Header Ads



5 நாட்களாக குழந்தையின் உடலைப் அடக்கம் செய்ய முடியாத நிலையில் பெற்றோர்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் கடந்த 25ஆம் திகதி தாய்ப்பால் ஊட்டத் தயாரானபோது மரணித்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலம் 5 நாட்கள் கடந்த நிலையிலும் சட்ட வைத்திய பரிசோதனை நடாத்தப்படாமல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.

பாம் கொளனி மாங்கேணியைச் சேர்ந்த சவுந்தரி பாலசுந்தரம் தம்பதியினரின் ஒரு வயதான பாலசுந்தரம் ஷாலினி என்ற குழந்தைக்கே இக்கதி நேர்ந்துள்ளது.

இந்தக் குழந்தை கடந்த 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு உறங்கிய நிலையில் மரணித்திருந்தது.

தாய் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட தயாரானபோது குழந்தை உறக்கத்திலேயே சளி அடைத்த நிலையில் மரணித்திருந்ததாக குழந்தையின் தாயான கந்தையா சவுந்தரி தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே வாகரைப் பொலிஸாரின் உதவியுடன் மரணித்த குழந்தை மீட்கப்பட்டு சட்ட வைத்திய அதரிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டது.

ஆயினும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் கடமையில் இல்லாததால் குழந்தையின் உடற் கூறாய்வுப் பரிசோதனையை மேற்கொள்ள முடியாத நிலை அங்கு காணப்படுகிறது.

இதனால் நீதிபதியின் உத்தரவின் பேரில் திருகோணமலையிலுள்ள சட்ட வதை;திய அதிகாரியின் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை 29.12.2019 வரையில் குழந்தையின் இறப்பு பற்றிய உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் இடம்பெறவில்லை எனத் தெரியவருகின்றது.

இதனிடையே இக்குழந்தையின் பெற்றோர் அடிமட்ட வறுமை நிலையிலுள்ளவர்கள் என்பதால் குழந்தையை அரச செலவில் எங்காவது அடக்கம் செய்யுமாறு இரந்து நின்றதாக சடுதி மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

அவேளை, இறந்த குழந்தையை வாழைச்சேனை நீதிபதியின் உத்தரவுக்கமைய சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட வேண்டிய  உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக திருகோணமலைக்கு கொண்டு சென்றபோது அங்குள்ள வைத்தியசாலை நிருவாகத்திலுள்ள ஒரு சிலர், குழந்தையின் சடலத்தை மட்டக்களப்புக்கு சமீபத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை நகர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் ஏன் திருகோணமலைக்கு எடுத்து வந்தீர்கள் என கடிந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது நீதிபதியின் உத்தரவு என்றதும் அவர்கள் குழந்தையின் சடலத்தைப் பொறுப்பெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை கடமையிலிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரியான எஸ்.எம்.டி பிரசாதினி செனரத் எனும் வைத்தியர் கடந்த 15.12.2019 அன்று சட்ட வைத்தியத்துறை மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் நோக்கில் விலகிச் சென்றதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இல்லாத குறை நிலவி வருவதும் அதனால் சந்தேகத்திற்குரிய மரணங்கள் தொடர்பாக சட்ட வைத்திய விடயங்களைக் கையாள முடியாத நிலையில் உறவினர்கள் அலைக்கழிந்து திரிவதுமாக உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளிடையே மனிதாபிமான உணர்வுகள் மரணித்து விட்டதோ என எண்ணத் தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிடுகின்றனர்.

2 comments:

  1. Informed to our president.this the only way.

    ReplyDelete
  2. அஜன் எங்கப்பா நீ இப்படியான விடயங்கலை பற்றி வாய் திறக்கமாட்டீர்.ஆனால் Muslim கள் பற்றிய செய்தி வந்தால் போதும் உமது இனவாதத்தை கக்க ஆரம்பித்துவிடுவீர்.இப்படியான சமூகம் சார்ந்த விடயங்கல் வந்தால் எங்கயாவத் ஓடி ஒழிந்து விடுவீர்.

    ReplyDelete

Powered by Blogger.