Header Ads



ராஜித்தவை கைது செய்யவில்லை, CID இன்று நீதிமன்றுக்கு அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (27) இதனை அறிவித்துள்ளது.

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது மூன்றாவது சந்தேக நபர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (26) மாலை நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு  வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனையடுத்து, ராஜித்த சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 24 ஆம் திகதி மாலை பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நவம்பர் 10ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வௌ்ளை வேன் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்ததாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, நேற்று முன்தினம் (25) பிற்பகல் 1.15 மணியளவில் கொழும்பிலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் அங்கிருந்து வௌியேறிச் சென்றதுடன், அந்த சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்ன வீட்டில் இருக்கவில்லை என தகவல் வெளியானது.

அத்துடன், ராஜித சேனாரத்னவுக்கு சொந்தமான பேருவளை – ஹெட்டிமுல்ல பிரதேசத்திலுள்ள வீட்டையும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் (25) மாலை சோதனையிட்டுள்ளனர்.

இந்த சோதனையின்போது வீட்டிலிருந்த காவலாளியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீள அழைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில், மனுவொன்று நேற்று (26) தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.