Header Ads



மயங்கி விழுந்த மாணவி, கொரோனா அச்சத்தால் உதவ மறுத்த பாடசாலை

கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் சுவாச கோளாறு காரணமாக மயங்கி விழுந்த பாடசாலை மாணவியை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என எவரும் முன்வராத சந்தர்ப்பமொன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய குறித்த மாணவி பாடசாலைக்கு சமூகமளித்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், திடீரென சுகயீனமடைந்துள்ளதோடு சுவாசிக்கவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி நோயாளர் காவு வண்டியினை வரவழைத்துள்ளனர்.

இதன்போது குறித்த பாடசாலை பகுதிக்கு நோயாளர் காவு வண்டி வருகை தந்த நிலையில், மாணவியை அழைத்து செல்வதற்கு பாடசாலை சமூகத்தினர் யாரும் முன் வராத நிலையேற்பட்டுள்ளது.

குறித்த மாணவிக்கு கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் மாணவியின் அருகில் சென்று உதவ மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்போது யாரும் உதவ முன் வராத காரணத்தினால் நோயாளர் காவு வாகனத்தின் சாரதி தானே முன்வந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார்.

எனினும் குறித்த மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும், மாணவி சுவாசக்கோளாறு காரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கான சுவாச மட்டம் மிக குறைந்தளவிலேயே காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால் மாணவி உயிரிழந்திருக்க கூடுமெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. Humanity prevails in SriLanka.....only boasting in social media and channels.

    ReplyDelete

Powered by Blogger.