Header Ads



வறுமையைப் போக்க சவூதி சென்ற, பெண்ணின் கதையோ சோகத்திலும் சோகம்

வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதென்றால் முன்பெல்லாம், பெரும்பாலும் தலையை மாற்றி அனுப்புவார்கள் என்று சொல்வார்கள். ஒன்று கடவுச்சீட்டில் உள்ள பெண்ணின் படத்திற்குப் பதில் வேறொரு பெண்ணின் படத்தைப் பொருத்துவது, மற்றையது முற்றிலும் பெயரையும் தோற்றத்தையும் மாற்றி அனுப்புவது.  

ஆனால், தொழில் நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில் அவ்வாறு எந்தப் பித்தலாட்டத்தையும் இனிச் செய்ய முடியாது என்று நம்பிக்ெகாண்டிருக்கும் காலகட்டத்தில்தான் மூதூர் றிசானா நபீக்கின் வயதைக் குறைத்து அனுப்பியது கண்டறியப்பட்டது. 

எனினும், இம்லட் ராணி என்ற 33வயது பெண்ணின் கதையோ சோகத்திலும் சோகம். தொழிலில் உறுதியில்லாத கணவர். வறுமையில் தள்ளாடும் குடும்பம். மூன்று பிள்ளைகள். நால்வரையும் கல்வியில் கரைசேர்க்க வேண்டும். இதற்கு ஒரே வழி, வெளிநாடு செல்வதுதான். கணவரின் முயற்சியில் 2019ஜூன் 13ஆம் திகதி சவூதி அரேபியா செல்கிறார் இம்லட் ராணி. மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெண்களைத் தொழிலுக்கு அனுப்புவதென்றால், பெருந்தொகைப் பணத்தைச் சன்மானமாகக் கொடுக்கிறார்கள். அப்படி இம்லட் ராணிக்கும் சன்மானத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மனைவி வெளிநாடு சென்றதிலிருந்து அவர் பிள்ளைகளைப் பார்க்காமல், தனது சொந்தக் கிராமத்திலேயே தங்கிவிடுகிறார். 

தன் குடும்பத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்தும் எண்ணத்தில் சவூதி அரேபியாவுக்குச் சென்றவர்தான் இம்லட் ராணி. ஆனால், சென்ற சில மாதங்களிலேயே அவருக்குக் கொடுமைகள் ஆரம்பம். பணிபுரியும் வீட்டில் தாம் அடித்துத் துன்புறுத்திக் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், உடனடியாக முகவரிடம் கூறித் தம்மை நாட்டுக்குத் திருப்பியனுப்புமாறும் தொலைபேசியில் வீட்டாரிடம் கெஞ்சியிருக்கிறார். அந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் எந்தத் தகவலும் இல்லை. ஏழு மாதங்களுக்குப் பின்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து கடந்த ஜனவரி எட்டாந்திகதி ஒரு கடிதம் வருகிறது! இம்லட் ராணி சவூதியில் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாராம்! தந்தை இராயப்பன் உள்ளிட்ட குடும்பத்தவர்களுக்குப் பேரிடி. குடும்பத்தில் ஒரே அல்லோல கல்லோலம். அந்தக் கடிதத்துடன் கடந்த 13ஆந்திகதி வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வந்தால், அங்கு மற்றொரு பேரதிர்ச்சி! 

ஆள் மாறாட்டம், பெயர் மாற்றம், தலை மாற்றம் என்கிறோமே, இம்லட் ராணியின் கணவரின் பெயரையே மாற்றி அனுப்பியிருக்கிறார்கள் முகவர்கள். 

இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர் ஆர்.மோகனின் தகவலின்படி, இம்லட் ராணி, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஹப்புகஸ்தன்னை பெருந்தோட்டத்தின் கீழ் றத்கங்க பிரிவைச் சேர்ந்த இராயப்பன் என்பவரின் மகள். நிவித்திகலை, கொழும்புகாமம் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து நான்கு குழந்தைகளுக்குத் தாயானவர். இம்லட் ராணி சவூதிக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகளும் இருந்திருக்கிறார்கள். 13, 4வயதுகளில் இரண்டு ஆண்கள், 9,2வயதுகளில் இரண்டு பெண்கள் என நான்கு பிள்ளைகள் ராணிக்கு. அதனால், கணவரின் பெயரை மாற்றினார்களோ என்னவோ தெரியாது! அதுவும் பொலநறுவையைச் சேர்ந்த ஒருவரின் பெயர். 

இம்லட் ராணியின் சடலம் இன்னும் இரண்டு வாரத்தில் இலங்கை வருமாம். ஆனால், சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு இம்லட் ராணியின் போலிக் கணவர் ஆஜராக வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் பணியகத்தின் அதிகாரிகள். எங்கே போய் அவரைத் தேடுவது? இம்லட் ராணியின் உண்மையான கணவர் நிவித்திகலையில் இருக்கிறார். அவரிடம் கேட்டால், சடலம் இலங்கைக்கு வரும்போது உப முகவருடன் சேர்ந்து அந்தப் பொலநறுவை நபரை அழைத்து வந்து சடலத்தைப் பெற்றுக்ெகாள்ள உதவுவதாகக் கூறியிருக்கிறார். இராயப்பன் கூறியதை உறுதிப்படுத்துகிறார் மோகன். அதுமட்டுமல்ல, பணியகத்தின் கடிதம் கடந்த முதலாந்திகதியே இராணியின் கணவருக்குக் கிடைத்திருக்கிறது. அவர் அந்தக் கடிதத்தைக் குடும்பத்தவர்களுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்து கடந்த எட்டாந்திகதியே காண்பித்திருக்கிறார் என்பது மற்றொரு மேலதிகத் தகவல். தனது நண்பர் ஒருவரிடம் உண்மையைச் சொல்லிவிட்டு ராணியின் தந்தைக்கு விடயத்தை மறைத்திருக்கிறார். சுகவீனமுற்றுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாளாம், என்று மட்டும் கூறியிருக்கிறார். என்றாலும், மருமகனின் நண்பர் மூலமாக இராயப்பனுக்குத் தகவல் கசிந்திருக்கிறது. சரி, பொலிஸில் முறைப்பாடு செய்வோம், கடவுச்சீட்டின் பிரதியைத் தாருங்கள் என்று இராயப்பன் கேட்டபோதுதான், உண்மை தெரியவந்திருக்கிறது. இதுவிடயமாக காவத்தை, வேவல்வத்தை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ராணியின் சடலத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது அவரது குடும்பம். சடலத்தைக் கணவரிடம் ஒப்படைப்பதா, அல்லது தந்தையிடம் ஒப்படைப்பதா? என்பதை நீதித்துறையே தீர்மானிக்கும்! ராணி ஏன் இறந்தார், எப்படி இறந்தார் என்பதும் வெளிச்சத்திற்கு வரும். 

வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்ல நினைக்கும் பெண்களுக்கு இம்லட் ராணியின் தலையெழுத்து ஒரு படிப்பினையாக இருக்கும் என்பது நிச்சயம். 

விசு கருணாநிதி

2 comments:

  1. இப்படி பல நூறு கொடூரக் கதைகள். முகவர்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.