Header Ads



சூராசபை நடத்திய முக்கிய கருத்தரங்கு - (பேசப்பட்ட அதிமுக்கிய விவகாரங்கள்)


இலங்கையில் தஃவா மற்றும் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடும் அமைப்புக்களைச்  சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கொன்றை தேசிய சூரா சபை கடந்த 9.1.2020 ஆம் திகதி கொழும்பில்  நடாத்தியது.

தேசிய ஷூறா சபையின் தஃவா துறைக்கான உபகுழு  “இலங்கைச் சூழலுக்கேற்ப இஸ்லாத்தை முன்வைத்தல்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தஃவா மற்றும் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடும் சுமார் 25 அமைப்புக்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பின் பேரில் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் குறிப்பாக ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டு பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கு உள்ளாகி இருப்பது கண்கூடு.  இதன் விளைவாக இஸ்லாமிய தஃவா மற்றும் சீர்திருத்தப் பணி அமைப்புகள் தமது செயற்பாடுகளை ஓரளவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தியிருக்கின்றன. அவை கடந்த காலங்களில் போற்றத்தக்க பல பணிகளைச் செய்திருந்த போதிலும் கூட இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பற்றி தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் குழு கரிசனையோடு சிந்தித்தது. தொடர்ந்தும் இந்த அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள உற்சாகப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் எந்த இடங்களில் தவறுகள் இடம் பெற்றதனால் இந்நிலை ஏற்பட்டது என்பதை அறிவுபூர்வமாக கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும். எனவே, இந்த வகையில் இந்த அமைப்புக்களுக்கு வழிகாட்டுவதற்காக தேசிய சூரா சபை தனியான ஓர் உப குழுவை நியமித்தது.

அக்குழு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தஃவா துறை மற்றும் சீர்திருத்தப் பணிகளில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் அனுபவமும் உள்ள சுமார் 25 பேரை இந்த நிகழ்வு நடக்க முன்னர் சந்தித்து அவர்களிடம் கேள்விக் கொத்தொன்றை முன்வைத்து எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் பதில்களை பெற்றுக்கொண்டது. தஃவா உபகுழுவின் செயலாளர் அஷ்ஷெய்க் பகீஹுதீன் முஹம்மத் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அந்த பதில்களது சாராம்சம் ஆவணமாக அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்டடது.

கருத்தரங்கில்  தேசிய ஷூரா சபையின்  கெளரவ தலைவர் தாரிக் மஹ்மூத்  தலைமையுரை நிகழ்த்தினார்.தஃவா உபகுழு தலைவர் அஷ்ஷேக் நவ்பர்(கபூரீ) அவர்களால் வரவேற்புரையும் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக உரையும் நிகழ்த்தப்பட்டது.25 பேரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களது சாராம்சத்தை அஷ்ஷெய்க் பளீல் முன்வைத்தோடு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து  சபையோருக்கு மத்தியிலிருந்து கருத்துக்களை முன் வைக்க விருப்பம் தெரிவித்த ஐக்கிய தெளஹீத் ஜமாஅத்தின் தலைவர் அஷ்ஷேக் வதூத் ஜிப்ரி, ஷாதுலிய்ய்யா தரீக்காவைச் சேர்ந்த கலாநிதி அஸ்வர் அஸாஹீம்(அஸ்ஹரீ), பாதிஹ் நிறுவன விரிவுரையாளர் ஜமாஅதுஸ் ஸலாமா அமைப்பைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத், கலாநிதி எம்.எம்.நயீம் ,தேசிய ஷூரா சபையின் உபதலைவர் சகோ.ரீஸா யஹ்யா, ஜமாஅதே இஸ்லாமியின் முன்னை நாள் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

குழுக் கலந்துரையாடல்

கருத்தரங்கின் அடுத்த முக்கிய நிகழ்வாக கலந்துரையாடல் இடம்பெற்றது. வருகை தந்த பிரமுகர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான தலைப்புகள் வழங்கப்பட்டன. கலந்துரையாடலின் முடிவுகளை தத்தமது  குழுக்கள் சார்பான பிரதிநிதிகள் முன்வைத்தனர். குறிப்பிட்ட ஒரு தலைப்போடு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களோடு சேர்க்கப்பட வேண்டிய கருத்துக்களை இணைக்கும் வகையில் சபையிலிருந்து சட்டத்தரணி பாரிஸ், கலாநிதி ரஊப் ஸைன்,  அஷ்ஷெய்க் ஆசாத், ஜாமிஆ நளீமிய்யா விரிவுரையாளரும் அதன் இஸ்லாமிய கற்கைகள் பீட தலைவருமான அஷ்ஷெய்க் ஸீ.ஐயூப் அலி ஆகியோர் கருத்துக்களை பரிமாறினர். இந்தக் கலந்துரையாடலை சகோதரர் இஸ்மாயில் அஸீஸ் நடாத்திவைத்தார்.

