Header Ads



முஸ்லிம் சட்டத்தை ரத்துச்செய்தால், பாதிப்படைந்த பெண்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கலாம்

(ஆர்.விதுஷா)

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் திருமண கட்டளை சட்டத்தை திருத்துதல் ஆகியவற்றின் ஊடாக  முஸ்லிம் சட்டத்தினால் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு தகுந்த  நிவாரணத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும் என  பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.

1951ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குதல் மற்றும் திருமண கட்டளைச்சட்டத்தை திருத்துதல் ஆகிய இரு திருத்தங்களை உள்ளடக்கிய சட்ட மூலங்களை அவர் இன்று -08- பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது  ,  

1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குதல் மற்றும் திருமண சட்டத்தை திருதத்துதல் ஆகிய  இரு திருத்தங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளேன்.  

இதில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நாட்டில் ஒரே நீதியே பின்பற்றப்படும்.

எமதுநாடு ஒரே சட்டத்தின் கீழ்  ஆளப்படும் என ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  கூறியிருந்தார். இதுவே, தேர்தல் பிரசாரங்களின் போதும் முன்னிலைப்படுத்தப்பட்டது. 

முஸ்லிம் திருமணச்சட்டத்தின் ஊடாக  நாட்டில் பல்வேறு  பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இந்த  சட்டத்தின்  காரணமாகவும்  காதி நீதிமன்ற முறைமையின்  காரணமாகவும்  தாம்  பாதிப்புக்குள்ளாவதாகமுஸ்லிம்  பெண்களே  முறைப்பாடுகளை  அளித்துள்ளனர். 

விவாகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கல்வி அறிவு  குறைந்தவர்களினாலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

ஆகவே,அந்த வழக்கு விசாரணைகளின் தீர்ப்புகள் பக்கச்சார்பான முறையில் இருக்கின்றன. காதி நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம்  பெண்கள் பாதகமான விளைவுகளை சந்திப்பதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் அமைப்புக்களின்  ஊடாக தெரிய வந்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த விடயம் தொடர்பில்  எத்தகைய நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. அதேபோல்  ,  இந்த சட்டம் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் அமைதியை  சீர்குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. 

அதிகளவிலான பௌத்த மற்றும் தமிழ் இளம்பெண்கள் இஸ்லாமிய இளஞர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதன் பின்னர்  அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படின் தீர்வு முஸ்லிம்  சட்டத்திற்கு  அமையவே கிடைக்கப்பெறும். 

ஆகவே ,அவர்கள் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். மட்டக்களப்பு பகுதியில் உள்ள தமிழ் பெண்கள் இத்தகைய பிரச்சினைகளை அதிகளவில் எதிர்கொண்டுள்ளனர்.  

தமிழ் பெண்ணொருவரை இஸ்லாமிய இளைஞரை இரண்டாம்  தடவை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அந்த திருமணம்  முஸ்லிம் சட்டத்திற்கு அமைய இடம் பெறுவதுடன் , அவர்  பெயர்  மாற்றப்பட்டு முஸ்லிம் சமூகத்தினுள்  இணைத்துக்கொள்ளப்படுகின்றார். 

அதனால் சாதாரண நீதிமன்றத்தின் ஊடாக அன்றி காதி நீதி மன்றம் வழங்கும்  தீர்ப்பினையே ஏற்றுக்கொள்ள  வேண்டிய  நிலைமை  அந்த பெண்ணிற்கு ஏற்படும். 

அதேவேளை,காதி நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது உரிய வகையில் பொறுப்புக்கூறக்கூடிய வித்தில் பெண் தலைமைத்துவம் இன்மையும்  அந்த நீதிமன்றத்தின் குறைபாடாகும். 

ஆகவே , நான் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன். இது தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் தீர்வு  பெற்றுக்கொடுக்கப்படும். 

ஆயினும்  இதற்கு பொறுப்பான அமைச்சரினால் இந்த விடயம் தொடர்பிலான நடவடிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்து ஒரு மாத காலப்பகுதிக்குள் தீர்வினை ப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.