Header Ads



என் சடலத்தின் மீதுதான், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தலாம் - மம்தா பானர்ஜி ஆவேசம்


குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றது.

`நான் உயிரோடு இருக்கும் வரை வங்காளத்தில் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன். அதையும் மீறி அமல்படுத்த வேண்டுமென்றால் என்னுடைய சடலத்தின் மீது அமல்படுத்துங்கள்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கூறியுள்ளார். குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே மம்தா தன்னுடைய எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன, ரயில்கள் கொளுத்தப்பட்டன. மாநிலத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கண்ட மம்தா, `மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது. அரசியலமைப்புக்கு எதிரான சட்டங்கள் இங்கு அனுமதிக்கப்பட மாட்டது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றது. மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பேரணியில் பேசிய மம்தா, ``நான் உயிரோடு இருக்கும் வரை வங்காளத்தில் குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டேன். என்னுடைய அரசை கலைக்க விரும்பினால் தாராளமாகச் செய்யுங்கள். மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த விரும்பினால் என்னுடைய சடலத்தைத் தாண்டிதான் அவர்களால் அதைச் செய்ய முடியும். நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன். தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராகத் தனியாகக் குரல் கொடுத்து வந்தோம். குடியுரிமைச் சட்டத்தை மற்ற மாநில முதல்வர்களும் எதிர்க்கின்றனர். இந்தச் சட்டத்தை எந்த மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

No comments

Powered by Blogger.