இந்த முன்னெடுப்பு காலத்தின் அவசியத் தேவை என்றும் தேசிய சூரா சபை மேற்கொண்ட மிக முக்கியமான இந்தப் பணிக்கு தம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் தாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் சபையோர் தெரிவித்தனர். இது இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல், திருப்புமுனை என்றும், ஆனால் தொடர்ந்து செயல்படுவதே முக்கியமானது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் சில விடயங்களில் நாம் கவனமெடுக்கத் தவறிவிட்டோம். அதனுடைய விளைவுகளை தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம். தஃவா மற்றும் சீர்திருத்தப் பணிகளில் பிரத்தியேகமான, இலங்கை சூழலுக்கேயுரிய தேவைகளும் முன்னுரிமைகளும் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள முறைமைகள் எமது சூழலுக்கு உசிதமானவையல்ல. இந்த நாட்டிலுள்ள சகல இனங்களது மனப்பாங்குகள், உணர்வுகள் என்பன மதிக்கப்பட்டு,புரியப்பட்ட நிலையில் தான் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பவும் இனங்களுக்கிடையில் சமாதான  சகவாழ்வை நிலைநிறுத்தவும்  தஃவா  பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். சில இளைஞர்கள் தீவிரவாத கடும்போக்கு நிலைகளுக்கு போயிருப்பதை கவனத்தில் எடுத்து எதிர்காலப் பரம்பரையை இஸ்லாத்தின் மிதவாத, வசதிய்யா எனப்படும் நடுநிலைச் சிந்தனையில் வளர்த்தெடுக்க முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளுக்கு இடையில் நிலவும் முரண்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் இந்த நிர்க்கதியான நிலைக்கு மற்றுமொறு காரணமாகும். இயக்க வெறி எம்மை மிக அதிகமாகப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. எனவே, இந்த மோதல்கள் நிறுத்தப்பட்டு உடன்பாட்டுக்கு நாம் வரவேண்டும். பரஸ்பர புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்போடும் இயக்கங்களும் இயக்க உறுப்பினர்களும் நடந்துகொள்ளவேண்டும். தஃவாவுகான தனியான ஒரு கவுன்சில் அமைக்கப்பட்டு தஃவா மற்றும் சீர்திருத்தச் செயல்பாடுகள் ஒன்றிணைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட வேண்டும். தஃவாத் துறையில் ஈடுபடுபவர்கள் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட பின்னரே தஃவா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். மதரஸாக்களது பாத்திட்டங்களில் கால சூழலுக்கும் தஃவாப் பணிகளது தேவைகளுக்கும் ஏற்ப நியாயமான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் சபையில் பரிமாறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, தரீக்காக்கள், தவ்ஹீத் அமைப்புகள், ஜமாஅதுஸ் ஸலாமா, ஜமாஅதே இஸ்லாமி,ஸீ.ஐ.எஸ், ஷபாப் போன்ற இன்னோரன்ன அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த தாஈக்கள்,தேசிய ஷூரா சபையின் நிறைவேற்று மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் புத்திஜீவிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதி நிகழ்ச்சியாக தேசிய ஷூரா சபையின் கெளரவ பொருளாலர் அஷ்ஷெய்க் ஸியாத் இப்ராஹீம்(கபூரீ)அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இந்த செயலமர்வில் மிகவும் கண்ணியமான, கௌரவமான, தூரநோக்கு கொண்ட கருத்தாடல்கள் மிகவுமே சுமூகமான சூழலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முடிவுகள்

நிகழ்வின் இறுதியில் எட்டுப் பேர் கொண்ட ஒரு குழுவினர் தேசிய ஷூரா சபையின் தஃவாவுக்கான உபகுழுவுடன் இணைந்து எதிர்காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டனர்.

பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதன் விபரமாவது :

இலங்கையில் இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும்.

பிற மதங்களை ,இனங்களைச் சேர்ந்தவர்களது உணர்வுகள், கலாச்சாரங்கள் என்பவற்றை மதிப்பதோடு தேசிய நலனுக்கான மூலோபாயத்திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை  செயல்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சி அவசியமாகும்.

பலவிதமான தஃவா நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்  இலங்கையில் இஸ்லாத்தை பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்குமாக தமக்கிடையே பரஸ்பர மரியாதையுடனும் ஒற்றுமையுடனும் பொதுவான  வழிகாட்டுதல்களில் ஒருமித்த நிலைக்கு வர வேண்டும்.

Ash-Sheikh S.H.M.Faleel (Naleemi), B.A., M.A.



9 comments:

  1. B. A. M. A. M. PHIL (PERADENIYA) KANDY OLD ROAD

    ReplyDelete
  2. காத்திரமான முயற்சி. இன்னும் தொடர வேண்டும்.

    ReplyDelete
  3. Masha Allah, Very good initiative. May Allah accept everyone efforts grant his barakah

    ReplyDelete
  4. Alhamdhulillah ! very good initiative.

    ReplyDelete
  5. Masha Allah it's great... please update the process going on ...to the public's

    ReplyDelete
  6. Did thableeq brothers participate in this program?

    ReplyDelete
  7. No Mr Ghouse, they are above the sky and under the earth

    ReplyDelete
  8. You dint discusses the importance topic of political and Muslim politicians. it's based in creatives problems in the Muslim communities.

    ReplyDelete

Powered by Blogger.