Header Ads



சிரந்தியை சிறையில் அடைக்காமலிருக்க மகிந்தவை, அரசியலிலிருந்து ஒதுங்கமாறு கோரினார்கள்

கடந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி கொள்ளை இடம்பெற்ற போதிலும் அதன் அறிக்கையில் தற்போதைய அரசாங்கமே அக்கொள்ளையை முன்னெடுத்ததாக எதிர்கட்சியினரால் போலியான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை வளாகத்தினுள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்த வணிக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் முன்னேற்ற சேவைகள் அமைப்பின் புதிய அலுவலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நீங்கள் வழங்கிய ஆதரவுடன் 5 ஆண்டுகளிற்குள் தோல்வியடைந்த அரசாங்கத்தை விரட்ட முடிந்தது. இந்த செயற்பாட்டிற்கு நீங்களே உங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கினீர்கள்.

டி.வி.சானக்க, பிரசன்ன ரணவீர ஆகிய மந்திரிகள் அன்று துறைமுகத்தை பாதுகாக்க முயற்சித்த போது சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

பரீட்சையெழுதும் மாணவர்களை பரீட்சைக்கு இரு வாரங்களிற்கு முன்னர் சிறையில் அடைத்தார்கள் என்பதை நான் அறிவேன்.

நாட்டின் வளங்களை விற்பதற்கு எதிர்தவர்களைப் போன்று, தம்முடைய நிலைபேறிற்கு சவாலாக அமைந்தவர்களையும் எவ்வித தடங்கல்களும் இன்றி அரச பலத்தை உபயோகதித்து சிறையில் அடைத்தமையை நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.

அவ்வரசாங்கத்தின் மிலேச்சதனமான செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் வளங்களை விற்பதற்கு எதிர்த்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பின்னிற்கவில்லை என்பதை நினைவுப்படுத்த வேண்டும்.

ஏன் இப்படி நடக்கின்றதென ஒரு சிலர் வினவுகின்றார்கள். ஏன் இவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்குகின்றார்கள் என மக்கள் கதைக்கின்றார்கள்.

அதனை நானும் கண்டேன் இன்று முகப்புத்தகத்தில். ரஞ்ஜன் ராமநாயக்கவினுடைய வழக்கு இன்று விசாரிக்கப்படுகின்றமையால் நான் அதைப் பற்றி கதைக்க விரும்பவில்லை.

வழக்கின் மூலம் உரிய தீர்ப்பு வழங்கப்படும். நடக்க வேண்டியது தற்பொழுது நடந்துள்ளது. எனக்கெதிராக 11 வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இலங்கையில் அதிகளவான வழக்குகள் எனக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்சவிற்காக பேசியமையாலே இவ்வாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சு பதவியின் பொருட்டு முதன் முதலாக அழைப்பு விடுக்கப்பட்டது இவ்வழைப்பை நிராகரித்தவுடன் சிறையில் அடைக்கப்பட்டேன்.

எவ்வித தவறுகளும் இழைக்காது 73 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். முகப்புத்தகத்தை உபயோகிக்க நான் அனுமதிக்கப்படவில்லை. பொலிஸாருடன் இணைந்து செல்பி எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

தாடி வெட்டுவதற்கும் அனுமதி வழங்கவில்லை. என்னை சிறையில் அடைத்தவுடன் பொலித்தின் உரையில் என்னுடைய ஆடைகள் போடப்பட்டிருந்தன.

காலை 9 மணிக்கு என்னை கைது செய்தார்கள். அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நான் அறிந்திருந்தேன். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றும் அறிந்திருந்தேன்.

குறைந்தபட்சம் என் ஆடைகளையேனும் கொண்டுவந்து தரவில்லை. காலையில் நான் அணிந்திருந்த உடையுடனே சிறையில் அடைக்கப்பட்டேன்.

எனக்கான இரவு உணவை பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. காலை முதல் பசியில் இருந்தேன்.

காலை 9 மணிக்கு என்னை FCIDக்கு கொண்டுச் சென்றவுடன் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஏன் விலகினீர்கள் என அங்கிருந்த பொலிஸார் என்னிடம் வினவினார்கள்.

அவ்வாறான அதிகாரிகளே அன்றிருந்தார்கள். என்னை எச்சரித்தார்கள். புன்னகையுடன் நான் அவற்றை எதிர்கொண்டேன்.

இந்நிலை தொடர்பில் வீட்டில் உள்ளவர்களிடம் கூற வேண்டாமென நான் பிள்ளைகளிடம் கூறினேன்.

என்னுடைய ஆடைகள் பொலித்தின் உரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றிற்கு சென்று என்னை சிறையில் அடைத்தவுடன் கொண்டுவந்து தருமாறு கூறினேன்.

இவற்றை எதிர்கொள்வதற்கான மன உறுதி எமக்கிருந்தது. என்னை சிறையில் அடைத்தவுடன் கைதி ஒருவரே எனக்கு சரமொன்றையும், துவாய்யையும் வழங்கினார். இதுவே உண்மை நிலை.

நாம் அழவில்லை, ஒழியவில்லை, வைத்தியச்சாலைகளுக்குச் செல்லவில்லை. அதனை எதிர்கொண்டோம். ஐந்து ஆண்டுகளின் இறுதியில் அரசாங்கத்தை அமைத்தோம்.

பெருமளவான நேரம் நீதிமன்றில் கழிந்தது. எல்லா வகையான முறையிலும் வதைத்து எம் மன உறுதியை சிதைக்க முயன்றார்கள். அதையே மஹிந்த ராஜபக்சவிற்கு செய்ய முயன்றார்கள்.

பிள்ளைகளை சிறையில் அடைத்தார்கள். மனைவியை சிறையில் அடைப்பதை தவிர்க்க வேண்டுமாயின் அரசியலிலிருந்து விலக வேண்டும் என அவரிடம் கோரினார்கள் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.