Header Ads



தேர்தல் சட்டத்தில் திருத்தம் வருகிறது - ஜனாதிபதி தேர்தலில் கண்டபடி இனிமேல் போட்டியிட முடியாது

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானோர் போட்டியிட்டிருந்தனர். பிரதான வேட்பாளர்கள் மூவரை தவிர ஏனையவர்களால் 0.1 சதவீத வாக்குகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமற் போனதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள், நீதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று நீதி அமைச்சில் நடைபெற்றது. 

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசுகளை தயாரிக்குமாறு இதன்போது அமைச்சர் ஆலோசனை வழங்கினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் ஆணைக்குழுவும் பாரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. 

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான தடைகள் குறித்து ஆராய்ந்து விரைவில் தேர்தலை நடத்துவதற்கான சிபாரிசுகளை முன்மொழியுமாறும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு தபால் மூல வாக்கை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு தீர்வுகாணும் பொறிமுறைகளை ஆராயுமாறும் அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.