்து குளியாப்பிட்டிக்கு பிரத்தியேக வாகனத்தில் அதை கொண்டு சென்ற அனுபவம் உண்மையில் மறக்க முடியாத ஒன்று. 

பெரும்பான்மை மதத்தவர் சூழ்ந்த ஒரு சூழலில், பெரும்பான்மை மக்களுடன் பல்கலைக்கழத்தில் ஒரு முன்மாதிரியாக வாழ்தல் என்பதே பாரிய சவால். இந்த பாரிய சவாலில் வென்றதுடன் அதே பல்கலைக்கழகத்தில் Demonstrator ஆக தற்போது இவர் கற்பித்தும் வருகின்றார் என்றால் இது மேலும் பாராட்டத்தக்க விடயம். சஹ்லா தனது பெற்றோர், சகோதரி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், பல்கலைக்கழக சமூகம், ஊர் மக்கள், நலன்விரும்பிகள், விஷேடமாக சிறிய தந்தை அப்பாஸ் சாச்சா மற்றும் குவைத் அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு இவ்விடம் நன்றி கூறச் சொல்கின்றார்.

இளநிலை பட்டம் (Bachelors Degree) தற்போது இவருக்கு கிடைத்திருக்கின்றது. வயம்ப பல்கலைக்கழகத்தின் Certificate in Business English, Advance English ஆகியவற்றுடன், ESOFT இல் Certificate in JAVA, REGENT இல் Spoken English கற்கைகளையும் இவர் பூர்த்தி செய்துள்ளார். இத்துடன் முடியவில்லை அவரது பயணம். ஆம், சஹ்லா தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகத்தின், Faculty of Engineering இல் Master of Science in Business Statistics, அதாவது வணிக புள்ளிவிபரவியல் முதுமானிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகின்றார்.

O/L அல்லது A/L முடிந்தவுடனே திருமண வாழ்க்கைக்குள் உள்நுழைத்து பின்னர் கற்க முடியுமா? முடியாதா? என்ற திண்டாட்டத்துடன், அல்லது ஏக்கத்துடன் தமது கனவுகளைத் தொலைத்த பல பெண்களை இந்த இலங்கை முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் பார்த்து சலித்துவிட்ட நிலையில், சஹ்லா முதுமானி வரை தன்னை நகர்த்திவந்த விதம் பலருக்கு ஒரு முன்னாதரணம். கலாநிதிப் பட்டம் (PhD) வரை தனது கல்வியை தொடர வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கும் சஹ்லா, நீர்கொழும்பு பலஹத்துறை வரலாற்றில் கணிதத் துறையில் பட்டம் பெரும் முதல் பெண் பட்டதாரி என்பது ஊருக்கும், உறவுகளுக்கும் பெரும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. முன்னோடியின் வாழ்த்துக்கள் சஹ்லா!

இந்த சாதனையை நேரடியாகப் பார்க்க குவைத் நாட்டிலிருந்து இதற்காக இவரது தந்தை இரண்டு வார கால விடுமுறையில் வந்திருக்கின்றார். இன்ஷா அல்லாஹ், விடுமுறை முடிந்து அடுத்தவாரம் சஹ்லாவின் தந்தை குவைத் செல்வார். தன்னை செதுக்கிய வயம்ப பல்கலைக் கழகத்தில் கற்பிப்பதற்காக மீண்டும் சஹ்லாவும் பயணமாகின்றார்.

- அனஸ் அப்பாஸ்

1 comment:

Powered by Blogger.