January 02, 2020

சிறுபான்மையினர் நம்பிக்கை இழக்கக் கூடாது - இம்தியாஸ்

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் எதிர்பார்ப்பில் இலங்கைச் சமூகம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை நாம் சரியான முறையில் வாசிப்புச் செய்ய வேண்டும். அம்முடிவுகளை மேல் வாரியாக அல்லாமல் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இலங்கை என்னும் தனித்துவமான பின்னணியில் அல்லாமல் பிராந்திய ரீதியாகவும் உலக அரசியல் போக்குகளை அடிப்படையாகக் கொண்டும் நோக்கப்பட வேண்டியுள்ளது. இன்று இந்தியா, பர்மா போன்ற நாடுகளில் சுழன்று செல்லும் அரசியல் பிரவாகத்தையும் இந்தப் பின்னணியில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இதர பகுதிகளிலுள்ள சிறுபான்மை மக்களுள் பெரும்பான்மையினர் சிங்கள பௌத்த தலைவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதனை இந்தத் தேர்தல் முடிவுகளினூடாக நோக்க முடிகிறது. சிறுபான்மை மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்ட இந்த நம்பிக்கையை       சிதைக்காமல் இருப்பதற்குரிய பின்னணியை உருவாக்கிக் கொள்வது இந்நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று, தேசிய கட்சியாக செயற்படுவதில் இன ரீதியான கட்சிகள் தொடர்பிலுள்ள நம்பிக்கை சிதைவதற்கான இடமுள்ளது என்பது. இரண்டாவது, தேசிய கட்சிகள் தொடர்பான நம்பிக்கை சிதையும்போது ஜனநாயக முறைக்குள் எமது கவலைகளுக்கான தீர்வுகள் கிடைக்காது என்ற நம்பிக்கையில் தீவிரவாதத்தின் பால் ஈடுபடுவதற்கான வழிவகைகள் உள்ளன என்பது. இவை பற்றிச் சிந்தித்துச் செயற்படாமல் எமது நாட்டிற்கு முன்னகர முடியாது.

பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய சகல மக்களையும் ஒன்றிணைக்கும் பயணத்தையே நாம் முன்னெடுக்க வேண்டும். சஜித் பிரேமதாச அவர்களின் தேர்தல் நடவடிக்கையின் கருப்பொருளாக ஒன்றாய் முன்னோக்கிச் செல்லல் என்கின்ற விடயம் காணப்பட்டது. இரண்டாவது, அதிகமானோரின் நலன்களேயன்றி சிறு தரப்பினரின் தேவைகளல்ல என்பதாகும். இம்முறை தேர்தலில் இவ்விரு விடயங்களையும் மக்கள் நிராகரித்தார்கள் என்று நான் கருதவில்லை.

சஜித் பிரேமதாசவிற்கு தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு 35 நாட்களே கொடுக்கப்பட்டிருந்தன. நான்கு வருட கால ஆட்சியின் மறைந்த பகுதிகளை தோளில் சுமந்தவாறே அவருக்கு தேர்தலில் போட்டியிட முடிந்தது. ஒரு புறத்தில் நான்கு வருட கால ஆட்சியில் கனதியான பக்கமும் இருந்தது. காரணம், தகவல் அறியும் சட்டம், சுயாதீன ஆணைக் குழுக்கள், ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விடயங்கள் காணப்பட்டாலும் அதை விட எதிரணியினர் பல வருடங்களாக மறைபகுதிகளை மேலெழுப்பி வந்தனர். அதாவது மிகப்பெரும் பூதத்தை உருவாக்கினர். இது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்ற விடயம். இதனை மக்களது உள்ளத்தில் புகுத்தினார்கள்.

மறுபுறத்தில் மேற்குலகிற்கு சார்பு என்கின்ற பிம்பமும், பௌத்த சமயத்திற்கு எதிரான கொள்கையை கொண்டிருத்தல் என்கின்ற பிம்பமும் கடந்த அரசாங்கத்திற்கு எதிராக சித்திரிக்கப்பட்டது. மூன்றாவது, ஊழல்வாதிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் அவர்களை பாதுகாத்து வருகின்றனர் என்கின்ற குற்றச்சாட்டும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் போன்ற சம்பவங்கள் தொடர்பாகவும் குற்றச்       சாட்டுக்கள் இருந்தன. இவையனைத்தையும் தோளில் சுமந்து கொண்டு தான் சஜித் பிரேமதாச தேர்தலுக்கு முகம்கொடுத்தார்.

