Header Ads



பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு, தமக்குத் தேவையில்லை என்று, ஆளுந்தரப்பு நிராகரித்துள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள், பொதுத் தேர்தலொன்றைச் சந்திக்கும் நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது.  

பௌத்த, சிங்கள பேரினவாதக் கோசத்தை முன்வைத்து, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பொதுஜன பெரமுன தரப்பு, பொதுத் தேர்தலிலும் அதே கோசத்துடன்தான் களமிறங்கப் போகிறது.   
எனவே, நாடாளுமன்றிலுள்ள முஸ்லிம் கட்சிகளைத் தம்முடன் இணைத்துக் கொண்டு, பொதுத் தேர்தலில் களமிறங்குவது, பொதுஜன பெரமுனவின் ‘பேரினவாதக் கோசத்துக்கு’ பாதிப்பாக அமைந்து விடும்.  

இந்த நிலையில்தான், ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் களமிறங்கி இருந்தன. தற்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து, சஜித் பிரேமதாஸ அணியின் பக்கம் இவை சாய்ந்துள்ளன.  

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைவர் பதவிக்கான இழுபறிக்கு, பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்வு கிட்டாது விட்டால், ரணில் விக்கிரமசிங்க தரப்பு, யானைச் சின்னத்திலும் சஜித் தரப்பு வேறொரு சின்னத்திலும் போட்டியிடுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்நிலைவரமானது, ரணில் அணியை விடவும் சஜித் அணிக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.  

மேற்கூறப்பட்டது போன்று, ரணில், சஜித் அணிகள் பிரிந்து, பொதுத் தேர்தலில் போட்டியிடும் போது, சஜித் பிரேமதாஸ தரப்பினர், புதிய அல்லது வழமைக்கு மாறான சின்னமொன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும். இது, அவர்களுக்கு மேலதிக சிரமத்தைக் கொடுக்கும். அவர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகளிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும்.  

இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, சஜித் அணியிலுள்ள முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் எவ்வாறு தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை, அடுத்த பொதுத் தேர்தலில் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றன என்பது, முக்கியமான கேள்வியாகும்.  

முஸ்லிம் காங்கிரஸுக்குத் தற்போது நாடாளுமன்றில் ஏழு ஆசனங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பெற்றுக் கொண்ட தேசியப்பட்டியல் ஆசனங்களாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஐந்து ஆசனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய தேசியப்பட்டியல் ஆசனமாகும்.  

கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் போட்டியிட்டதோடு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேரம்பேசி, அந்தக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல்களில் சிலவற்றையும் அந்தக் கட்சிகள் தமக்காகப் பெற்றுக் கொண்டன.  

இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றில் தாங்கள் கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையையாவது, எதிர்வரும் பொதுத் தேர்தலில், குறித்த முஸ்லிம் கட்சிகள் தக்க வைத்துக் கொள்ளுமா என்கிற சந்தேகம், பலரிடமும் உள்ளது.   உதாரணமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்திலேயே, முஸ்லிம் கட்சிகளால் வெற்றிபெற முடியுமா என்கிற கேள்வியும் இருக்கிறது.  

அம்பாறை மாவட்டத்துக்குரிய (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு ஆகும். இவற்றில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மூன்று உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி ஓர் உறுப்பிரையும் பெற்றுக் கொண்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை வென்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது.  

அந்தத் தேர்தலில், தனது மயில் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 32 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. சுமார் 1,500 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றிருந்தால், அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஓர் ஆசனம் கிடைத்திருக்கும்.  

இந்த நிலையில்தான், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில், அந்தக் கட்சி தக்க வைத்துக் கொள்ளுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.  

மறுபுறமாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள், சஜித் தலைமையில் கூட்டணியமைத்துக் களமிறங்கும் போது, அந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும் வேட்பாளர் ஆசனங்களின் எண்ணிக்கையாலும் உட்கட்சிக் குழப்பங்கள் ஏற்படலாம்.  

உதாரணமாக, பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக் குழுவொன்று, தனது தரப்பில் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். இந்த நிலையில், சஜித் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அநேகமாக மூன்று வேட்பாளர் ஆசனங்களையே தனக்காகக் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

கடந்த பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், மூன்று வேட்பாளர் ஆசனங்களைத்தான் பெற்றுக் கொண்டது. விருப்பு வாக்கின் அடிப்படையில், பொதுத் தேர்தலொன்றில் வழங்கப்படும் மூன்று விருப்பு வாக்குகளையும் தனது மூன்று வேட்பாளர்களுக்கும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தந்திரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது.  

