Header Ads



வாழைச்சேனையில் குரங்குகள் அட்டகாசம் - மக்கள் அவதி, கட்டுப்படுத்த யாருமில்லையா..?

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பகுதியில் குரங்குகளில் அட்டகாசத்தினால் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாழைச்சேனை ஆற்றுப் பகுதியில் இருந்து வாழைச்சேனை 05 பிரதேசத்திற்கு குரங்குகள் கூட்டமாக தினமும் வருகை தந்த வண்ணமே உள்ளது. இதனால் வீட்டின் ஓடுகள், தென்னை மரங்கள், வாழை மரங்கள் உட்பட்ட மரங்கள், தளபாடங்கள் என்பவற்றை நாசம் செய்து விட்டு செல்கின்றனர்.

அத்தோடு இக்குரங்குகளின் அட்டகாசத்தினால் இப்பிரதேச மக்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், குரங்குகள் தினமும் வருகை தருவதால் சிறுவர்களை வெளியில் வைத்துக் கொள்வதில் அச்ச நிலைமை ஏற்படுகின்றது.

வீட்டுத் தோட்டப் பயிர்களையும், காய்த்துக் குலுங்கும் பயன்தரு மரங்களின் காய், பழ வகைகளையும் பறித்து உண்பதுடன், தினமும் அவைகளை அழித்து நாசம் செய்கின்றது. இதனை பராமரித்து வரும் மக்களின் நிலைமை ஏமாற்றத்தினை தருகின்றது.

வீட்டுக் கூரைகளின் மேல் ஏறி அடுத்த வீட்டுக்கு தாவி திரிவதால் சில வீடுகளின் கூரை ஓடுகள் சேதமடைந்து காணப்படுகின்றது. அத்தோடு காலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பயத்தினை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

குரங்கினை துரத்த முற்படும் போது பொதுமக்கள் மீது குரங்கிடம் உள்ள பொருட்களை எறிகின்றது. இதனால் மக்கள் துரத்துவதற்கு பயந்த நிலையில் காணப்படுகின்றனர். எனவே இக்குரங்குகளின் தொல்லைகள் இருந்து பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
  

No comments

Powered by Blogger.