Header Ads



கொரோனா வைரஸ் தாக்கம், சோதனை முறைமை முறையானதாக இல்லை - அநுரகுமார

(எம்.மனோசித்ரா)

விமான நிலையத்தில் பயணிகளை சோதனைக்குட்படுத்தும் முறைமை முறையானதாக இல்லை. எனவே உயர் தொழிநுட்ப கருவிகளைக் கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையிலும் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டால் மக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போது கொரோனா வைரஸ் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. இலங்கை ஒரு தீவு என்பதால் இவ்வாறான பாரதூரமான வைரஸ் தொற்றுக்கள் நாட்டில் பரவுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. இதற்காக முதலில் செய்ய வேண்டியது விமான நிலையத்திற்கூடாக இலங்கைக்கு வரும் தொற்றுக்குள்ளானவர்களை இணங்காண்பதாகும். 

எமது நாட்டில் கப்பல் மூலம் வெளிநாட்டவர்கள் வருகை தருவது குறைவாகும். எனவே விமான நிலையத்திற்கூடாக வருகை தருபவர்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனினும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பரிசோதனைகள் முறையானவை அல்ல என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது. எனவே உயர் தொழிநுட்ப கருவிகளைகப் பயன்படுத்தி விமான நிலைய பயணிகளை சோதனைக்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

அத்தோடு பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள  சுகாதார செயற்பாட்டுக்குழுக்களில் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். காரணம் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது எமக்கு அறியக்கிடைத்துள்ளது. 

வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக கொள்வனவு செய்யும் முகக்கவசங்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செயற்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்துவதோடு, முகக் கவசங்களின் தரம் தொடர்பில் உறுத்திப்படுத்த வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. 

வைரஸ் தாக்கம் இலங்கையில் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அரசாங்கத்துக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றால் முகக் கவசங்களை மக்களுக்கு இலசமாக பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்விடயம் தொடர்பில் விஷேடத்துவமுடைய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். காரணம் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளை விடவும் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் செயற்படுவதே அத்தியாவசியமானதாகும் என்றார்.

No comments

Powered by Blogger.