ஆக, அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியமைத்துப் போட்டியிடும் நிலையில், மூன்று வேட்பாளர் ஆசனங்களை மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ளுமாயின், அந்தக் கட்சிக்குள் பாரிய குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.  

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருந்த எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர் ஆகிய மூவர் உள்ளனர்.   

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் பதவி வகிக்கின்றார். அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் தற்போது நான்கு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்கின்றனர்.  

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முடிவுடன் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர், எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமது மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான அவாவுடன் உள்ளனர்.   

ஆனால், இவர்கள் அனைவரின் ‘வேட்பாளர்’ ஆசைக்குத் தீனி போட, முஸ்லிம் காங்கிரஸால் முடியாது போகும். அப்போது, கட்சிக்குள் முறுகல் ஏற்படக் கூடும். அந்த நிலைவரம், கட்சி விட்டுக் கட்சி தாவும் சூழ்நிலைகளையும்  ஏற்படுத்தலாம்.  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், இதே ‘தலைவலி’யை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படலாம்.  

மறுபுறமாக, அம்பாறை போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலும், முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஏனைய மாவட்டங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றாலும், அந்தக் கட்சி சார்பில் களமிறக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கான சூழ்நிலைகள் இல்லை என்கிற கருத்துகளும் உள்ளன.  

உதாரணமாக, ஆளுந்தரப்பாக உள்ள பொதுஜன பெரமுனவுக்கு, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆதரவு உள்ள போதும், அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான்.   

பொதுஜன பெரமுன தரப்பில் களமிறக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர்களை விடவும், சிங்கள வேட்பாளர்களே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை, அம்பாறை மாவட்டத்தில் உள்ளது.   

எனவே, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பாக, இரண்டு சிங்கள வேட்பாளர்களை நியமித்து விட்டு, ஏனைய எட்டு வேட்பாளர்களையும் முஸ்லிம், தமிழர் தரப்பிலிருந்து களமிறக்கினால்தான், பொதுஜன பெரமுன சார்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அல்லது இருவரைப் பெற முடியும்.   

அதற்கும், அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவதோடு, ஆகக்குறைந்தது மூன்றுக்குக் குறையாத ஆசனங்களை அந்தக் கட்சி பெற வேண்டும்.  

ஆனால், அம்பாறை மாவட்டத்தில் தமது தரப்பில் இரண்டு சிங்கள வேட்பாளர்களை மட்டுமே களமிறக்குவதற்கு, பொதுஜன பெரமுன சம்மதிக்குமா என்பது சந்தேகமாகும். அதற்கான சாத்தியங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.  

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், நாடாளுமன்றில் தற்போதுள்ள 20 முஸ்லிம் ஆசனங்களையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெற்றெடுக்க முடியுமா என்பதே சந்தேகத்துக்குரியதாகும்.  

மறுபுறமாக, முஸ்லிம் கட்சிகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தவர்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளமையையும் காணக் கிடைக்கிறது.   

இந்தக் கட்சிகள், அமைச்சுப் பதவிகளையும் வேறு பல சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, அந்தச் சுகத்தை அனுவித்து வந்தனவே தவிர, சமூக அக்கறையுடன் செயற்படவில்லை என்கிற புகார்கள், முஸ்லிம் மக்களிடம் உள்ளன. அதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் ஆசனங்களை இழந்தாலும், அது குறித்த வருத்தம் மக்களிடம் பெரியளவில் இருக்குமா எனத் தெரியவில்லை.  

ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக, முஸ்லிம் கட்சிகள் மேடைகளில் கோசமிடுகின்றன. அதன் மூலம், முஸ்லிம் மக்கள் வழங்கும் வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தக் கட்சிகள் வென்றெடுக்கின்றன. 

பிறகு, அதே பேரினவாத சிங்களக் கட்சிகளுடன் சேர்ந்து, அரசாங்கம் அமைக்கும் முஸ்லிம் கட்சிகள், சிங்களக் கட்சிகளின் ஆட்சிக்கு, வக்காலத்து வாங்கவும் தொடங்குகின்றன. இது குறித்த கோபமும் விரக்தியும் முஸ்லிம் மக்களிடம் பரவலாகக் காணப்படுகின்றன.  

