Header Ads



192 கிலோ ஹெரோயினும் ஈரானிலிருந்து வந்ததா..? பிடிபட்டது எப்படி..??


(எம்.எப்.எம்.பஸீர்)

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சிறப்பு தனிப்படை பொலிஸார் முன்னெடுத்த  விஷேட நடவடிக்கையில் 192 கோடி ரூபா பெறுமதியான 192 கிலோ ஹெரோயின் மற்றும் 10 வெளிநாட்டுத் தயாரிப்பு நவீன கைத்துப்பாக்கிகள், 19 மெகசின்கள் மீட்கப்பட்டதுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தற்சமயம் சிறைத் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள மாத்தற மல்லி எனும் பாதாள உலக  உறுப்பினரின் மனைவி எனவும், இந்த  ஹெரோயின் உள்ளிட்ட  திட்டமிட்ட குற்றங்களின் பின்னணியில் உள்ள வலையமைப்பு மற்றும் பிரதான நபர்களைக் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த ஒரு  ஒரு வாரத்துக்கு முன்னர் மேல் மாகாணத்தின்  வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு விஷேட தகவல் ஒன்று கிடைத்துள்ளது.  

பாரிய அளவில் இடம்பெறும்போதைப் பொருள் வர்த்தகம் ஒன்று தொடர்பிலேயே அந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந் நிலையில் அந்த தகவலை மையப்படுத்தி பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேற்கொணட இரகசிய விசாரணை நடவடிக்கையிலேயே இந்த போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் முன்னெடுக்கப்பட்ட  மேலதிக ஆரம்பகட்ட விசாரணைகளில், 

கைப்பற்றப்பட்ட  ஹெரோயின் ஒரு வாரத்துக்கு முன்பே , பண்டாரகம பகுதியில் உள்ள குறித்த  வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  

ஈரானிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்ப்ட்டுள்ளதாக  சந்தேகிக்கப்படும் இந்த போதைப் பொருள் தெற்கின் மிரிஸ்ஸ பகுதியிலிருந்தே பண்டாரகமவுக்கு எடுத்துவரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments

Powered by Blogger.