December 27, 2019

றிசாத், ஹக்கீம், Dr ஷாபி ஆகியோரையல்லவா கைது செய்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிடும்.

(நா.தனுஜா)

உண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் என்றாலும் மக்களின் கண்கள் திறக்கும் என்று நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -22-இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன.

அரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டின் நிலை என்பன குறித்து சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

மற்றையவரைக் கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் கூட, தற்போது அதன் அரசியல் பழிவாங்கல்களால் பெரிதும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.

உண்மையில் கடந்த 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க லக்ஷ்மன் கதிர்காமரையே பிரதமராக நியமிப்பதற்குத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அவர் வேறொரு இனத்தவர் என்பதால் சம்பிக்க ரணவக்க தலைமையிலானோரே மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்குவதற்கு முன்நின்று செயற்பட்டனர். அதேபோன்று 'மஹிந்த சிந்தனை' என்ற புத்தகமும் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது. மஹிந்தவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த மிகச்சொற்பமான கற்றறிந்தவர்களில் சம்பிக்கவும் ஒருவர்.

எனவே அரசியலைப் பொறுத்தவரை அவர் எதிர்காலத்தில் முக்கியத்துவமிக்க இடமொன்றை அடைவார் என்று தற்போதே ஆளுந்தரப்பு அச்சமடைந்திருக்கிறது.

மேலும் வழமையாக தேர்தல் மேடைகளில் அவர்கள் யுத்தம் தொடர்பிலும், பொருட்களின் விலையதிகரிப்பு குறித்துமே பேசுவார்கள்.

எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொருட்களின் விலையதிகரிப்பு குறித்துப் பேசுவதற்கு எதுவுமிருக்கவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் பற்றிப் பேசினார்கள்.

ரிஷாட் பதியுதீன் வில்பத்து வனத்தை அழிப்பதாகவும், ரவூப் ஹக்கீம் மற்றும் ஷாபி தொடர்பாகவும் பேசினார்கள். எனின் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்களையல்லவா கைது செய்ய வேண்டும்? ஏன் அவ்வாறு செய்யவில்லை? ஏனெனில் அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிடும். மாறாக அரசாங்கத்திற்கு எதிராக வலுவான கருத்துக்களை முன்வைக்கும் சம்பிக்கவும், ராஜிதவும் இலக்குவைக்கப்பட்டார்கள்.

அடுத்ததாக அரசியல் மேடைகளில் வாத, விவாதங்கள் மற்றும் காரசாரமான பேச்சுக்கள் என்பவை மிகவும் சகஜமானவையாகும். கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து பல்வேறு மிகமோசமான கருத்துக்கள் கூறப்பப்பட்டன.

ஆனால் அவர் ஜனாதிபதியானதும் அதற்காக பழிவாங்கல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அதேபோன்று தற்போதைய ஆளுந்தரப்பினரால் தேர்தல் பிரசாரங்களின் போது மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை குறித்து பல்வேறு போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஒருவருடைய கருத்துக்களுக்காக நடவடிக்கை எடுப்பது என்றால் இவ்விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் எமது அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது அரச வைத்திய அதிகாரிகள், புகையிரத ஊழியர்கள், பஸ்சேவை ஊழியர்கள் என அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

 தற்போதும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இதிலிருந்து இவர்களுடைய போராட்டங்களின் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

ஹிருனிகாவின் உளவியல் அடுத்து கைதுசெய்யப்பட வேண்டியவர்களது பட்டியலை ஆளும் கட்சிக்கு முன்வைப்பதுபோல் உள்ளது.
இப்போது விளங்குகின்றதா உங்களது தோல்விக்கான காரணங்கள்?

Mr lafir ajan nega pariya puthisali ponga?

உண்மைதான்....

Post a Comment