எனவே, தமக்கெதிரான அதிகபட்ச அக, புறச் சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் எதிர்வரும் பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் எதிர்கொள்ளப் போகின்றன. இந்த நிலைவரங்களைச் சமாளிப்பதென்பது இலகுவான காரியமல்ல.  குறிப்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாடாளுமன்றில் அந்தக் கட்சி, ஆளுந்தரப்பிலேயே இருந்து வந்துள்ளது. மக்கள் காங்கிரஸ் தலைவர், கடந்த 16 வருடங்களாக, அமைச்சுப் பதவிகளை வகித்து வந்துள்ளார். ஆனால், முதன் முதலாக எதிரணியில் இருந்தவாறு, பொதுத் தேர்தலொன்றை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிறது. இந்த அனுபவம் அந்தக் கட்சிக்குப் புதியதாகும்.  

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸை விடவும் மக்கள் காங்கிரஸுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தல், அதிக சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.  

எனவே, இந்தச் சவால்களையெல்லாம் எதிர்கொண்டு, மேற்படி இரண்டு முஸ்லிம் கட்சிகளும், தமது நாடாளுமன்றப் பலத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

இதற்குள், ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் கூட்டணியிலுள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கக் காத்திருக்கின்றன.  

வெற்றி தோல்விகளுக்கு அப்பால், இந்தக் கட்சிகளை ராஜபக்‌ஷ அணியினர் கைவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை, அந்தக் கட்சியினரிடமும் அரசியலரங்கிலும் அதிகமாக உள்ளது.  

முகம்மது தம்பி மரைக்கார்

3 comments:

  1. "மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும்,

    நல்லதைக் கொண்டு (மக்களை)  ஏவுபவர்களாகவும்

    தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும்

    உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும்

    - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்."

    (அல்குர்ஆன் : 3:104)

    ReplyDelete
  2. முக்கியமான கட்டுரை. இத்தகைய கட்டுரைகள் தொடர் விவாதத்துக்காக விவாத மேடை என்று ஒரு புதிய பக்கத்துக்கு மாற்றப்படுவது நல்லது. முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழரும் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். கிழக்கில் தமிழர் கூட்டமைப்பு தனித்தும் மாற்று அணியான கருணா பிள்ளையான் அணி பொது ஜன பெரமுன சின்னத்தில் போட்டியிடக்கூடும். இதனால் களம் சிக்கலாக உள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும்போது கட்சி வாரியாக பிழவுபட்டு வலு இழப்பார்களா அல்லது மாவட்டம் தோறும் வெல்லக்கூடிய அணியின் பக்கம் மொத்தமாக சாய்வார்களா என்கிற கேழ்வி உள்ளது.
    கிழக்கில் தமிழர்கள் வெல்லக்கூடிய தமிழ் அணியின் பக்கம் சாயும் வாய்ப்புள்ளது. தமிழர்கள் திருமலையிலும் அம்பாறையிலும் வாக்குப் பிரிவதை தவிர்க்க தங்கள் தங்கள் மாவட்டத்தில் வெல்லகூடிய பக்கமாக ஒத்து சாய்கிற முனைப்பு உருவாகக்கூடும். எனினும் இந்த முனைப்பு கட்ச்சி பிணைப்புகளை தாண்டி மேலெழுமா என்பது தெரியவில்லை.

    எப்படி பார்த்தாலும் தமிழர் வாக்குகள் தமிழர் கூட்டமைப்புக்கும் பொதுஜன பெரமுனவில் இருக்கும் மாற்று அணிக்கும்தான் போகும். இதனால் ஐ.தே.க அணியில் போட்டியிடும் முஸ்லிம் வாக்காளர்கள் சிறிது பாதிக்கப்படக்கூடும்.
    வடக்கில் தமிழருக்கு சிக்கல் இல்லை. ஆனால் மன்னார் வவுனியா முல்லைதீவு என வன்னி மாவட்ட முஸ்லிம்கள் ஒன்று திரளாமல் பிழவு பட்டால் இழப்பு ஏற்படலாம்.

    ReplyDelete
  3. இந்தக்கட்சிகளினால் நாட்டில் பரவலாக வாழும் 9% முஸ்லிம் மக்களுக்கு பாரிய அணியாயமும் பின்னடைவும் ஏட்பட்டுள்ளது! இந்த தேர்தலோடு நிம்மதியடைவார்கள் இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.