Header Ads



விஜேதாஸவின் பிரேரணை நாட்டில் கலவர, நிலையை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டது - சட்டவல்லுநர் லால்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்சவினால் கொண்டுவரப்படவுள்ள 21வது திருத்தத்தினால் 89களில் ஏற்பட்ட கலவரத்தைப் போன்று நாடு பின்நோக்கி நகர்வதற்கான அபாய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவல்லுநரான லால் விஜேநாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று பிரதம நீதியரசர், உச்சநீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணைக் குழுத் தலைவர், நீதிச்சேவைகள் ஆணைக்குழு, கணக்காய்வாளர் உட்பட பல முக்கிய பதவிகளுக்கான நபர்களை ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு இடையேதான் நியமிக்கப்படுகின்றன.

இதனை மாற்றி ஜனாதிபதிக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதற்காகவே இந்த 21வது திருத்தம் கூறுகின்றது. சமூகத்தில் அனைத்தையும் பின்நோக்கி நகரச்செய்வதே இதன் நோக்கமாகும்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழு, இலஞ்சத் தடுப்பு ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்துவமும் இதனூடாக அற்றுப்போகும் நிலை உள்ளது.

மக்கள் இன்று சர்வாதிகார முறையை நீக்குமாறு கோருகின்ற நிலையில், பிரதமருக்கு உள்ள அதிகாரங்களைக் குறைத்து, மீளவும் ஜனாதிபதிக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கமே இதில் உள்ளது.

ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து அமைச்சுக்களையும் தன்வசம் வைத்திருப்பதற்கான திருத்தமும் அதில் உள்ளது.

மாவட்ட மட்டத்தில் இப்போதுள்ள தேர்தல் முறையில், கட்சிக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு வாக்குகளின்படி ஆசனங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்க வரையறை இருக்கிறது.

இதற்கு முன்னர் 12.5 சதவீத முறை இருந்தது. குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் அந்த மாவட்டத்தில் வாய்ப்பு சிறுகட்சிகளுக்கோ அளிக்கப்படாது.

அன்று சிறு கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. 89களில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் இந்த கலவரத்திற்காக காரணம் குறித்து ஆராயப்பட்டபோது, நிராகரிக்கப்படுகின்ற இளைஞர்களின் குரல்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும்படி நாடாளுமன்றத்திற்கு வெளியான போராட்டமே இது என்பது அறியப்பட்டது.

இதற்கமைய பின்னர் சிறுபான்மையினத்தவர்களுக்கும் அதிக சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. ஆகவே இந்த 21வது திருத்தம் நாட்டிற்கும் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கின்றேன்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.