இன்னும் ஒரு புறத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புரிமையும் இறுதிக் கட்டத்திலேயே வழங்கப்பட்டது. தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பிருந்து தான் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க முடிந்தது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இவையனைத்து நிகழ்வுகளையும் ஆராய வேண்டியுள்ளது. 35 நாள் என்னும் குறுகிய காலப்பகுதியில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களுள் பெரும்பான்மையையும் அவர்களது நம்பிக்கையையும் பெற்றுக்கொண்ட தலைவராக சஜித் பிரேமதாச அவர்கள் மேலெழுப்பப்பட்டார்.

மறுபுறத்தில் இக்குறுகிய காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 20 வீதம் என்ற அடிப்படையில் காணப்பட்ட பௌத்த மக்களது விசுவாசத்தை இவரால் 30 வீதமாக அதிகரிக்கவும் முடிந்தது. இங்கு சகலரையும் ஒன்றிணைத்த இலங்கைக்காக வேண்டியும் சிறிய தரப்பினரின் தேவைப்பாடுகள் அல்லாமல் பெரும்பான்மையினரின் நலனுக்காக வேண்டி அவதானம் செலுத்தும் நாடு தொடர்பான கனவு மக்களால் நிராகரிக்கப்படவில்லை. மாறாக நான்கு வருட கால ஆட்சியின் மறைந்த பகுதியை தோளில் சுமக்க வேண்டியேற்பட்டதால்  ஊழல், ஊழல்வாதிகளை பாதுகாத்தல், பௌத்தத்திற்கு எதிரான நிலைப்பாடு, மேற்குலக சார்பு நிலைமை, பாதுகாப்பு குறித்து சோடிக்கப்பட்ட மிகப்பெரும்  பிம்பம் ஆகிய விடயங்கள் மக்களுக்கு மத்தியில் புகுத்தப்பட்டிருந்தன. இதுவல்லாத வித்தியாசமான பயணத்தையே மேற்கொள்கின்றோம் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு 35 நாட்கள் என்கின்ற குறுகிய காலப்பகுதியே வழங்கப்பட்டிருந்தது.

இதனால் இந்நாட்டின் ஜனநாயக முறை குறித்து சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. இந்நாட்டின் தேசிய தலைவர்கள் தொடர்பில் உள்ள நம்பிக்கை சிதைந்துபோனதாக கருத வேண்டியதில்லை. மறுபுறத்தில் இந்நாட்டில் சகலரையும் ஒன்றிணைக்கும் இலங்கையினால் மாத்திரமே இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்கின்ற நம்பிக்கையில் உள்ள தேசிய தலைவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.

தேசிய தலைவர்கள் தற்பொழுது மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். அவர்களது கருத்துக்களுக்குச் செவிமடுக்க வேண்டும். தைரியமான முறையில் இந்நாட்டில் சகல இன மக்களுக்கும் கௌரவமான, சமமான முறையில் வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்பும் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒருபோதும் ஓரினம் மற்றுமொரு இனத்தை பயமுறுத்தி நாட்டின் ஸ்திரப்பாட்டையும், சகவாழ்வையும் நிலையாக கட்டியெழுப்ப முடியாது. வடக்கு கிழக்கைப் புரிந்துகொள்ள வேண்டும். தெற்கு வடக்கைப் புரிந்துகொள்ள வேண்டும். கிழக்கு வடக்கைப் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கு தெற்கைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இது பௌத்த சமயம் உள்ளிட்ட எல்லா சமயங்களுக்கும் செல்லுபடியான விடயமாகும். காரணம், எமக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்குமாக இருந்தால் அவற்றுக்கான காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் அவற்றுக்கு தீர்வு வழங்க முடியும்.

அதுவல்லாமல் வலுக்கட்டாயமான முறையில் அவற்றுக்கு தீர்வு வழங்க முடியாது. இதனால் மக்களை நாம் புரிந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும். மக்களுடனான தொடர்பாடலை இன்னும் வலுப்படுத்த வேண்டும். ஜனநாயகப் பயணத்திலிருந்து நாம் தூர விலகி விடக்கூடாது. அதுவே மிக முக்கியமானது. இதன் மூலமே நாம் தீர்வு காண வேண்டும்.

இப்பயணத்தில் எமது நாட்டின் ஐக்கியத்தையும் முன்னோக்கிய பயணத்தையும் ஸ்தம்பிதமடையச் செய்கின்ற அச்சுறுத்தல்களை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். தனித்து நின்று இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. நாடெனும் வகையிலும் பிராந்திய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் காணப்படும் பின்னணியை நன்றாகப் புரிந்துகொண்டு அறிவால் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

மீள்பார்வை

0 கருத்துரைகள்:

Post a comment