Header Ads



மக்களின் தேவையாக இருந்தது தலைமைத்துவமேயன்றி, கோட்டாபய ராஜபக்ஷ அல்ல - ஜனாதிபதி

தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த நாட்டினை சீர்படுத்துவதற்கான தலைமைத்துவமே மக்களின் தேவையாக இருந்ததேயன்றி கோட்டாபய ராஜபக்ஷ அல்ல என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

எனவே தேவைகளை இனங்கண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இயன்றளவு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இன்று (09) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் சம்மேளனத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

தவறான பாதையில் பயணித்த நாட்டினை சீர்படுத்துவதற்கான மாற்றத்தில் பங்களிப்பு வழங்கிய இளம் சமுதாயத்திற்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார். 

இளம் தலைமுறையினதும் ஒட்டுமொத்த மக்களினதும் எண்ணங்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு தமது அரசாங்கம் உயர்ந்த அளவில் முயற்சிக்கும் என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தன்னை ஜனாதிபதியாக நியமித்ததைப் போன்று தனது கொள்கைகளை மக்களுக்காக முன்னெடுத்து செல்வதற்கும் இளம் தலைமுறையின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து வருட காலமாக நாட்டின் பொருளாதாரமும் அரச நிறுவனங்களும் வீழ்ச்சியை சந்தித்தனர். பொருளாதாரத்தை பலப்படுத்தி இலாபமீட்டும் வினைத்திறன்மிக்க அரச நிறுவனக் கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது உறுதியளித்தார். 

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட தொழிநுட்ப பயன்பாடு அவசியமாகும். நவீன தொழிநுட்பத்திற்கும் தகவல் தொடர்பாடலுக்கும் முன்னுரிமையளித்து கல்வி முறைமையை மாற்றுவதற்கான தேவைப்பாடு காணப்படுகின்றது. அதனை துரிதப்படுத்துவதனூடாக இளைஞர் யுவதிகளுக்கான பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிக சம்பளத்தினை வழங்கவும் முடியுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியடைந்த நாடுகளை முன்னூதாரணமாகக் கொண்டு 20 வயதாகும்போது பல்கலைக்கழகத்திலிருந்து இளைஞர்கள் தொழிற்துறையில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் இடம்பெறும் பகிடிவதை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

தகவல் தொழிநுட்பத்துறையை விருத்தி செய்வதனூடாக பல துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். சுற்றுலா, பெருந்தோட்ட மற்றும் விவசாய துறைகளினூடாக வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வையும் நாட்டின் பொருளாதாரத்திற்கு உயர் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

பல்வேறு போலி விளம்பரங்களினால் ஈர்க்கப்பட்டு தமது இளம் பருவத்தை வீணடித்துக்கொள்ள வேண்டாமெனவும் ஜனாதிபதி அவர்கள் இளம் தலைமுறையினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தூரிகை, மண்வெட்டி, கலப்பை ஆகியவற்றை கையிலெடுத்த இளம் தலைமுறை நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்வந்துள்ளது என சம்மேளனத்தில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். 

இளம் தலைமுறையே நாட்டைக் கட்டியெழுப்பும் சக்தியாகும். உலகை வெல்வதற்கு இவர்களால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் தலை வணங்கி மரியாதை செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.  

160 தேர்தல் பிரிவுகளின் இளம் பிரதிநிதிகள் பங்குபற்றிய இந்த மாநாட்டிற்கு அமைச்சர்களான மஹிந்த யாப்பா அபேவர்த்தன, டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, திலும் அமுனுகம, இந்திக்க அனுருத்த ஆகியோரும் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான இளைஞர், யுவதிகளும் இந்த சம்மேளனத்தில் கலந்துகொண்டனர்.



மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.01.09

No comments

Powered by Blogger.